நெல்லை போன்ற ஊர்களில் மாவட்ட நிருபராகப் பணியாற்றுவது என்பது எப்போதுமே ஒரு சவாலான பயணம்தான். சில நேரங்களில் ஒரே மாதிரியான சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து நம்மைத் திணறடிப்பதுண்டு. நெல்லை ஒரு வித்தியாசமான ஊர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. விபத்துகள் நடந்தால் மிகக் கொடூரமான விபத்துகள் அடுத்தடுத்த நாட்களிலோ அல்லது ஒரே நாளிலோ நடக்கும்.

 கொலைச் சம்பவங்களும் இப்படியே தொடர்ச்சியாக அரங்கேறுவதை இந்த ஊரில் நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். அந்த வரிசையில் நேற்றைய தினம் எனக்கு 'நில மோசடிகளின் நாள்' என்றே தோன்றுகிறது.

நேற்று செய்திகளைச் சேகரிக்கச் சென்றபோது, மாநகர குற்றப்பிரிவு போலீசார் இரண்டு பெரிய நில மோசடி வழக்குகளைக் கையாள்வதைப் பார்க்க முடிந்தது. ஆச்சரியம் என்னவென்றால், இரண்டு சம்பவங்களுமே மேலப்பாளையம் சார்பதிவாளர் அலுவலக எல்லையில்தான் நடந்துள்ளன. முதல் சம்பவத்தில், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டரின் முத்திரையையே போலியாகப் பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடியை அரங்கேற்றியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த இருவர் உயிருடன் இருப்பதாக, டாக்டரின் கையொப்பம் மற்றும் அதிகாரப்பூர்வ முத்திரையைப் போலியாகத் தயாரித்து, போலி உயிர்வாழ் சான்றிதழ் கொடுத்து மேலப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நிலத்துக்கான பவர் ஆப் அட்டார்னி பத்திரப்பதிவைச் செய்துள்ளனர்.

இதேபோல, இன்னொரு சம்பவமும் அதே மேலப்பாளையம் பகுதியில்தான் நடந்துள்ளது. மும்பையில் வசிக்கும் லட்சுமி என்ற பெண்ணுக்குச் சொந்தமான குலவணிகர்புரம் ஸ்ரீராம் நகரில் உள்ள ரூ.30 லட்சம் மதிப்பிலான வீட்டு மனையை, போலி ஆவணங்கள் மூலம் வேறு ஒருவருக்கு விற்று சிலர் மோசடி செய்துள்ளனர். தற்பொழுது இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் காயத்ரி தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஒரே நாளில், அடுத்தடுத்து இரண்டு பெரிய நில மோசடி சம்பவங்கள் செய்தியாக வந்திருப்பது நெல்லையின் அந்த 'தொடர் சம்பவங்கள்' சுபாவத்தை எனக்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்டியது. ஒவ்வொரு நாளும் களத்தில் இறங்கிச் செய்திகளைத் தேடும் நிருபர்களுக்கு, நெல்லை எப்போதுமே புதுப்புது ஆச்சரியங்களையும், அதிர்ச்சிகளையும் தந்துகொண்டே இருக்கிறது.