திருப்பத்தூர் / சென்னை
16 ஆண்டுகால காத்திருப்பு... 183 பேரின் எதிர்காலத்தை சிதைக்கும் புதிய இணையதளம்?
முதலமைச்சரின் மனிதநேயத்தை எதிர்நோக்கி கண்ணீருடன் காத்திருக்கும் வாரிசுதாரர்கள்!

ஒரு மனிதனின் வாழ்நாளில் 16 ஆண்டுகள் என்பது சாதாரணமானதல்ல. தன் வாழ்நாளின் மிகச் சிறந்த இளமைக் காலத்தை போலீஸ் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக அர்ப்பணித்துவிட்டு, என்றாவது ஒருநாள் பதவி உயர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் அந்த 183 வாரிசுதாரர்களின் வலியை அவ்வளவு எளிதாக நம்மால் கடந்து செல்ல முடியுமா?

கருணை அடிப்படையிலான பணி நியமனங்களுக்காக தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய இணையதளம் (CAWP) பலருக்கு வழிகாட்ட உருவாக்கப்பட்ட ஒரு சலுகையாக அரசு முன்வைக்கிறது. ஆனால், கடந்த 10 முதல் 16 ஆண்டுகளாக டிஇஓ, டிஇஏ மற்றும் பிஎஸ்ஆர் போன்ற பதவிகளில் பணியாற்றும் இந்த கணினி விபர பதிவாளர்களின் உழைப்பை உறிஞ்சி, அவர்களின் எதிர்காலத்தை அழிக்கும் ஆயுதமாக அது மாறியிருப்பதுதான் மிகப்பெரிய முரண். கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி அரசாணை எண் 63ன் மூலம் அரசு அறிமுகப்படுத்திய இந்த புதிய முறையால், முன்னுரிமைப் பட்டியல் தயாரித்து நேரடியாக காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. இது, பல ஆண்டுகளாக இதே பணிக்காக காத்திருக்கும் பணியாளர்களின் பதவி உயர்வு கனவை முற்றிலுமாக சிதைத்து விட்டது.

இதற்கு தீர்வு காணும் வகையில்தான் கடந்த 13ம் தேதி திருப்பத்தூரில் நடந்த தமிழ்நாடு போலீஸ் அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் அவசரக் கூட்டத்தில் ஊழியர்கள் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர். ஏற்கனவே அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பின்பே, புதிய இணையதளம் மூலம் நேரடியாக புதிய நபர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தங்களின் கோரிக்கையை ஆழமாக பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஜூலை 17ம் தேதி முதலமைச்சருக்கு இவர்கள் அளித்த உருக்கமான மனு, வெறும் காகித நிர்வாகக் கோரிக்கையல்ல; தங்களின் இழந்த உரிமைகளை மீட்கவும், வாழ்வாதாரத்தை காக்கக் கோரியும் தானந்தனியாக அவர்கள் வடித்த கண்ணீரின் சாட்சி. அரசாணை 220ன்படி 2016ம் ஆண்டு முதலே இவர்களுக்கு ரூ. 2,400 தர ஊதியம் அரசு வழங்குகிறது. தற்போது கோரும் இளநிலை உதவியாளர் பதவிக்கும் அதே ஊதியம்தான் என்பதால், சட்டமன்றப் பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டால் அரசிற்கு எவ்வித கூடுதல் நிதிச்சுமையும் ஏற்படப் போவதில்லை. மனிதநேய அடிப்படையில் இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி அரசு இவர்களின் கண்ணீரைத் துடைக்க முன்வருமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.