டிவிக்காரர்கள் 'பரபரப்பு', 'பகீர்' என்று நாலு வார்த்தையைத் திரையில் ஓடவிட்டு அடுத்த பிரேக்கிங்கைத் தேடிப் போய்விடுவார்கள். ஆனால், பிரிண்ட் மீடியாக்காரர்கள் அப்படித் தப்பிக்க முடியாது. சம்பவம் எப்படி நடந்தது, பின்னணி என்ன, போலீஸ் என்ன வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள் என்று அக்குவேறு ஆணிவேராக அலச வேண்டும்.
இல்லையென்றால் ஆபீஸில் ஏசி அறையில் உட்கார்ந்திருக்கும் டெஸ்க் ஆசாமிகள், 'இந்த பாயிண்ட் மிஸ்ஸிங், அந்த டேட்டா எங்கே?' என்று நம்மை செக்போஸ்ட் போட்டு நிறுத்துவார்கள்.

மைக்கை நீட்டிவிட்டு 'ஆக்‌ஷன்' காட்டுவது வேறு, அத்தனை தகவல்களையும் திரட்டி, வாசிப்பவர்களுக்குச் சுவாரஸ்யம் குறையாமல் எழுத்தில் வடித்து 'ரியாக்‌ஷன்' வாங்குவது வேறு. இதற்கு நடுவில் இந்தக் கோடை வெயில் நம்மை வறுத்தெடுத்து விடுகிறது. டூவீலரில் ஊர் சுற்றி, வியர்வையில் நனைந்து, பெட்ரோல் விலையை நினைத்துப் பெருமூச்சு விட்டு, ஒரு செய்தியை முழுமையாகக் கோர்வையாக எழுதி முடிப்பதற்குள் நமக்கே செய்தி அஞ்சலி போடும் நிலைமை வந்துவிடுகிறது!
அதனால், டிவியில் ஸ்க்ரோலிங் ஓடுவதைப் பார்த்துவிட்டு, 'இன்னும் நீங்க நியூஸ் அனுப்பலையே' என்று கேட்கும் அலுவலகப் புண்ணியவான்களே... தயவுசெய்து கொஞ்சம் கருணை காட்டுங்கள். பிரிண்ட் மீடியா நிருபர்களின் பேனா மை, இந்த வெயிலில் அவர்களின் வியர்வையோடு சேர்ந்தே ஊறிக்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இனிமேல், ஊரைக் கூட்டும் பெரிய சம்பவங்கள் என்றால் மட்டுமே களத்தில் இறங்குவது, மற்றபடி 'ஸ்மார்ட் ஒர்க்' செய்வதே உடம்புக்கும், பாக்கெட்டுக்கும், மனதுக்கும் நல்லது! 

அப்படியே எங்களை வெளியே கூப்பிடும் நண்பர்களும், பிரிண்ட் மீடியாக்காரர்களின் பாட்டைப் புரிந்து கொண்டு நல்ல நிழலான இடமாகப் பார்த்து வரச் சொல்லுங்கள்!