ரு திரைப்படத்தில் நீதிக்காக நீதிமன்றப் படிகளேறும் சாமானியனின் காட்சியைப் பார்த்தபோது மனதில் ஆழமான வலி ஏற்பட்டது. நிஜத்தில் அது அத்தனை எளிதல்ல. நூறு ரூபாய்க்கு வாங்கிய பொருளில் மோசடி நடந்தால், ஆயிரம் ரூபாய் செலவழித்து நீதி கேட்க எந்தச் சாமானியனும் துணிய மாட்டான். அந்தத் தயக்கத்தைத்தான் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றன கார்ப்பரேட் நிறுவனங்கள்.

எளிய மக்களுக்கு நீதி கிடைக்க உருவாக்கப்பட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள்தான் இன்று சாமானியனின் ஒரே புகலிடம். ஆனால், தமிழகத்தில் 32 ஆக உள்ள மாவட்ட நுகர்வோர் ஆணையங்களை 14 ஆக குறைக்கும் திட்டம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாகச் செலவுகளைக் குறைப்பதாகவும், வழக்குகளின் அடிப்படையில் நீதிமன்றங்களை அமைப்பதாகவும் கூறி, நீதி கேட்கும் கதவுகளையே அடைப்பது என்ன வகையான நியாயம்?

ஒரு சிறு குறைபாட்டுக்காகப் பெருநிறுவனத்தை எதிர்த்து வழக்குத் தொடரும் சாதாரண மனிதனை நினைத்துப் பாருங்கள். நுகர்வோர் நீதிமன்றங்களில் ஏற்கனவே வழக்குகளின் எண்ணிக்கை அதிகம், தீர்ப்பு வர பல ஆண்டுகள் ஆகின்றன. இப்போது, திருநெல்வேலியிலோ, தென்காசியிலோ, தூத்துக்குடியிலோ உள்ள ஒரு நுகர்வோர், தனது வழக்குக்காக வேறு மாவட்டங்களுக்குத் தொலைதூரம் அலைந்து திரிய முடியுமா? பேருந்துக்காகக் காத்திருந்து, நீதிமன்றத்தில் நாள் முழுவதும் கால் கடுக்க நின்று, இறுதியில் அலைச்சலும் விரக்தியும் அடைந்து, தானந்தனியாக அவன் கண்ணீர் வடித்து வழக்கை நடத்தும் எண்ணத்தைக் கைவிடும்பொழுதுதான் பெருநிறுவனங்கள் தங்களின் வெற்றியைக் கொண்டாடுகின்றன. இது அப்பட்டமாக கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாடு என வழக்கறிஞர்களும் கொதிக்கின்றனர்.

"வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் நோக்கத்தை முன்னிறுத்திவிட்டு, பல மாவட்ட வழக்குகளை ஒரே இடத்தில் கொண்டு வந்து குவித்தால் நீதி எப்படித் துரிதப்படுத்தப்படும்?"
நீதி தாமதப்படுத்தப்படுவது, நீதி மறுக்கப்படுவதற்குச் சமம். எளிய மக்களின் கடைசி ஆயுதமான நுகர்வோர் நீதிமன்றங்களை முடக்கும் இந்தச் செயலை நாம் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியுமா?