குற்ற உணர்வு ஒரு மனிதனை கொன்றுவிடும் என்பார்கள். அதெப்படி ஒரு சிலருக்கு எதிராக ஒட்டுமொத்த சமூக திரளே மனசாட்சியற்ற கொடுமையை நிகழ்த்திவிட்டு குற்ற உணர்வில்லாமல் கடந்து விட முடிகிறது என யோசித்து இருக்கிறேன். நமது வரலாற்றில் ஜீரணிக்கவே முடியாத குற்றங்களை பழக்க வழக்கம், சம்பிரதாயம் எனக்கூறி நடத்தி காண்பித்து இருக்கிறார்கள். இது போன்றவற்றில் குற்ற உணர்வுகள் ஏற்படாமலிருக்க இந்த சமூகம் கண்டடைந்த வழிதான் தியாகம். தியாகி என முத்திரை குத்தி கடவுளாக மாற்றி விடுவார்கள். ஆழ்ந்து யோசித்து பார்த்தால் வரலாற்றில் அப்படியான சம்பவங்களை நிறைய சொல்ல முடியும். இப்படி ஒரு முடிவுக்கு வர சமீபத்தில் நான் சேகரித்த செய்தியும் ஒரு காரணம்.
<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->
நெல்லை, தென்காசியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற உடன்கட்டை சம்பவங்களை நினைவூட்டும் சதிகற்களை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் மாணவிகள் சமீபத்தில் கண்டறிந்து ஆவணப்படுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக நெல்லை பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் (பொ) பேராசிரியர் சுதாகரை சந்தித்து நான் பேசினேன். "சதிகற்கள் பல நூறு ஆண்டு வரலாற்று சுவடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. இது பெண்களின் சோகமும், அவர்களுக்கு அரங்கேறிய கொடுமைகளைப் பற்றிய முக்கியமான ஆய்வு" என அவர் கூறினார்.
"நாங்கள் இதுவரை 27 சதிகற்களை ஆவணப்படுத்தியுள்ளோம். சமீபத்தில் முதலாம் ஆண்டு மாணவிகள் சத்யாதேவி, வாஹினி ஆகியோர் 12 புதிய சதிகற்களை கண்டறிந்துள்ளனர். இதில், சத்யாதேவி 8, வாஹினி 4 சதிகற்களை கண்டறிந்து உள்ளனர். இதில் கல்வெட்டு பதிக்கப்பட்ட அரிய சதிகல்லும் அடங்கும்" என அவர் தெரிவித்தார்.
இந்தியாவில், உடன்கட்டை ஏறுதல் (Sati) என்பது பெண்களின் வாழ்வின் ஒரு கட்டாய நெறியாக இருந்தது. கணவன் இறந்தவுடன் மனைவியும் சிதையில் பாய்ந்து உயிர் துறக்க வேண்டும் என்ற கொடூரமான பழக்கத்தால் பல பெண்கள் தங்களது உயிரை இழந்தனர். இந்த சம்பவங்களை நினைவுகூரும் விதமாக சதிகற்கள் உருவாக்கப்பட்டு, சில இடங்களில் இன்னும் வழிபாடுகளும் நடந்து வருகிறது.
நெல்லை பல்கலைக்கழக தொல்லியல் மாணவிகள் மேற்கொண்ட ஆய்வில் 200 முதல் 350 ஆண்டுகள் பழமையான பல சதிகற்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய சதிகற்கள்:
சிவகிரி, சிந்தாமணி பேரிப்புதூர், மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அருகே ஒரு சதிகல் (250 ஆண்டுகள் பழமை)












செங்கோட்டை, இலத்தூர், மாந்தோப்பு, முதலியார்பட்டி – 4 சதிகற்கள் (250 ஆண்டுகள் பழமை)
சீவநல்லூர் வயல்வெளி, கணக்கப்பிள்ளை வலசை, பண்பொழில் சாலை அருகே – 3 சதிகற்கள் (200 ஆண்டுகள் பழமை)
தென்காசி ரயில் நிலையம் அருகே – 220 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுடன் கூடிய சதிகல்
மத்தளம்பாளையம், ஆழ்வார்குறிச்சி, நந்தன்தட்டை – 250 ஆண்டுகள் பழமையான 3 சதிகற்கள்
கல்வெட்டுடன் கூடிய அரிய சதிகல்
தென்காசி ரயில் நிலையம் அருகே மாணவி சத்யாதேவி கண்டுபிடித்த சதிகல்லில் 3 வரி கல்வெட்டு உள்ளது.
"துன்மதி வருஷம் ஆவணி மாதம் 42, ஆரியவன் தீக்கியார் கணவனை பிரியாதால்"
இதன் பொருள், ஆரியவன் என்பவர் இறந்ததற்குப் பிறகு, அவருடைய மனைவி தீக்கியார் உடன்கட்டை ஏறியதாக கல்வெட்டு தெரிவிக்கிறது. கல்வெட்டுடன் கூடிய சதிகல் கிடைப்பது மிகவும் அரிதாகும் என தொல்லியல் பேராசிரியர்கள் முருகன் மற்றும் மதிவாணன் தெரிவித்தனர்.
