காதலர் தினத்திற்காக அவசர அவசரமாக எழுதிய ஒரு கட்டுரை...

காதல் என்பது மனித மனதில் ஒளிரும் அழகான உணர்வுகளுள் ஒன்றாகும். அது எந்த வயதிலும், எந்த நிலையிலும் தோன்றி, மனிதர்களை மாற்றி அமைக்கும் திறன் கொண்டது. காதல் ஒரு அன்பான பிணைப்பு மட்டுமல்ல; அது ஒரு மனித வாழ்வின் நோக்கத்தையும், மன அமைதியையும் தீர்மானிக்கக்கூடிய சக்தியாக செயல்படுகிறது.

காதல் பல்வேறு வகையாக அமைகிறது. குழந்தையின் மீது பெற்றோர்கள் கொண்ட அன்பு, நண்பர்களுக்கிடையே உள்ள உண்மையான பாசம், தம்பதியர் மத்தியில் உள்ள ஆழமான நேசம் – இவை அனைத்தும் காதலின் பல்வேறு முகங்களாகக் காணப்படுகின்றன. குறிப்பாக, காதல் என்பது இருவரை மட்டுமே இணைக்கும் பந்தம் அல்ல, அது மனிதாபிமானத்தையும், மனித உறவுகளின் நிலைத்தன்மையையும் உணர்த்தும் பேரொளியாகும்.

இன்றைய காலத்தில் காதலின் அர்த்தம் சில சமயங்களில் மாறி வருகிறது. சமூக ஊடகங்களின் வளர்ச்சியால், காதல் மேலோட்டமான ஒன்றாக மாறி விடுகிறது. ஆனால் உண்மையான காதல் என்பது நேர்மையான உணர்வுகளால் ஆனதாக இருக்க வேண்டும். அது ஒருவரை மாற்றவும், முழுமையான மனிதராக உருவாக்கவும் பயன்பட வேண்டும்.

காதல் என்பது வெறும் வார்த்தைகளில் சொல்ல முடியாத ஆழமான உணர்வு. அது வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் அழகாக்கும். உண்மையான காதலை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அதன் மகத்துவம் புரியும்.

சங்க காலத்தில் உள்ள காதலர்களின் மனநிலையை இயற்கையின் வழியாக நமது முன்னோர்கள் சித்தரித்து உள்ளனர். அகநானூறு பாடல்களில் காதல், காத்திருப்பு, களிப்பு என காதலின் பல்வேறு நிலைகளை குறித்த பாடல்கள் உள்ளன.
காதலர்கள் இடையே ஏற்படும் பிரிவு (தனி காதல்), குடும்ப ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலை, மணவாழ்வில் அனுபவிக்கும் சந்தோஷம் ஆகியவற்றைப் பற்றிய பல பாடல்கள் காணக்கிடக்கின்றன.

அதிலும், காதல் உறுதிப் பெறுவதற்காக பெண்கள் தம் காதலுக்காக மேற்கொண்ட தியாகங்கள் போன்றவைகள் அழகாக பறைசாற்றப்பட்டுள்ளன. சங்க காலத்தில் காதல் ஒரு தனிப்பட்ட உணர்வு மட்டுமல்ல, அது குடும்பத்துடனும், சமூகத்துடனும் இணைந்திருந்தது.

அகநானூறு தமிழர் வாழ்க்கையின் உண்மையான உணர்வுகளை பேசும் இலக்கியமாகும். அதன் பாடல்கள் காதலை மட்டுமல்ல, அதன் தாக்கத்தை, சமூகத்துடனான அதன் உறவை, தமிழர்களின் உண்மையான உணர்வுகளை பிரதிபலிக்கின்றன.

புறநானூறு சங்க காலப் போராட்டங்களை பிரதிபலிக்கும் சிறப்புமிக்க இலக்கியமாகும். இது முதன்மையாக வீரத்தையும், அரசியல் சூழலையும், வீரர்கள் வாழ்க்கையையும் பற்றிக் கூறுகிறது. ஆனால், இதற்குள் காதல் பாடல்களும் இடம் பெற்றுள்ளன.

புறநானூற்றில் காதல் பற்றிய பாடல்கள் பொதுவாக வீரர்களின் மனநிலையை வெளிப்படுத்துகின்றன. போர்களில் ஈடுபடும் வீரர்கள், தங்கள் இல்லத்தை, காதலியை நினைத்து வருந்தும் எண்ணங்களை புலப்படுத்துகின்றனர். காதலின் தன்மையும், அதன் தாக்கமும் இந்தச் செய்யுள்களில் வெளிப்படும்.

உதாரணமாக, ஒரு வீரன் போருக்குச் செல்லும் போது, அவனது காதலி அவனை பிரிந்து இருப்பதை தாங்க முடியாமல் வருந்துகிறாள். அவளின் எதிர்பார்ப்பும், இருவரின் உள்ளம் இணையும் ஆசையும் சங்க காலத்திலேயே கணிக்கப்படுகின்றன.

புறநானூற்றில் காதல் வெறும் உணர்வாக இல்லாமல், அது வீரத்துடனும் தியாகத்துடனும் சார்ந்திருக்கிறது. பல செய்யுட்களில், காதலர்கள் தங்கள் உறவை உணர்ச்சி வசப்படாமல், சமுதாயப் பொறுப்புடன் நடத்துகிறார்கள். இதனால், காதல், பொறுப்புணர்வும், நம்பிக்கையும் நிறைந்ததாக அமைந்திருக்கிறது.

புறநானூறு போர், அரசியல், வீரர்கள் போன்ற கருப்பொருள்களை மையமாக கொண்டாலும், அதற்குள் காதலின் நுண்ணிய உணர்வுகளும் இடம் பெற்றுள்ளன. வீரனின் போராட்டத்தையும், காதலியின் காத்திருப்பையும் சங்க இலக்கியம் நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளது.

    புறநானூறில் வரும் 245வது பாடலில்

யாங்குப்பெரிது ஆயினும், நோய்அளவு எனைத்தே

உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்

கள்ளி போகிய களரியம் பறந்தலை

வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து

ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி

ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை

இன்னும் வாழ்வல் என்இதன் பண்பே.
     என்ற வரிகள் வரும். அதில் மனைவியைப் பிரிவதால் தான் உறும் துன்பம் எவ்வளவு பெரியதாயினும், அது வலிமை அற்றது. அது என் உயிரை அழிக்கும் வலிமை இல்லாததால், அத்துன்பம் அவ்வளவு வலிமை உடையதன்று. கள்ளிச்செடிகள் வளர்ந்த களர் நிலமாகிய பாழிடத்தில், வெட்ட வெளியில், தீயினைப் பிறப்பிக்கும் கடினமான விறகுகளால் அடுக்கபட்ட, ஈமத் தீயின் ஒளிபொருந்திய அழற்படுக்கையில் படுக்கவைக்கப்பட்ட என் பெண் (மனைவி) மேலுலகம் சென்றாள். ஆனால், நான் இன்னும் வாழ்கின்றேனே! இந்த உலகத்தின் இயற்கைதான் என்ன? என மனைவியை இழந்த கணவரின் கையறு நிலையை அந்த பாடல் வரிகள் ஆண்டுகள் கடந்தும் அந்த வேதனையை கடத்துகின்றன.
     சங்க இலக்கியத்தின் காதல் கூறும் அகநானூறு, குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்ற நூல்களைப் போல அல்லாமல், புறநானூறு பெரும்பாலும் அரசியல், வீரர் வாழ்க்கை, விருந்தோம்பல் போன்ற விஷயங்களைப் பற்றியது. இருப்பினும், சில பாடல்கள் காதலின் சோகத்தையும், பிரிவின் வலியையும், வீரர்களின் தனிப்பட்ட உணர்வுகளையும் உணர்த்துகின்றன.

புறநானூறு நேரடியாக காதலை மையமாகக் கொண்டு அமைந்த நூல் அல்ல. ஆனால், அதில் வரும் சில பாடல்கள் காதலின் மர்மமும், அதன் வலியையும் உணர்த்துகின்றன. இவை சங்க காலத்து சமூகத்தின் காதல் பற்றிய பார்வையை வெளிப்படுத்துகின்றன.

சங்க காலத்திலிருந்து இன்று வரை காதல் பல மாற்றங்களை எதிர்கொண்டு வந்துள்ளது. இன்றைய காலக்கட்டத்தில், காதல் சமூக மாற்றங்களுடன் இணைந்து, புதிய வடிவங்களை பெற்றுள்ளது.

தற்கால காதல் சமூக ஊடகங்களால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. சங்க காலத்தில் காதல் கடிதங்களிலும், கவிதைகளிலும் வெளிப்பட்டிருந்தால், இன்று செல்போன்கள், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற ஊடகங்கள் காதலுக்குப் புதிய மொழியை வழங்குகின்றன.

மேலும், கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள் அதிகரித்ததால், காதலர்கள் தங்கள் உறவை அதிகமாக புரிந்துகொள்ள முயலுகிறார்கள். குடும்பங்களின் எதிர்ப்புகளும், சமூக கட்டுப்பாடுகளும் சில சமயங்களில் மாறிவருகின்றன. காதல் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன, ஆனால், சில நேரங்களில் குடும்பத்தினரின் சம்மதம் கிடைக்காமல் பிரச்சனைகளும் உருவாகின்றன.

தற்கால வாழ்க்கை வேகமாக நகரும் சூழலில், காதல் சில சமயங்களில் ஆழமான உணர்வை விட கண நேரத்து ஈர்ப்பாக மாறிவிடுகிறது. தொழில் வாழ்க்கை, சுயமரியாதை, தனிப்பட்ட விருப்பங்கள் ஆகியவை உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக காதல் உறவுகள் சில நேரங்களில் நீடிக்காமல் முடிவதையும் காண முடிகிறது. அல்லது மேலோட்டமான ஈர்ப்பில் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்தவர்கள் பலர் எதார்த்தத்தை சமாளிக்க முடியாமல் திணருகின்றனர்.

தற்காலத்தில் வேலைக்காக காதலர்கள் வெவ்வேறு இடங்களில் செல்வதால், நம்பிக்கை முக்கியக் காரணியாக மாறியுள்ளது. சமூக ஊடகங்களின் பெருக்கத்தால் எளிதாக தொடங்கி, எளிதாக முடிந்து  விடும் காதல்களும் அதிகரிக்கின்றன.
    தென் மாவட்டங்களில் சாதிய எண்ணம் இன்றும் மேலோங்கி இருப்பதை பார்க்க முடிகிறது.  இதனால் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஆண்- பெண் இருவரது காதல் கடும் எதிர்ப்பைச் சந்திக்கின்றன. இதனால் ஆணவக் கொலை அவலங்களும் நடக்கின்றன.
  மனிதன் காதல் கொள்வது இயற்கை. அந்த இயற்கைக்கு சமூகம், கலாச்சாரம் எதுவும் தெரியாது. அங்கு கட்டுப்பாடுகள் எனக் கூறிக் கொண்டு கலாச்சார போர்வையில் ஏற்படும் எதிர்ப்புகள் நமே ஏற்படுத்திக் கொண்டது. இந்த முரண்பாடுகளை சந்திக்கும் காதல் ஜோடிகள் இன்றும் உள்ளனர்.

    தற்கால காதலுக்கு மாறுபட்டதொரு அனுபவம், மாறுபட்ட பிரச்னைகள் இருந்தாலும், அதன் சுகமும், துக்கமும் மாறினாலும், உண்மையான உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பு இருக்கிறது. அதுதான் மனிதனை விலங்கிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அதனால், காதலை நேர்மறையாக யோசித்து, நம்பிக்கையுடன் நடத்திக்கொள்வதே உறவுகளை நீடிக்க செய்யும்.
    ----