கட்சியிலும், பெரும்பகுதி மக்கள் மத்தியிலும் தனது செல்வாக்கை இழக்காமல் இருக்க காரணமே இல்லாமல் படி அளக்க வேண்டியவன் தான் ஒரு அரசியல்வாதி. பணத்தை அவன் பணமாக செலவு செய்யக் கூடாது. அந்த பணம் அவன் வழியாக கடந்து செல்லும் ஒரு கருவியாக மட்டுமே செயல்படக் கூடியவன். பணம் அவனிடம் வருவதை நிறுத்திவிட்டால் எல்லாம் அடுத்த கணமே மாறி விடும். அதனால் இந்த அரசியல்வாதிகள் கொழுத்த வருமானம் வரக்கூடிய ஏதாவது ஒரு தொழில் செய்தே ஆக வேண்டிய நிலை உள்ளது அல்லது பெரிய தொழிலதிபர்களின் கைக்கூலியாக இருக்க வேண்டிய நிலையில்தான் மக்களாகிய நாம் அவர்களை வைத்துள்ளோம். எந்த ஊரிலாவது ஒரு ஏழைத் தலைவனை பார்க்க முடிகிறதா?
<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->
பொதுவாக அரசியல்வாதிகள் வளர்ச்சித் திட்ட பணிகள் என்ற பெயரில் லட்சக்கணக்கில் கொள்ளையடிக்கிறார்கள் என பலர் நினைப்பது உண்டு. அது உண்மைதான் என்றாலும் கூட அந்த நிலைக்கு வர ஒருவன் கட்சிக்காக, அல்லக்கைகளுக்காக எவ்வளவு செலவு செய்திருக்க வேண்டும் என்பதை யாராவது யோசித்து இருக்கிறோமா? செல்வாக்கு பெற்ற ஒவ்வொரு அரசியல்வாதியும் சிங்கிள் ஆள் வருமானம் கொண்ட ஒரு பெரிய குடும்பம் போல்தான். இதுபோல் ஒவ்வொரு அரசியல்வாதியும் சேர்ந்து பயணித்தால் மட்டும்தான் வெற்றிகரமான கட்சியாக வலம் வரமுடியும்.
கட்சியை நடத்துவதும் பணத்தை வாரி இறைப்பதும் ஒன்றுதான். பணத்தை வாரி இறைத்த பிறகு ஒரு அரசியல்வாதிக்கு இறுதியில் கிடைப்பது அதிகாரம். அது வந்த பிறகு இறைத்ததை மீண்டும் எடுக்கிறான். அது அப்படிதான் நடக்கும் வேறு வழியில்லை. இதை எல்லாவற்றையும் சட்டத்தின் படியும், கேள்வி கேட்க முடியாதபடியும் வாழ்ந்து காட்டும் அரசியல்வாதிதான் தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள முடிகிறது.
அடிப்படையில் ஒட்டு மொத்த சமூகமே அனைத்து மட்டங்களிலும் ஒருவர் இன்னோருவரை சுரண்டியோ அல்லது ஏமாற்றியோ வாழ்ந்து வருவதால் ஜனநாயக முறைப்படி நம்மில் இருக்கும் ஆகச் சிறந்த சுரண்டல்வாதிதான் அரசியல்வாதியாக கிடைக்கிறான்.
ஒரு அரசியல்வாதியாக இருப்பதில் இருக்கும் சிக்கல்கள் அவர்களது குழந்தைகளுக்கு தெரியாது. அவர்கள் அப்பாவைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டத்தையும், நாலைந்து கார்களையும் பார்த்தே வளர்ந்திருப்பார்கள். அதனால் அவர்களும் ஒருவித அதிகார போதையில் திரிவார்கள். அப்பா சேகரித்த செல்வாக்கு, சொத்தை பாதி அழித்து பணம், பெயர், புகழ் ஒரே இடத்தில் குவிவதை தடுக்கும் முக்கியமான வேலையை செய்வார்கள். இப்படி ஒரு அரசியல்வாதியின் வாழ்க்கை கிராப் மிகப்பெரிய ஏற்றம் இறக்கம் நிறைந்தது.