நெல்லை சந்திப்பில் எப்போதுமே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் அங்கு சிலர் ‘பாட்டல் ராதா’ திரைப்படத்தின் சிறப்பு திரையிடலுக்காக அனைவரும் ஆர்வமாக காத்திருந்தனர். மதுப்பிரியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சமூக பார்வையுடன் இணைத்து எடுத்துரைக்கும் இப்படம், பலரது கவனத்தை ஈர்த்தது. திரையிடலுக்கு பின்னர், கலந்துரையாடல் தொடங்கியது. இயக்குநர் தினகரன் சிவலிங்கம், ப்ளூ ஸ்டார் திரைப்பட இயக்குநர் ஜெயக்குமார் உள்பட பலர் மேடையில் இருந்தனர்.
நிகழ்ச்சி அமைப்பாளர்கள் திரையரங்கத்திலிருந்து கருத்துக்களை கேட்டு கொண்டிருந்தனர். எழுத்தாளர்கள், இதழ் ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் உரையாற்றினர். நிகழ்ச்சி நுட்பமாகவும், நகைச்சுவையுடனும் நடந்துகொண்டிருந்த நேரம்.
<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->
அந்த நேரத்தில், சமூக வலைதளங்களில் பிரபலமான திவ்யா ஈசன் என்ற நிவிதா பேச தொடங்கினார். அவருடைய கம்பீரமான குரல் மைக்கில் ஒலிக்க, அனைவரும் கவனிக்கத் தொடங்கினர்.
“இந்த படத்தை எனக்கு தெரிந்த மதுகுடிக்கும் நண்பர்களிடம் காண்பிக்க வேண்டும். டவுன்லோடு செய்ய முயன்றேன்… ஆனா முடியல!”
அவர் சொன்னவுடனே, ஒரு சில வினாடிகள் மௌனம் நிலவியது. அடுத்த நொடி, இயக்குநர் தினகரன் சிவலிங்கம் உட்பட மேடையில் இருந்தவர்கள் வெடித்துச் சிரிக்கத் தொடங்கினர்! கூட்டத்தில் இருந்தவர்கள் ஒன்றரை நொடிக்குள் விஷயத்தை புரிந்து கொண்டு மீண்டும் சிரிக்க ஆரம்பித்தனர்.
நிவிதா சொன்னது தெரிந்தும், தெரியாமலும் ஒரு உண்மையை வெளிப்படுத்தியது. ஆன்லைனில் புதிய படங்களை டவுன்லோடு செய்யும் கலாச்சாரம் திரைப்படத் துறையைப் பாதிக்கிறது என்பதையும், தன்னிடம் எதையும் மறைக்காத நேர்மை தன்மையையும் ஒரே நேரத்தில் அவர் வெளிப்படுத்தினார்.
மேடையில் இருந்த இயக்குநர் தினகரன் சிவலிங்கம் சிரித்தபடியே, இந்த சம்பவத்தை கடந்து சென்றார்.
இதற்கிடையில், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மூங்கில்வனம், குருவனம், தமிழ்வனம் அமைப்புகளின் உறுப்பினர்கள் பார்வையாளர்களின் எதிர்வினைகளை ரசித்து கொண்டனர். நிகழ்வின் முடிவில், திரைப்படத் துறையின் நிலை குறித்து பலரும் கருத்து தெரிவித்தனர்.
பின்னர், ஒருவரிடம் கேட்டபோது, “நிவிதாவின் பேச்சு இயல்பாக இருந்ததால் எல்லாரும் சிரித்துப் போய்ட்டோம். ஆனா உண்மையிலேயே இது ஒரு முக்கியமான விஷயம்” என்று கூறினார்.
தமிழ்நாட்டில் குடிநோயாளிகளின் எண்ணிக்கை பற்றிய சரியான தகவல்கள் எங்கும் அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், மதிப்பீடுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் மதுவுக்கு அடிமையாக இருப்பதாக கூறப்படுகிறது.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட 35 போதை மறுவாழ்வு மையங்களில், 2022-23ஆம் ஆண்டில் 3,668 பேர் சிகிச்சை பெற்றிருந்த நிலையில், 2023-24ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 15,938 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அங்கீகாரம் பெறாத பல மறுவாழ்வு மையங்களிலும் அதிகமானோர் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இங்கெல்லாம் ஏகப்பட்ட கதைகள் கொட்டிகிடக்கின்றன. அவர்கள் அனைவருமே எலைட்டுகள் கிடையாது. பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள்.
2015-16ஆம் ஆண்டில், 18 வயது நிறைவடைந்த ஆண்களில் 46.50% பேர் மதுவுக்கு அடிமையாக இருந்ததாகக் கணிக்கப்பட்டது. தற்போதைய சூழலில், இது 50% அல்லது அதற்கு மேல் அதிகரித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலைமையில், தமிழ்நாட்டில் மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை பெரும் உயர்வை கண்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமும் குடிக்கும் ஒரு குடிகாரர் வாழ்க்கையில் மன்னிக்கவும், ஒரு குடிநோயாளியின் வாழ்க்கையில் படும் துன்பங்கள், அவரால் அவரது குடும்பம் படும் பாடுகளை நகைச்சுவையாக சொல்லி ஒரு சோகமான கதையை நாம்மை சிரித்துக் கொண்டே பார்க்க வைத்து உள்ளார் இயக்குநர். கிளைமேக்சில் எதிர்பாராத ட்விஸ்ட் உள்ளது.
இப்படிப்பட்ட ஒரு படத்துக்கு தமிழ் நாட்டில் ஏன் பல இடங்களில் தியேட்டர் கிடைக்கவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் ஓடிடியில் இந்த தடை இல்லை. ஆஹா ஓடிடியில் ஸ்டிரிம் ஆகிக்கொண்டிருக்கிறது.