உலகத்தையே உள்ளங்கையில் சுருக்கிவிட்டோம் என்று விளம்பரங்கள் தம்பட்டம் அடிக்கின்றன; ஆனால், அதே உள்ளங்கையில் உள்ள ஒரு சிறிய திரைக்குப் பின்னால், ஒரு சாமானியனின் மொத்த வாழ்நாள் உழைப்பையும் வேரோடு பிடுங்கி எறியும் சைபர் அரக்கன் காத்துக்கிடக்கிறான்.
தொழில்நுட்பம் நமது நேரத்தை மிச்சப்படுத்தும் சலுகை என்றுதான் நம்மில் பலரும் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது உழைப்பவர்களின் ரத்தத்தை அப்பட்டமாகச் சுரண்டித் தின்னும் டிஜிட்டல் ஆயுதமாக மாறிவிட்ட முரணை என்னவென்று சொல்வது? குடும்பத்தை கரையேற்ற ஆன்லைனில் கடன் கிடைக்கும் என நம்பிச் சென்ற தொழிலாளி இழந்தது சிறு தொகையல்ல... வியர்வை சிந்தி, தன் உடல் உழைப்பைக் கொடுத்து அவர் சேர்த்த ரூ.4 லட்சத்து 43 ஆயிரம்! போக்குவரத்து விதிமீறல் அபராதம் எனத் திரையில் மினுமினுத்த ஒரு சாதாரண குறுஞ்செய்தியைத் தொட்டதால், மின்வாரிய ஊழியர் பறிகொடுத்தது ரூ.4 லட்சத்து 43 ஆயிரம். அந்த ரூ.4 லட்சத்து 53 ஆயிரம் என்பது வாழ்வாதாரச் சேமிப்பு.
பங்குகள் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திவிடலாம் என்ற கனவில் ஆன்லைன் டிரேடிங்கில் தங்களின் வாழ்நாளைத் தொலைத்தவர்கள் இழந்ததோ ரூ.3.40 லட்சம் முதல் 30 லட்சத்திற்கும் அதிகமான தொகை. இதுமட்டுமா? கடையை விரிவுபடுத்த ரசாயனம் வாங்க ஆசைப்பட்ட கடை உரிமையாளர் ரூ.1.43 லட்சத்தையும், குறைந்த விலைக்கு கார் விற்கிறார் என்ற பேஸ்புக் விளம்பரத்தை நம்பிய ரியல் எஸ்டேட் அதிபர் ரூ.1.49 லட்சத்தையும் இழந்து நிற்கிறார்கள்.
அனைத்தும் சிறுகச் சிறுகச் சேமித்த ரத்தமும் வியர்வையுமான துளிகள். எந்தவித ஆயுதமும் இன்றி, எந்த வன்முறையும் இன்றி, முகமே தெரியாத மர்ம நபர்களால் நம் மாவட்டத்தின் பல பகுதிகளில் லட்சக்கணக்கான ரூபாய்கள் மிக எளிதாகக் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன.
நள்ளிரவில் தானந்தனியாக அறையில் அமர்ந்து, மாயமாக மறைந்த தனது வங்கி இருப்பை கைபேசி திரையில் பார்த்து இவர்கள் ஒவ்வொருவரும் சிந்திய கண்ணீரை, நாம் எப்படி சாதாரணமாக கடந்து செல்ல முடியும்? யாருக்கும் தெரியாத, எங்கு இருக்கிறான் என்றே புரியாத ஒரு டிஜிட்டல் திருடனிடம், நமக்கே தெரியாமல் நமது உழைப்பை ஏன் பலிகடாவாக்குகிறோம்?
"பாதுகாப்பான உலகம்" என்று நாம் நம்பிக்கொண்டிருக்கும் இந்த நவீன யுகம், உண்மையில் நம்மைச் சுற்றியே பின்னப்பட்ட ஒரு இருட்டறை வலை. இங்கு எல்லாமே மாயம். வலையில் சிக்கிய பிறகு வெற்றுத் திரையைப் பார்த்து கதறி அழுவதை விட, அந்த மாய வலையை அடையாளம் காண நாம் என்றைக்குப் பழகப் போகிறோம்?