இந்த கோயிலை சுற்றி, இந்த கோயிலை நம்பி எத்தனை பேர்  வாழ்கிறார்கள் என நெல்லையப்பர் கோயிலைப் பற்றி நினைத்து வியந்ததுண்டு. காரணம் நெல்லையப்பர் கோயில் ஒன்று இருப்பதால் இன்று இங்குள்ள பல்லாயிரம் மக்களின் கைகளில் பணம் ரவுண்டு அடிக்கிறது.
  தமிழ்நாட்டுக்காரர்கள் பலரைப் போல்  நானும், அவளும் ஒருமுறை நெல்லையப்பர் கோயிலுக்குச் சென்றிருந்தோம். முதலில் அம்மன் வளாகத்திற்குச் சென்றோம்.  சீட்டு வாங்கி கருவறைக்கு அருகில் சென்று வழி பட்டோம். தீபம் கொண்டு வந்து காட்டினார்கள். அதில் கைவைத்து கண்ணில் ஒற்றி தட்டில் 10 ரூபாய் வைத்தோம்.

<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->

  தீபம் காட்டிய பூசாரிக்கு திருப்தி இல்லை. முகம் கடுகடுப்பானது.

ஏன்?
என்ன ஆச்சு?
எதற்காக பூசாரி இப்படி நடந்து கொள்கிறார்? என அவள் என்னிடம் கேட்டாள்.

தெரியவில்லை. நாம் வழிபாட்டுக்குச் சீட்டு வாங்கி கொடுக்கவில்லையே? ஒரு வேளை இதுதான் காரணமாக இருக்குமோ? என்றேன்.‌

நடந்ததைப் பற்றிப் பேசிக் கொண்டே, அடுத்து சிவன் வளாகத்திற்குச் சென்றோம். அர்ச்சனைக்கும்  நுழைவு சீட்டு வாங்கிக் கொண்டு கருவறைக்கு அருகில் சென்றோம்.

அங்குச் சுமார் இருபது பக்தர்கள் நின்று கொண்டிருந்தனர். பூசாரி வந்தார்.  அர்ச்சனை சீட்டைக் கொடுக்க முயன்றோம். அதனை வாங்காமல்  சென்றார். இது இருமுறை நடந்தது.‌ அவர் அர்ச்சனை சீட்டை வாங்காமல் நழுவி நழுவி சென்றார். அதன் பிறகுதான் அவருக்கு  எங்களிடம் இருந்து அர்ச்சனை சீட்டை வாங்கவே  பிடிக்கவில்லை என்று  புரிந்தது.

ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? என  புரியவில்லை. நாங்கள் அர்ச்சனை எதுவும் செய்ய வில்லை. பூசாரி தீபம் கொண்டு வந்து காட்டத் துவங்கினார். அனைவரும் தீபத்தை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டனர். நாங்களும் அவ்வாறே செய்தோம்.

அந்த இடத்தை விட்டு அமைதியாக வெளியே வந்தோம். அம்மன்  மற்றும்  சிவன் முன் உள்ள பூசாரிகள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? என புரியவில்லை.

நேராகக் கோயில் நிர்வாக அறைக்குச் சென்றோம். நடந்ததை விளக்கினோம்.
அங்கு இருந்த அதிகாரி  எங்களிடம் பூசாரிகள் நடந்த கொண்ட  விதத்திற்கான காரணங்களை  அருமையாக விளக்கினார்.

அவரின் விளக்கத்தைப் பார்ப்போம்.

அம்மன் வளாகத்தில்  நீங்கள் பூசாரிக்குக் கொடுத்த பத்து ரூபாய்தான்  அவரின் கோபத்திற்குக் காரணம்.

அவர் எதிர்பார்ப்பது குறைந்தது  50 ரூபாய். அதனால்தான் நீங்கள் 10 ரூபாய் கொடுத்ததும் அவர் கோபப்படுகிறார்.

இரண்டாவது சிவன் வளாகத்தில் நீங்கள் அர்ச்சனை சீட்டை வாங்கி  பூசாரியிடம் நீட்டியுள்ளீர்கள். அர்ச்சனை சீட்டு வாங்குபவர்கள் பொதுவாக  பூசாரி தட்டில் காசு போடுவதில்லை. அதனால் நீங்களும் தட்டில் காசு போடமாட்டீர்கள் என பூசாரி முடிவு கட்டிவிட்டார்! எனவேதான் அவர் உங்களைக் கண்டு கொள்ளவில்லை.

இதனைக் கேட்ட நாங்கள் திகைத்து நின்றோம்.‌ அந்த அதிகாரி தொடர்ந்து பேசினார்.

"நீங்கள் கோயிலுக்கு வருவதின் நோக்கம் என்ன?" எனச் சிரித்தவாறே  கேட்டார்.

"சாமி கும்பிட" என்றோம்.

"அதை யாரும் தடுக்கிறார்களா?" என்றார்.

"இல்லை" என்றோம்.

"பிறகு ஏன் இப்படிப் புலம்புகிறீர்கள்?
உங்கள் மனது கடவுள்மேல் இருக்கட்டும். குடும்பத்துடன் வாங்க.
நல்லா சாமிய மட்டும் கும்பிடுங்க.
சாமிக்கும் உங்களுக்கும் இடையில் யாரும் தேவையில்லை.
சாமி கும்பிட்டுவிட்டு நிம்மதியா வீட்டுக்குப் போங்க"  எனப் புன்முறுவல் இட்டார்.

    அதன் பிறகு பலமுறை நானும் அவளும் கோயிலுக்குச் சென்று நன்றாக சாமி கும்பிட்டுவிட்டு திருநீற்றை நெற்றியிலிட்டு வீட்டிற்கு பார்சலும் எடுத்து வந்து இருக்கிறோம். மீண்டும் மீண்டும் அங்கு போக காரணம் அங்கிருந்தால் ஒரு நிம்மதி, சந்தோஷம் கிடைக்கிறது.

சில காலம் கழித்து திருமண நாளுக்காக நெல்லையப்பர் கோயிலுக்கு  போக நினைத்து நானும், அவளும் மீண்டும் போனோம். நான் நல்ல காப்பர் வேட்டி, சட்டை அணிந்திருந்தேன். அவள் பட்டு புடவை அணிந்திருந்தாள். பார்ப்பவர்களுக்கு எங்களுக்கு விஷச நாள் என புரிந்திருக்கும். நெல்லையப்பர் கோயில் கருவறை பூசாரியும் அந்த மாதிரி புரிந்து கொண்டு எங்களை பார்த்ததும் சிவன் கழுத்தில் கிடந்த மாலையை கையில் எடுத்து வந்தார். நான் பொதுவாக தட்டியில் காணிக்கை போடுவதில்லை. எனக்கு அந்த சம்பவத்திற்குப் பிறகு எனது அய்யன் சிவன் தரினம் ஒன்றே  போதும் என்ற நிலைக்கு வந்து விட்டேன். அர்ச்சனை கொடுப்பதில்லை. எனக்கும் பூசாரிக்கும் இடையில் இதுவரை எந்த எதிர்பார்ப்புக்கும் நான் இடம் தந்ததில்லை. ஆனால் அவள் அப்படியில்லை. அவள் அர்ச்சனை சீட்டு வாங்கி அர்ச்சனை கொடுப்பாள். பூசாரி வரும் போது தட்டில் காணிக்கை வைப்பாள். வழக்கமாக ஆடை தோரணையறிந்து திருநீரு மட்டும் அளித்து விட்டுச் செல்லும் பூசாரி அன்று சிவன் அணிந்த மாலையுடன் வருவதை பார்த்து அவளுக்கு சந்தோஷம். அவள் தட்டில் 20 ரூபாய் காணிக்கை வைத்தாள். அதைப்பார்த்த பூசாரி மாலையை மறுகையில் மாற்றி விட்டு சிவனுக்கே அந்த மாலையை கொண்டு சென்றுவிட்டார். அவளது முகத்தில் ஏமாற்றத்தைப் பார்த்தேன். எனது அந்த திருமண நாள் மிகவும் மோசமான நாளாக மாறிவிடக் கூடாது என்பதால் அந்த பூசாரிக்காக நான் அவளிடம் மன்னிப்பு கேட்டேன்.
    இந்த கோயிலுக்கு சினிமா, அரசியல் உள்ளிட்ட பல துறை பிரபலங்கள் வந்தால் பூசாரிக்கு கொண்டாட்டமாக இருக்கும். வருபவர்கள் ஒரு தட்டுக்கு காணிக்கையாக 1000 ரூபாய அல்லது அதற்கும் மேல் வைப்பார்கள். அதனால் அவர்களது எதிர்பார்ப்பு எப்போதும் உயர்வாகவே உள்ளது.
தமிழ்நாட்டில் கோவில் அர்ச்சகர்களின் மாத சம்பளம் பொதுவாக ₹15,300 முதல் ₹18,377 வரை இருக்கும். அர்ச்சகர்களின் அனுபவம், கோவிலின் வருமானம் மற்றும் அதன் அளவினைப் பொறுத்து, சிலர் மாதம் ₹20,000 முதல் ₹50,000 வரை சம்பளம் பெறுகின்றனர்.

    நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலின் உண்டியல் காணிக்கைகள், 2021ம் ஆண்டில் 14 லட்சம் ரூபாய் மற்றும் 2022ஆம் ஆண்டில் 19 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வசூல் ஆனதாக பதிவாகியுள்ளன. மேலும், 2012ம் ஆண்டில், கோயிலின் நிர்வாகத்திற்கு உட்பட்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் நிலுவையில் உள்ள வாடகை மற்றும் கட்டணங்கள் 2.4 கோடி ரூபாயாக இருந்தது. ஆக நெல்லையப்பர் கோயில் நல்ல வருமானம் உள்ள கோயில் என்பதற்கு மாற்றுக் கருத்தே கிடையாது. அங்கு உள்ள அர்ச்சகர்களுக்கும் நல்ல வருமானமே கிடைக்கும் என்றே நம்புகிறேன்.
     இருந்தாலும் அங்கு மரியாதை விற்கப்படுகிறது.