மனிதனுக்கு தான் செய்தது சரியா? தவறா? என சீர்தூக்கி பார்த்து பகுத்தறியக்கூடிய அதி அற்புதமான ஆற்றல் உள்ளது. சரி என்று தன்னளவில் உணர்ந்தாலே நாம் உற்சாகமடைவோம். நல்ல எண்ணங்கள் உருவாகும். நல்ல எண்ணங்களால் நல்ல செயல்கள் அரங்கேறும். அதனால் நாம் மேலும் மேலும் உயருவோம். தவறு என்றால் குற்ற உணர்வு கொள்வோம். கெட்ட எண்ணம் ஆக்கிரமிக்கும். அது தனிமனித முன்னேற்றத்தை தடுக்கும். இப்படி நடப்பதுதான் மனித இயல்பு. தவற்றால் குற்ற உணர்வு கொள்ளும் ஒரு மனிதனால் நிச்சம் கொடூரமான காரியங்களை செய்ய முடியாது என்றே நம்பி வந்தேன். ஆனால் எனது அந்த எண்ணம் பொய்த்து போன தருணம் வந்தது.
தூத்துக்குடி அருகே அலங்காரத்தட்டு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணம்மாளின் வாக்குமூலம் கேட்கும் எவருக்கும் ஒருவிதமான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருபுறம், மனிதன் தனது செயல்களை சீர்தூக்கிப் பார்க்கவும், நல்லெண்ணங்களை வளர்த்துக் கொள்ளவும் முடியும் என்று நம்புகிறான். ஆனால், மறுபுறம், அதிகாரத்தின் மமதையில், மனிதத்தன்மையற்ற செயல்களைச் செய்யக்கூடியவர்களாகவும் சிலர் இருக்கிறார்கள் என்பதை கிருஷ்ணம்மாளின் சாட்சியம் நமக்கு உரக்கச் சொல்கிறது. அவரது வாழ்வில் அதிகார துஷ்பிரயோகமும், மனிதாபிமானமற்ற செயல்களும் ஒருசேர அரங்கேறியுள்ளன.
கிருஷ்ணம்மாளின் கணவரை சித்திரவதை செய்த போலீசார் என்ன மாதிரியான மனநிலையில் இருந்திருப்பார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், அவர்களின் செயல்கள் எந்தவிதமான நியாயப்படுத்தலுக்கும் அப்பாற்பட்டவை.

கிருஷ்ணம்மாளின் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு சாமானியனின் வலி நிறைந்த அழுகுரலாக ஒலிக்கிறது. கணவரைப் பிடித்துச் சென்றதில் இருந்து, அவரது உடல் காயங்களுடன் இருந்ததை பார்த்தது வரை, காவல் நிலையத்திலேயே அவர் உயிர் பிரியும் என்று சொன்னது முதல், அவர் கண் முன்னே கணவரை மாடிக்கு இழுத்துச் சென்று சித்திரவதை செய்தது வரை, ஒவ்வொரு காட்சியும் மனதை உலுக்குகிறது. அப்போதைய உதவி ஆய்வாளர் தற்போதைய டிஎஸ்பியான ராமகிருஷ்ணனின் மனிதாபிமானமற்ற பேச்சுக்கள், செயல்கள் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும்போது எவர் ஒருவராலும், எவ்வளவு பெரிய கொடூரர்களாகவும் மாற முடியும் என்பதையும் காட்டுகிறது.
கணவர் இறந்த பிறகு, மருத்துவமனைகளைத் தேடி அலைந்த கிருஷ்ணம்மாளின் தவிப்பையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கணவருக்கு நேர்ந்த அவலத்திற்கு ஒரே நாளில் சாட்சியமாக மாறிப்போன அவளிடம் உன் கணவன் மாரடைப்பால் இறந்தார் என்று காவல்துறையினர் கூறியது, தவற்றை எந்த அளவுக்கு மறைக்க முயன்றார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் இல்லை.
சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர் அனுபவித்த வேதனையும், பல வருடங்களாக நீதிக்கான அவரது போராட்டமும் நம்மை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்துகிறது. ஒரு கட்டத்தில் அரசாங்கம் அளித்த இழப்பீட்டை வேண்டாம் என்று அவர் கூறியது, பணத்தை விட நீதியே முக்கியம் என்று அவர் உறுதியாக நம்பியதாக இருக்கலாம் அல்லது கணவனை இழந்த அந்த பெண்ணின் கடைசி கட்ட புறக்கணிப்பாகக் கூட இருக்கலாம்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது பொறுப்பை உணராமல் செயல்படும்போது ஏற்படும் விளைவுகளுக்கான சான்றுதான் அவள். மனிதன் பகுத்தறிவும், மனசாட்சியும் உள்ளவன் என்று நாம் நம்பினாலும், சில நேரங்களில் அந்த நம்பிக்கைக்கு சவால் விடும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. கிருஷ்ணம்மாளின், நீதிக்கான போராட்டம் 25 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நிறைவு பெற்றது.
டிஎஸ்பி ராமக்கிருஷ்ணன் உட்பட 9 பேருக்கு நேற்று(5-4-2025) தூத்துக்குடி கோர்ட் ஆயுள் தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. 25 ஆண்டுகளுக்கு முன் எஸ்ஐயாக இருந்த ராமக்கிருஷ்ணன் டிஎஸ்பியாக மாறினார். மற்றொரு எஸ்ஐ இன்ஸ்பெக்டராக உருப்பெற்றார். மற்ற 7 பேர் காவல் பணியை செய்து விட்டு ஒய்வில் வீட்டில் காலாட்டிக் கொண்டிருந்தனர். தற்போது இவர்கள் 9 பேரும் சிறையில் தள்ளப்பட்டு உள்ளனர்.
1999ல் நடந்த சம்பவம் 24 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் விசாரணையே நடத்தப்படாமல் இருந்த ஒரு வழக்கு, கடந்த 2024ல் தூத்துக்குடி 1வது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
வெடிகுண்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்து வந்து சட்டம் படித்த, பயிற்சி பெற்ற அதிகாரிகளே காவல் நிலையத்தில் வைத்து எப்படி ஒருவரை கொல்ல முடிந்தது. அவர்களை குற்ற உணர்வு ஒன்றுமே செய்யவில்லையா? என நான் அதிர்ச்சியில் உறைந்து கொண்டிருந்த போது எனது சக நிருபர் மலைக்குச் செல்வதாகவும், மிஸ்ஸிங் இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறும் கூறிச் சென்றார். அப்போதுதான் நானே ஆச்சரியபடும் ஒரு முடிவுக்கு வந்தேன். எல்லா குற்ற உணர்வுகளில் இருந்தும் இந்த மனுச பயலுகளை காப்பாற்றுவது இறை நம்பிக்கை ஒன்றுதான் என்று…