சமீபத்தில் பேருந்து நிறுத்தத்தில் ஒரு காட்சியைப் பார்க்க நேர்ந்தது. கையில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டையுடன், சோர்வடைந்த முகத்தோடு பேருந்துக்காகக் காத்திருந்தான் ஒரு பட்டதாரி இளைஞன். அவனது அந்த ஏமாற்றம் தோய்ந்த கண்களை உற்று நோக்கியபோது, எனக்குள் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது. அவனுக்கான, அவனைப் போன்ற லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக வடமாநிலத்தவர்களால் விழுங்கப்பட்டு வரும் அபாயம் கண்முன்னே விரிந்தது.
குறைந்த கூலிக்கு அதிக நேரம் வேலை வாங்கலாம் என்ற கார்ப்பரேட் லாப நோக்கத்திற்காக, தனியார் ஆலைகள், கட்டுமானப் பணிகள், உணவகங்கள் என அனைத்திலும் வடமாநிலத் தொழிலாளர்களின் ஆதிக்கம் வரலாறு காணாத வகையில் அதிகரித்துவிட்டது. சரி, இது தனியார் நிறுவனங்களின் சுரண்டல் தந்திரம் என்று மனதை தேற்றிக்கொண்டிருந்த வேளையில், இப்போது பொதுத்துறை நிறுவனங்களிலும் கொல்லைப்புற வழியாக இந்த ஆக்கிரமிப்பு ஊடுருவத் தொடங்கியிருப்பது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 'என்.வி.எஸ். என்டர்பிரைசஸ்' என்ற மாநிலத்தைச் சேர்ந்த தனியார் ஏஜென்சி மூலம் ரூ.61.56 கோடி மதிப்பில் 1,797 கண்டக்டர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. அடையாறு மண்டலத்தில் 350 பேர், குரோம்பேட்டையில் 320 பேர், வடபழனியில் 295 பேர், அயனாவரத்தில் 256 பேர் என தலைநகரின் முக்கிய பணிமனைகளில் வடமாநிலத் தொழிலாளர்களைக் கொண்டுவந்து இறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதைச் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியுமா? மக்களோடு மக்களாகப் பழகி, உள்ளூர் மொழி, பேருந்து நிறுத்தங்கள் மற்றும் வழித்தடங்களை அறிந்து செயல்பட வேண்டிய பொதுப் போக்குவரத்து சேவையில், தமிழ் தெரியாத வடமாநிலத்தவர்களை எப்படிப் பணியமர்த்த முடியும்?. தினசரி பேருந்தை நம்பியிருக்கும் முதியவர்கள், பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இது எப்பேர்ப்பட்ட தகவல் தொடர்பு முரண்பாட்டையும், சிரமத்தையும் உருவாக்கும்?.
தமிழகத்தில் மட்டுமே தற்போது சுமார் 30 ஆயிரம் கண்டக்டர், டிரைவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறைந்த சம்பளத்தில் ஆட்களைப் போட்டு கொள்ளை லாபம் ஈட்டலாம் என்கிற வித்தையை தமிழக அரசே தலைநகரில் செயல்படுத்துவது நியாயமா?. தனியார் ஏஜென்சி மூலம் குறைந்த ஊதியம் கொடுத்துவிட்டு, பஸ் கலெக்ஷனை மட்டும் பணிமனைகளில் ஒப்படைக்கச் சொல்வது வருவாய் லீக்கேஜை தடுக்கலாம். ஆனால், சமூக நீதியின் அடித்தளமான இடஒதுக்கீட்டுக் கொள்கையையும் இது முற்றிலும் குழிதோண்டிப் புதைக்காதா?.
பிற மாநிலங்கள் தங்களது உள்ளூர் இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கச் சிறப்புச் சட்டங்களையும் கொள்கைகளையும் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. ஆனால், நாமோ சொந்த மண்ணிலேயே வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். தமிழகத்திலும் அரசுப் பணிகள் மட்டுமின்றி அனைத்துத் தனியார் நிறுவனப் பணிகளிலும் உள்ளூர் தமிழர்களுக்கே 80 சதவீதத்திற்கும் அதிகமான முன்னுரிமை வழங்கப்படுவதைச் சட்டம் மூலம் அரசு உறுதி செய்ய வேண்டும்.
இல்லையென்றால், அந்தப் பேருந்து நிறுத்தத்தில் தானந்தனியாக, கவலையோடு நின்றுகொண்டிருந்த பட்டதாரி இளைஞனின் மௌனக் கண்ணீர், நாளைய தமிழகத்தின் அழுகுரலாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் போர்க்கால அடிப்படையில் இதற்கான தீர்க்கமான கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.