செய்தியின் பிறப்பிடம் எங்கே? அது எப்படி உருவாகிறது? இதோ, ஒரு நாளைக்கான என் அனுபவத்திலிருந்து...

அன்றைய காலை வழக்கம்போல கூட்டம் நிறைந்த ஒரு நாள். டீக்கடையில் நின்று பத்திரிகையின் முன்னணி செய்திகளை ஓரளவுக்கு பார்த்தபடி, தொலைபேசியில் தகவல்களை திரட்டிக் கொண்டிருந்தேன். அப்போது, சேரன்மகாதேவி காவல் நிலையம் அருகே ஒரு பழக்கமான முகம் – ஐடிசி விற்பனை ஏஜென்ட்.

<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->

"அண்ணா, புதுமணத்தம்பதியர் காவல் நிலையத்துக்கு வந்திருக்காங்க. ஏதோ நகை பிரச்சினை போல..." என்ற ஒரு வரி தகவல் எனக்கு கிடைத்தது.

உடனே, கைபேசியில் ஏற்கனவே இருக்கும் போலீஸ் வட்டாரங்களைத் தொடர்புகொண்டு, "என்ன விஷசம் சார்?" என விசாரிக்க தொடங்கினேன். ஒரு சில கணங்களில் –

"25 பவுன் நகை திருட்டு! புதுமணத்தம்பதியர்கள் புகார்...!"

தகவல் உறுதி செய்யப்பட்டது. இதை விட முக்கியமான செய்தி அன்று வேறு எதுவும் இல்லை

சூரத்தில் வேலை செய்து வரும் சாம் ஜெப டேவிட் (30), பிப்ரவரி 24ஆம் தேதி, சேரன்மகாதேவி அருகே ஆசியான்குளத்தில் அன்சியா (21) என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்தில் பெற்றோர், உறவினர்கள் இணைந்து 25 பவுன் நகைகளை வழங்கினர்.

அவற்றை அன்சியா பாதுகாப்பாக ஒரு பேக்கில் வைத்து, கணவருடன் பிப்ரவரி 27ஆம் தேதி சூரத்திற்கு ரயிலில் சென்று இறங்கினார்.

ஆனால், சூரத்தில் இறங்கி, நகை பெட்டியைத் திறந்தவுடன் – அதிர்ச்சி! 25 பவுன் நகைகள் காணாமல் போயிருந்தன.

உடனே, இருவரும் திரும்ப நெல்லைக்கு வந்து சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

நகைகளை மட்டும் திருடி, மற்ற பொருட்களை அப்படியே விட்டு விட்டது... இந்த சம்பவம் வீட்டினருக்குள் உள்ள ஒருவருக்குத் தெரிந்த விஷயமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கத் தொடங்கினர்.

"பெட்டியில் நகை மட்டும் காணாமல் போனது... நகை பெட்டி இருந்த பேக் எது? யாருக்கெல்லாம் அது பற்றித் தெரியும்?" – இதிலிருந்து விசாரணை புதிய கோணத்தில் செல்லத் தொடங்கியது.

நான் அந்த தகவலை முதலில் கேட்ட போது, "பணமோ, ஆவணங்களோ திருடப்படவில்லையே... இது எப்படி சாத்தியமானது?" என்ற கேள்வி எழுந்தது.

வழக்கமாக, காவல் நிலையங்களில் இருந்து தகவல்களைப் பெறுவதற்கு பல வழிகள் இருக்கும். ஆனால் நேரமின்மை காரணமாக நேரில் செல்ல முடியவில்லை. அதற்குப் பதிலாக, பழக்கமான போலீசாரிடம் இருந்து உட்கதைகளை அறிய தொடங்கினேன்.

"சார், இது உறவினர்களில் ஒருத்தரே காரணமாக இருக்கலாம்...!"

இது ஒரு பொது தகவலாக இருந்தாலும், எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் இந்த தகவல்கள், செய்தியின் முக்கியமான மூலகங்களாக மாறும்.

போலீசார் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகை எங்கே? யார் எடுத்தார்கள்? இது குடும்பத்தினருக்குள் நடந்த மர்மமா? என்பதை கண்டுபிடிக்க விசாரணை தொடர்கிறது.

அப்போது ஒரு சின்ன தகவலாக தொடங்கிய என் நடவடிக்கை, அன்றைய நாளின் மாவட்ட அளவில் பரவலாக வாசிக்கக்கூடிய முக்கியமான செய்தியாக உருவாகிக் கொண்டிருந்தது.

தினசரி நாளிதழ்களை பொருத்தவரை பலதரப்பட்ட வாசகர்கள் இருப்பார்கள். நிருபரை பொறுத்தவரை பெரிய செய்தி சிறிய செய்தி என்று எதுவும் இல்லை. எல்லாவற்றுக்கும் ஒரே உழைப்புதான்.  முக்கிய செய்திகள் சில நேரங்களில் எளிதாகக் கிடைக்கும். சிறிய செய்திகள் கூட கிடைக்காமல் இருந்திருக்கிறது. இது களத்தில் செயல்படும் நிருபர்களுக்கு நடக்கக்கூடிய நிகழ்வுகள்தான். ஆனால் பத்திரிக்கைகளில் வெளியாகும் தகவல்களை நமக்கு வெறும் சம்பவமாக கடந்து சென்று விட முடியும். ஆனால் விசாரணை அதிகாரிகளுக்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்படி இல்லை.