புத்தம் புதிய மொபைல் போனுக்கான அந்தப் பெட்டியைப் பிரிக்கும்போது ஏற்படும் சின்னஞ்சிறு உற்சாகம் இருக்கிறதே... அது நம்மில் பலருக்கும் அலாதியானது. ஆனால், பளபளக்கும் அந்தப் புதிய பெட்டிக்குள், யாரோ பயன்படுத்தித் தூக்கி எறிந்த ஒரு பழைய மொபைல் இருந்தால் அந்த நிமிடம் எப்படி இருக்கும்? புதிதாக ஒரு புத்தகம் வாங்கி, பெருமையோடு அதன் முதல் பக்கத்தைத் திருப்பும்போது, அதில் முன்பே வேறு யாரோ ஒருவர் தன் பெயரை எழுதி வைத்திருப்பதைப் பார்ப்பது போன்ற பெரும் ஏமாற்றம் அல்லவா அது!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த செல்வ கணேஷ் என்ற 25 வயது இளைஞனுக்கும் அப்படியொரு நிலைதான் ஏற்பட்டது.

பெங்களூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் அவர், வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்துக் கொண்டிருந்த அந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், பிரபல இ-காமர்ஸ் தளத்தில் ரூ. 15,999 செலுத்தி ஒரு புதிய போனை ஆர்டர் செய்தார். போனும் கைக்கு வந்தது. ஆனால், சில மாதங்களிலேயே அந்தப் போனின் பின்பக்கம் அப்படியே கழன்று வந்து விழுந்தது. சர்வீஸ் சென்டரில் போய் நின்றபோதுதான் அந்த அதிர்ச்சியான உண்மை அவருக்குத் தெரியவந்தது.

"சார், இது நீங்க வாங்குறதுக்கு முன்னாடியே யூஸ் பண்ணப்பட்ட பழைய போன்... இதோட வாரண்டியும் எப்போதோ முடிஞ்சு போச்சு!" என்று சர்வீஸ் சென்டர் பணியாளர்கள் முகத்தில் அடித்தாற்போல சொல்லியிருக்கிறார்கள்.

புதிய மொபைல் என நம்பி, பழைய போனை வாங்கியதை உணர்ந்த அந்த இளைஞனின் மனநிலை அப்போது எப்படி இருந்திருக்கும்? உடனடியாக அந்த ஆன்லைன் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு புகார் அளித்திருக்கிறார். நிறுவனமோ, அவர் செலுத்திய பணத்தை மட்டும் வங்கி கணக்கில் திருப்பிக் கொடுத்துவிட்டு, பிரச்னையை அதோடு முடித்துக்கொள்ள நினைத்தது.

உழைப்பைச் சுரண்டுவதற்கு எப்படிச் சில சலுகைகளைத் தூண்டிலாகப் போடுகிறார்களோ, அதுபோலவே, தவறு செய்தவர்கள் பணத்தை மட்டும் முகத்தில் வீசிவிட்டு, அந்த வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட அலைச்சலையும், அவமானத்தையும் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியுமா?

தன்னந்தனியாக நின்று நீதிக்காக நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தின் கதவுகளைத் தட்டினார் செல்வ கணேஷ். பணத்தைத் திருப்பிக் கொடுப்பது மட்டும் தீர்வல்ல, என் மன உளைச்சலுக்கு யார் பொறுப்பு? என்ற அவரது நியாயமான கேள்விக்கு, நெல்லை நுகர்வோர் ஆணையத் தலைவர் பிளசட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் அதிரடியான பதிலை வழங்கி இருக்கிறார்கள்.

பழைய பொருளைப் புதியது போல மாற்றி விற்பனை செய்வது முற்றிலும் நியாயமற்ற வணிகச் செயல் எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வாடிக்கையாளரை ஏமாற்றிய அந்தத் தனியார் விற்பனை நிறுவனம் 20 ஆயிரம் ரூபாயை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

 * மன உளைச்சலுக்கான இழப்பீடு: ரூ. 10,000

 * வழக்குச் செலவுக்காக: ரூ. 10,000

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்தப் பணத்தைத் தரத் தவறினால் 9 சதவீத வட்டியுடன் சேர்த்துத் தொகையைச் செலுத்த வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது ஆணையம். (ஆன்லைன் வர்த்தக நிறுவனம் மீதான வழக்கை ஆணையம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது).

யாருக்கும் தெரியாமல் ஆன்லைன் திரைக்குப் பின்னால் நடக்கும் இந்த பகல் கொள்ளையை, ஒரு சாமானிய இளைஞன் இன்று சட்டத்தின் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறான். இது வெறும் 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு அல்ல... வாடிக்கையாளர்களை ஏமாளிகள் என நினைக்கும் கார்ப்பரேட் விற்பனையாளர்களுக்கான சரியான சாட்டையடி!