தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கை நாட்டுக்கு படகு மூலம் கடத்த முயன்ற 30 லட்ச ரூபாய் மதிப்பிலான பப்பாளி வாசனை சோப்புகள் மற்றும் ஷாம்புகளை கியூ பிரிவு போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி வடக்கு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் இருந்து இலங்கை நாட்டுக்கு பொருட்கள் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய் அனிதாவுக்கு கிடைத்த இந்த தகவலை அடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் இறங்கினர். நேற்று (புதன்கிழமை) நள்ளிரவில் திரேஸ்புரம் கடற்கரையின் வடபுறம் உள்ள வாடை பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு ஒரு பைபர் படகு நின்றது. அதில் பதிவெண் எதுவும் இல்லை. இரண்டு எஞ்சின்கள் பொருத்தப்பட்ட அந்தப் படகில் மர்ம நபர்கள் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். ரோந்து வந்த போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து இருளில் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் அந்தப் படகையும் அதிலிருந்த மூட்டைகளையும் சோதனையிட்டனர்.
சுமார் 158 பெட்டிகளில் மொத்தம் ஒன்பதாயிரத்து 480 பப்பாளி வாசனை சோப்புகளும், 11 ஆயிரத்து 520 ஷாம்புகளும் அதில் இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 30 லட்ச ரூபாய் ஆகும். இலங்கை நாட்டுக்கு கடத்துவதற்காக இந்த பொருட்களை மர்ம நபர்கள் பதுக்கி வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பைபர் படகுடன் கடத்தல் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த அதிரடி வேட்டையில் எஸ்ஐ ராமச்சந்திரன், சிறப்பு எஸ்ஐ ராமர் மற்றும் போலீஸ்காரர்கள் இருதய ராஜ்குமார், இசக்கிமுத்து, பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் ஈடுபட்டனர். தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.