இப்போதெல்லாம் எதைச் சாப்பிடுவது, எங்குச் சாப்பிடுவது என்பதை நாக்கு முடிவு செய்வதில்லை. யூடியூபர்கள்தான் முடிவு செய்கிறார்கள். அப்படி ஒரு யூடியூபரின் வர்ணனையைக் கேட்டு, நெல்லையில் உள்ள ஓர் அசைவ உணவகத்திற்கு சாப்பிடச் சென்றார் என் நண்பரும், புதிய தலைமுறை செய்தியாளருமான மருது.

அங்கே அவருக்குக் காத்திருந்தது பெரும் அதிர்ச்சி. யூடியூபரின் பேச்சிற்கும் அங்கு பரிமாறப்பட்ட உணவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மிகவும் மோசமான அனுபவத்தைச் சந்தித்த மருது, ஒரு சாதாரண வாடிக்கையாளரைப் போல அதனை அமைதியாகக் கடந்து செல்லவில்லை.
மக்களின் உடல்நலத்தோடு விளையாடும் இது போன்ற உணவகங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவெடுத்தார். உடனடியாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றார்.
அதிகாரிகளும் விரைந்து வந்து அந்த உணவகத்தில் அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போதுதான் அந்த உணவகம் உரிய உரிமம் இன்றி செயல்பட்டதும், பழைய உணவுகளைப் பரிமாறியதும் வெளிச்சத்திற்கு வந்தது. உடனடியாக அந்தக் கடைக்கு சீல் வைத்து, 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிகாரிகள் அதிரடி காட்டினர். சுகாதாரமற்ற ஓர் உணவகம் மூடப்பட்டதற்கு மருதுவின் இந்த உடனடி நடவடிக்கையே முக்கியக் காரணம்.

சுற்றியிருக்கும் நிகழ்வுகளைக் கவனித்து, செய்திகளைச் சேகரித்து, அதை வெறும் செய்தியாக்குவது மட்டும்தான் ஒரு ஊடகவியலாளரின் பணி எனப் பலர் நினைக்கலாம். ஆனால், மக்கள் பிரச்சனை என வரும்போது, உடனடியாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்து அதிரடியாகக் களப்பணி ஆற்றுவதுதான் உண்மையான ஜெர்னலிசம். அதைச் சிறப்பாகச் செய்த என் அன்பு நண்பர் மருதுக்கு மனமார்ந்த பாராட்டுகள்!