தென் தமிழகத்தின் ஆக்ஸ்போர்டு என்று சொல்லப்படும் பாளையங்கோட்டை வருடா வருடம் பட்டதாரிகளை உருவாக்கி, சென்னைக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கும்.

அப்படி வந்தவர்கள் பலர், தன்னால் வாழ முடியவில்லையென்றாலும் சென்னையில் இருக்கும் பத்துக்கு பத்து 'ரூம்' உரிமையாளர்களை வாழவைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏக்கர் கணக்கில் நஞ்சை பாவி, களை எடுத்து, கதிர் அறுத்து, வயலில் அல்லல்படும் விவசாயியால், அவன் உற்பத்தி செய்யும் நெல்லுக்கு விலை நிர்ணயிக்க முடியவில்லை.

கன மழையிலும், அனல் வெயிலிலும் வாழை, கரும்புகளை காப்பாற்றி, அதை விற்க போனால், அதில் பங்கு கேட்க பல கைகள் வரும்.


ஆனால் வீட்டு உரிமையாளர்களின் பத்துக்கு பத்து 'ரூம்'களுக்கு 10 ஆயிரம் ரூபாய் 'அட்வான்ஸ்', 5 ஆயிரம் ரூபாய் வாடகை. இதில் முறை வாசல் (கோலம் போடுறது, தண்ணீர் தெளிக்கிறது), மின்சார செலவு என அது ஒரு ஆயிரம் ரூபாய் தனிக் கணக்கு.

இதையும் மீறி, சொந்த ஊரில் இல்லாத வேலை வேறு எந்த ஊரில் இருந்தாலும் வேண்டாம் என்பவர்களுக்கு சில பாரம்பரிய நிறுவனங்கள் அங்கு உள்ளன.

குறுநில மன்னர் அதிகாரத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனங்கள் பாரம்பரியம் என்ற போர்வையில் 'லாக்'குகளை வடிவமைத்திருக்கும்.

ஏழ்மையின் பிடியில் இருக்கும் குடும்பத்தின் மகன்கள்தான், எளிதில் இது போன்ற 'லாக்'கில் அகப்பட்டு, அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.

இதை இதைவிட எளிமையாக சொல்ல வேண்டுமென்றால்.... இப்படி சொல்லலாம்..

எங்கள் ஊரில் ஒரு பெரிய பேனரை ஒட்ட தினமும் பலர் ஓடிக்கொண்டிருப்பார்கள். இவர்கள் ஓட ஓட அந்த பெரிய பேனரைப் பற்றி ஊரே பேசிக் கொண்டிந்தது.


எனக்கும் அவர்களைப் போல் ஓட வேண்டும் என்ற ஆசையில் சேர்ந்தேன். திருநெல்வேலி ஊருக்குள், அந்த பேனரை முதுகில் கட்டிக் கொண்டு ஓட ஆரம்பித்தேன்.

அதிகம் பேர் அந்த பேனரைப் பார்க்க வேண்டும் என்பதற்காக இரவு, பகலாக ஓடினேன்.
நாங்கல்லாம் அந்த காலத்தில எவ்வளவு வேகமாக ஓடுவோம் தெரியுமா? இன்னும் வேகமாக ஓடினா, நம்ம முதலாளி தோட்டம், தொரவா இனாமா தருவாங்கப்பா, இதோ பார் எங்களுக்கு தந்திருக்காங்க பாரு..
என்றனர் பேனர் தூக்கிய மூத்தவர்கள்.

'ஷிப்ட் ' போட்டு ஓடினோம். என் வாழ்வின் இளமைக் காலத்தின் பெரும் பகுதியை ஓடியே கழித்தேன். வெயலில் இருந்தும், மழையில் இருந்தும் காப்பாற்றிக் கொள்ள ஒரு துண்டு தந்தார்கள்.

அது எனக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. எனது தாயாயும், தந்தையும் மழையிலும், வெயிலிலும், குளிரிலும் சிரமப்பட்டது என்னை துயரத்தில் ஆழ்த்தியது.

எனக்கு முன்னால் ஓட ஆரம்பித்தவன், இனிமேல் பேனரை தூக்க வருவதில்லை என்று கூறிவிட்டு சென்றான்.

பேனரைப் பற்றி இந்த ஊரே பெருமையாக பேசியது. ஆனால் இதை நினைத்து என்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை.

ஒரு நாள் பேனரை முதுகில் சுமந்து ஓடிக் கொண்டிந்த போது இந்த ஓட்டத்தை நிறுத்த முடியுமா? என்று யோசித்தேன். நிறுத்தினால் சொற்ப வருவாயும் நின்றுவிடும். அப்போதுதான் ஒரு பெரிய 'லாக்'கில் மாட்டியிருப்பது எனக்கு புரிந்தது.

பலமான பொருளாதார பின்னணியில் இருப்பவர்கள் பேனர் தூக்குவதை நிறுத்தி இருந்ததும், வேறொரு தொழில் செய்து கொண்டு, இதை பகுதி நேரமாகவும் செய்து கொண்டிருப்பதும் அறிந்து திடுக்கிட்டேன்.