மருத்துவம் என்பது மக்களுக்கான புனிதமான சேவை என்பதுதான் அடிப்படை உண்மை. ஆனால், இன்று சில மருத்துவர்கள் நோயாளிகளின் உயிரை ஒரு வியாபாரப் பொருளாக கருதுகிறார்கள். அவர்களின் நோக்கம் மருத்துவ சிகிச்சை வழங்குவது அல்ல, வியாபாரம் செய்வது!

வறுமை, வேதனை, நோய் – இதெல்லாம் ஏழைகளுக்கே ஏற்பட்ட பிரச்சினைகள். ஆனால், அதிலிருந்து மீள்வதற்காக அவர்கள் மருத்துவரை நம்பும் நொடியில், அந்த நம்பிக்கையைச் சுரண்டி அவர்களையே ஏமாற்றும் சிலரும் இருக்கிறார்கள்!

<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->

நெல்லை மாவட்டம் மானூர் அருகே மேலஇலந்தகுளம் பகுதியைச் சேர்ந்த வளையல் வியாபாரி முகமது அப்துல்லா (48). 2017 ஆம் ஆண்டு, அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும் நோய் குணமாகவில்லை. இதனால், மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில் மேல் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு குடலில் புற்றுநோய் இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.

அதிர்ச்சியடைந்த குடும்பம், சிகிச்சைக்காக பணம் திரட்டும் நோக்கில் சொந்த ஊருக்கு திரும்பியது. புற்றுநோய் சிகிச்சைக்கு மிகப்பெரிய தொகை செலவாகும் என்பதால், தூத்துக்குடி கோவில்பட்டியில் உள்ள ஆர்த்தி மருத்துவமனையில் அரசு மருத்துவரான அறுவை சிகிச்சை நிபுணர் ரமேஷை சந்தித்து மருத்துவ ஆலோசனை பெற்றனர்.

அந்த மருத்துவர் "உங்களுக்கு புற்றுநோய் இல்லை, இது சாதாரண குடல் இறக்கம்" என கூறினார். மேலும், "அறுவை சிகிச்சை செய்தால் போதுமானது" என உறுதியாக தெரிவித்தார்.

அப்துல்லாவின் குடும்பத்தினர், மதுரை மருத்துவர்கள் புற்றுநோய் இருப்பதாக கூறியதை மறுபடியும் அவரிடம் தெரிவித்த போதும், "அது தவறான கண்டறிதல், நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என சொல்லி அறுவை சிகிச்சை தேவைப்படுவதாகக் கூறி, சிகிச்சைக்கான தேதியை கொடுத்தார்.

அறுவை சிகிச்சை நடந்தது.
மூன்று நாட்கள் சிகிச்சைக்கு பின், அப்துல்லா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

வீட்டிற்கு வந்த பிறகு, அவருக்கு வயிற்று வலி மீண்டும் ஏற்பட்டது!
திரும்ப அந்த மருத்துவமனைக்கு சென்றபோது, மருத்துவர் ரமேஷ் அப்போது உண்மையை வெளிப்படுத்தினார்!

"உங்களுக்குப் புற்றுநோய் இருந்தது. ஆனால், நீங்கள் அறுவை சிகிச்சை செய்ய மறுத்துவிடுவீர்கள் என்பதற்காகவே இதை சாதாரண குடல் இறக்கம் என கூறினேன்!"

மேலும், "இப்போது நீங்கள் முழுமையாக குணமடைய வேண்டுமெனில், மூன்று லட்சம் ரூபாய் செலவாகும்" என கூறி தரக்குறைவாக பேசினார்.

அப்துல்லாவின் குடும்பத்தினர் இந்த மருத்துவ சேவை விதிமீறல் குறித்து தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலில் புகார் அளித்தனர்.

விசாரணை முடிவில், மருத்துவர் ரமேஷ் மருத்துவ நெறிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளார் என்று நிரூபிக்கப்பட்டது.

இதனால் 2018 முதல் ஒரு வருடத்திற்கு அவரது மருத்துவர் உரிமம் நிறுத்தப்பட்டது.

அவரது சான்றிதழ்களை மெடிக்கல் கவுன்சிலில் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.

அப்துல்லாவின் குடும்பம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட தகவலின்படி,

"மருத்துவர் ரமேஷ் தனது இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில் அரசு மருத்துவமனையில் 88 அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார்!"

"அவர் தனது மருத்துவர் சான்றிதழ்களை மெடிக்கல் கவுன்சிலிடம் ஒப்படைக்கவில்லை!"

தமிழ்நாட்டில் "அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை நடத்தக்கூடாது, பணியாற்றக்கூடாது" என சட்டமிருந்தாலும், இது வெறும் எழுத்துக்குள் மட்டுமே இருக்கிறது. அமலில் இல்லை.

இப்படிப்பட்ட மருத்துவ முறைகேடுகள் மற்றும் மருத்துவர்களின் விதிமீறல்களுக்கு எதிராக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

ஏழு ஆண்டுகளாக புற்றுநோயால் போராடும் அப்துல்லாவிற்கும், அவரது குடும்பத்திற்கும் நியாயம் கிடைக்குமா?