உச்சி வெயில் உக்கிரமாக அடித்த போது பாலத்தில் நின்றுகொண்டிருந்தான் கரிகாலன். வயிற்றில் பசி எரிந்தது. ஒவ்வொரு நாளும் மளிகைக் கடைக்குப் போய், கடன் கேட்டுப் பசியை போக்கிக்கொள்ள வேண்டும். ஆனால் இன்று கடைக்காரன் கணக்கை மூடிவிட்டான்.
<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->
"ஏழு மாதத்துக்கு மேலாக பாக்கி இருக்கிறதே, இனி எதுவும் தர முடியாது, கரிகாலா!"
காலையில் அவன் குழந்தைகளை பார்த்தான். தாய், பசியை மறைப்பதற்காக, குழந்தைகளை ஏதேதோ கதைகளில் மூழ்கடித்தாள். ஆனால் குழந்தைகள் உணர்ந்துவிட்டார்கள்—சோறு இல்லை!
அவன் மனத்தில் ஒரு கேள்வி எழுந்தது:
"சோறு கொஞ்சமா இருந்தாலும் அடுத்தவனுக்கு கொடுக்காத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?"
என அவனது மனம் நீதிநூல்கள் கூறும் அறத்தை பேசியது.
அந்த ஊரில் ஒரே ஒரு நம்பிக்கை இருந்தது— அந்த நம்பிக்கைதான் அரசு. அரசின் பிரசார வாகனம் அந்த தெருவில் சுற்றிக்கொண்டிருந்தது. ஒலிபெருக்கியில் அறிவிப்பு ஒலித்தது:
- "அமெரிக்காவிடம் இருந்து உணவுப்பொருட்கள் கொண்ட கப்பல் கடல் வழியாக வந்துகொண்டிருக்கிறது.
- நமது அரசின் பொற்கால ஆட்சியில் மக்களின் பசியை போக்க, 1000 கோடி ஒப்பந்தம் செய்துள்ளோம்.!"
கரிகாலன் சிரித்தபடியே யோசித்தான்.
"இந்த உணவும் அரசியலால் நம்மிடம் சேருமா?"
அந்த தெருவின் மறு பகுதியிலே ரவுடி செந்தில் மகிழ்ச்சியுடன் உரிமையுடன் பேசினான்.
"நமக்கு சோறு கிடைக்கனும்னா எதுவும் தப்பில்ல!"
அவன் கூட்டத்தோடே காரின் மீது ஏறி நின்று உரத்துக் கூறினான்:
"முடிந்தவரைக்கும் சூழ்நிலையை வென்றே ஆகணும்!"
அவன் சொன்னதை யாரும் பொருட்படுத்தவே இல்லை. ஏனென்றால், பலரும் ஏற்கனவே அந்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
முகில் கம்பெனி என்ற பெரிய நிறுவனத்தின் உரிமையாளர் முருகன், சொன்னான்:
"நம்மிடம் சோறு இருக்கிற வரைக்கும் தான் இவனுங்க நம்ம பேச்சை கேட்பானுங்க!"
அவனது அலுவலகத்தில் வேலை கேட்டு வந்த மூவர், சற்றும் தயக்கமில்லாமல் கேட்டார்கள்:
"ஐயா, குறைந்தது தினசரி சம்பளமாக அரிசியாவது கொடுங்க. இல்லனா குடும்பத்தோட பசியால் இறக்கணும்."
முருகன் புன்னகைத்துக் கொண்டே
"எல்லா அரிசியும் உங்களிடம் கொடுத்து விட்டு நாங்க எங்கே செல்வது. உங்களிடம் பசியும், என்னிடம் அரிசியும் இருக்கும் வரைதான் என்னிடம் வேலைக்கு வருவீர்கள்"
என்றான்.
அந்த மூவரும் வாயை மூடிக்கொண்டு வெளியேறினர். அவர்களின் கண்களில் உள்ள பசியும் பரிதாபமும் முதலாளிக்கு சாதாரண விஷயமாக பஞ்சம் மாற்றி இருந்தது.
மளிகை கடைக்காரன் கணக்குப் புத்தகத்தை தெருவில் வீசிவிட்டு, கோபமாகச் சொன்னான்:
"இவனுங்க எப்போதுமே பசியாகவே இருக்கனும்! அப்பதான் நம்ம வியாபாரம் ஓடும்!"
பசியால் ஊர் அழிந்து கொண்டிருப்பது தெரியாமல் பணமில்லாமல் உணவுக்காக அலைபவர்களை திட்டினான்.
அதிகாலை சந்தியில் ஒலிபெருக்கி ஒலித்தது. போராளிகள் ஒன்று கூடியிருந்தனர்.
"அனைவருக்கும் சோறு கிடைக்கும் வரை போராடுவோம்!"
கரிகாலன் அதை கேட்டான். போராடலாமா? அரசின் மானிய அரிசி வரும் வரை சும்மா இருக்கலாமா? ரவுடி செந்திலின் வழியில் செல்லலாமா? முதலாளியின் காலில் விழலாமா?
அவன் முடிவு எடுத்தான். அந்த இரவில் பட்டினியுடன் தூங்கினான். ஆனால், மறுநாள் காலையில்…
அவன் தெருவில் நின்று உரத்த குரலில் சொன்னான்:
"சோறு தர மறுப்பவர்கள், எதையும் தரமாட்டார்கள். போராடவேண்டும்!"
தெரு முழுவதும் மக்கள் திரண்டார்கள். போராட தயாராகினர். அரசியல் தீர்வுகள், வியாபாரம், ரவுடிகள், முதலாளிகள்—எல்லாவற்றையும் மீறி உண்மையான மாற்றம் தோன்றுவதை கரிகாலன் உணர்ந்தான்.
ஏனென்றால், சோறு என்பது வாழ்வின் அடிப்படை. அது அரசியல் அல்ல! இறுதியில் பாமரருக்கும் ஜனநாயக அரசியல் புரிந்தது.