காலை கண் விழித்ததும் கைபேசி திரையை பார்த்தபோது,  ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கம் வகித்த குழுவில் ஒருவர் அனுப்பியிருந்த வாட்ஸ்அப் மெசேஜ் ஒன்று மின்னியது. கூகுள் பே நிறுவனம் தனது 9வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறதாம், அதற்காக வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக ரூ.6 ஆயிரம் பரிசாக தருகிறதாம். சாதாரணமாக தெருமுனையில் ஒரு டீ குடிக்கவே பலமுறை யோசித்து செலவழிக்கும் மனிதர்கள், எந்த உழைப்பும் இல்லாமல் ரூ.6 ஆயிரம் இலவசமாக கிடைக்கும் என்றவுடன், ஒரு நிமிடம் கூட சிந்திக்காமல் அந்த மெசேஜில் உள்ள நீல நிற லிங்க்கை அவசர அவசரமாக கிளிக் செய்கிறார்கள். வியர்வை சிந்தி, ரத்தம் சுண்டி மாதம் முழுவதும் உழைத்தாலும் கையில் நிற்காத ஒரு தொகையை, யாரோ முகம் தெரியாத ஒருவன் வெறும் வாட்ஸ்அப் லிங்க்கை தொட்டவுடன் தந்துவிடுவான் என்று எப்படி நம்புகிறார்கள்? 

நெல்லை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இந்த கவர்ச்சிகரமான மெசேஜ் காட்டுத்தீ போல பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களில் பரவி வருகிறது. அந்த மர்ம லிங்க்கை தொட்ட மறுகணமே, அது அதிகாரப்பூர்வ கூகுள் பே பக்கத்திற்கு பதிலாக, மோசடி கும்பல் உருவாக்கியுள்ள ஆபத்தான இணையதளத்திற்குள் மக்களை அழைத்துச் செல்கிறது. அங்கு வங்கி கணக்கு விவரங்களையும், யுபிஐ ரகசிய குறியீடுகளையும் கேட்கிறார்கள். சில நேரங்களில் அந்த லிங்க்கை கிளிக் செய்தாலே, நமது கைகளில் இருக்கும் செல்போன் நமது கட்டுப்பாட்டை இழந்து, ஆபத்தான செயலிகள் தானாகவே இன்ஸ்டால் ஆகிவிடுகின்றன. சிறுகச் சிறுக கஷ்டப்பட்டு வங்கியில் சேர்த்த பணம் நொடிப்பொழுதில் காணாமல் போன பிறகு, தொலைத்த பணத்தை மீட்க முடியாமல் தானந்தனியாக நின்று கண்ணீர் வடிக்கிறார்கள். இந்த நூதன மோசடியின் தீவிரத்தை உணர்ந்த நெல்லை சைபர் கிரைம் போலீசார் தற்போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் இதுபோன்ற கவர்ச்சி மெசேஜ்களை உடனடியாக டெலீட் செய்ய வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர். நமக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள் அனுப்பினார்கள் என்பதற்காக, அதன் உண்மைத்தன்மை என்னவென்றே தெரியாமல் நாமும் மற்றவர்களுக்கு அதனை பார்வர்டு செய்து பலரது உழைப்பு திருடப்படுவதற்கு காரணமாகிறோம். கூகுள் பே நிறுவனம் வாட்ஸ்அப் மூலமாக இதுபோன்ற எந்த பரிசுத் தொகையையும் அறிவிக்கவில்லை என்பதை நாம் உணர வேண்டும். இலவசமாக ஏதோ ஒன்று ஆன்லைனில் கிடைக்கிறது என்றால், அங்கே நாம் தான் விலைபொருளாக இருக்கிறோம் என்பதை நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்?