அன்று காலை வழக்கம்போல் நெல்லை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியிருந்தது. நான் சாலையோரக் கடை ஒன்றில் நின்றபடி டீ குடித்துக் கொண்டிருந்தேன். அப்போது போலீஸ் நிலைய வட்டாரத்தில் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. முக்கூடல் பகுதியைச் சேர்ந்த ஒருவனை பைக் திருட்டு வழக்கில் போலீசார் பிடித்துள்ளதாகவும், அவன் கழிப்பறையில் வழுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவுடன் மருத்துவமனையில் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது.
உடனே எனது கேனான் 1500டி கேமராவை எடுத்துக்கொண்டு சுத்தமல்லி போலீஸ் நிலையத்திற்கு சென்றேன். அங்கு பணியில் இருந்த எஸ்ஐயிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டேன். பைக் திருட்டு வழக்கில் செல்வ பாபு என்பவனை பிடித்து விசாரணை நடத்தியதாக அவர் கூறினார். பின்னர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த அந்த வாலிபரின் காலில் மாவுக்கட்டு போடப்பட்டிருந்தது. அலுவலகம் திரும்பிய நான், இந்த சம்பவத்தை செய்தியாக எழுதத் தொடங்கினேன்.