நெல்லையின் பரபரப்பான செய்திகளின் பிறப்பிடம் நெல்லை மாவட்ட நீதிமன்றம். நியாயத்துக்காகப் போராடும் பலரது முகம், பரபரப்பு ஏற்படுத்தும் முக்கியத் தீர்ப்புகள் என தினசரி ஏதாவது செய்திகள் எனக்கு வந்து கொண்டிருக்கும் இடம் அது.
வழக்கம் போல் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் என்ன வழக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது எனத் தேடியபோதுதான் இந்த இரண்டு செய்திகள் குறித்த தகவல்கள் கிடைத்தன. இன்றைக்கு நுகர்வோர்களை வெறும் சந்தைப் பொருளாக மட்டுமே பாவிக்கும் மனநிலைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்துவிட்டன. அவர்களுக்கு நுகர்வோர்களின் உரிமைகள் மீது சிறிதளவும் மதிப்பு கிடையாது.

 இப்படிப்பட்ட சூழ்நிலையில், சாமானியர்களுக்கு அரணாக விளங்கும் நுகர்வோர் குறைதீர் ஆணையங்களின் செயல்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
நெல்லை பெருமாள்புரம் அன்பு நகரைச் சேர்ந்த மரிய தேன்மொழி என்ற ஓய்வுபெற்ற ஆசிரியை சந்தித்த நெருக்கடி இதற்கு ஒரு சிறந்த உதாரணம். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், திருவனந்தபுரத்திலும் பின்னர் நெல்லையிலும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். அதற்காக சுமார் 4 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவு செய்தார். ஆபத்தான அந்த நேரத்தில் உதவியாக இருக்கும் என நம்பி அவர் எடுத்திருந்த மருத்துவக் காப்பீட்டுத் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கேட்டார். ஆனால், அந்த நிறுவனமோ இது அவசர சிகிச்சை இல்லை என்றும், அங்கீகரிக்கப்படாத மருத்துவமனை என்றும் கூறி மிகச் சாதாரணமாக இழப்பீடு தர மறுத்துவிட்டது.
புற்றுநோயின் வலியை விட, காப்பீட்டு நிறுவனத்தின் இந்த ஏமாற்று வேலை அவருக்குப் பெருத்த மன உளைச்சலைத் தந்தது. ஆனாலும் அவர் சளைக்கவில்லை. நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஆணையம், அந்தத் தொகையை 9 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிட்டது. ஆனால், பண பலம் கொண்ட அந்த நிறுவனம் நீதிமன்ற உத்தரவையே மதிக்காமல் அலட்சியம் காட்டியது. இதையடுத்து மரிய தேன்மொழி தரப்பில் வழக்கறிஞர் பிரம்மா மூலம் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த முறை வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையத் தலைவர் பிளசட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர், நீதிமன்ற உத்தரவை மதிக்காத அந்த இன்சூரன்ஸ் நிறுவனத்தின் டிவிஷனல் மேனேஜருக்குப் பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடி காட்டினர்.
இதேபோல்தான் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அபினி கிரேஸ் என்ற பெண்ணுக்கும் நேர்ந்துள்ளது. தனது வீட்டை அழகுபடுத்த நினைத்த அவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் ஒரு தனியார் இன்டீரியர் நிறுவனத்தை அணுகினார். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சபரி ஜெயராஜ் கேட்டபடி, பணிகளுக்காக 2 லட்சத்து 85 ஆயிரத்து 500 ரூபாயை வங்கி மூலம் முன்கூட்டியே வழங்கினார். ஆனால், பணத்தைப் பெற்ற நிறுவனம் எந்த வேலையும் செய்யாமல் நாட்களைக் கடத்தி ஏமாற்றியது. பொறுமையிழந்த அவர் நெல்லை போலீசாரிடம் புகார் அளித்தார். விசாரணையின்போது 10 நாட்களில் வேலையை முடிப்பதாக எழுதிக் கொடுத்துவிட்டு மீண்டும் அவர்கள் மோசடி செய்தனர்.
இந்த நிலையில்தான் அவர் நுகர்வோர் ஆணையத்தை நாடினார். இந்த வழக்கை விசாரித்த ஆணையம், ஏமாற்றிய அந்த நிறுவனம் வாங்கிய முழுத் தொகையையும் 6.5 சதவீத வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 75 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், வழக்குச் செலவாக 15 ஆயிரம் ரூபாயும் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என அதிரடி தீர்ப்பு வழங்கியது.
காப்பீடு என்ற பெயரிலும்,

 கவர்ச்சிகரமான சேவை என்ற பெயரிலும் நுகர்வோரை ஏமாற்ற நினைக்கும் நிறுவனங்களுக்கு இந்த இரண்டு தீர்ப்புகளும் சவுக்கடி. நாம் ஏமாற்றப்படும்போது சலித்துக்கொண்டு அமைதியாகக் கடந்து செல்வதைத்தான் இந்த நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால், தகுந்த ஆவணங்களுடன் நியாயத்திற்காகப் போராடினால், வெற்றி நிச்சயம் என்பதை இந்தத் தீர்ப்புகள் ஆணித்தரமாக உணர்த்துகின்றன.