ஒரு அரசு மருத்துவமனைதான் இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கடைசி நம்பிக்கை. இதில் ஏழை மக்கள் அரசு மருத்துவமனைகளை விட்டால் அவர்களது கிட்னிகளை விற்று மருத்துவ கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். தற்போது அரசு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய சட்டதிட்டங்களை கடுமையாக்கியதால், அதைச் செய்வதிலும் சிக்கல்தான்.
அரசு மருத்துவமனைகளில்தான் தனியாரை விடவும் அதிநவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. திறமையான மருத்துவர்கள் இருக்கிறார்கள். இருந்தும் பிரச்சினை இருக்கிறது.
<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->
முதல் பிரச்சினை தீவிர பிரிவை தவிர அனைத்து பிரிவுகளும் காலை முதல் மதியம் வரை தான் இயங்கும். வயிற்று வலியுடன் ஒருவர் மதியம் 2 மணிக்கு மேல் அரசு மருத்துவமனைக்குச் சென்றால் அடுத்த நாள் காலை வரை வலியுடன்தான் இருக்க வேண்டும். அல்லது தனியாரில் தண்டம் அளக்க வேண்டும்.
அடுத்து துண்டு சீட்டு. ஓ.பி. சீட்டில் ஆரம்பித்து இரத்த பரிசோதனை சீட்டு, ஸ்கேன் சீட்டு என மளமளவென துண்டு சீட்டுகளை நீட்டுவார்கள் மருத்துவ பணியாளர்கள். ஒன்று தொலைந்தாலும் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பமாகும். எவ்வளவோ தொழில்நுட்பங்கள் வந்தாலும் அரசு மருத்துவமனைகள் இந்த துண்டு சீட்டுகளைக் கட்டிக்கொண்டு அழுகிறது.
அடுத்து நிர்வாகம். தீவிர பிரிவு உட்பட எந்த பிரிவை எடுத்தாலும் பதிவு செய்ய நீண்ட வரிசை இருக்கும். அங்கு பதிவு செய்யப்படும் கணினியில் நெட்வொர்க் பிரச்சினை இருக்கும்.
முன்பெல்லாம் நினைப்பதுண்டு இந்த அரசு மருத்துவமனைகளில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்து பலர் மீண்டு வருகிறார்களே என்று. பின்னாளில் தான் தெரிந்தது நோயாளிகள் குறைந்த ஆபத்து நிலையில் இருந்து மிக ஆபத்து நிலைக்கு சென்றதற்கு காரணமே மருத்துவமனை நிர்வாகம் என்று.

ஓ.பி.யில் நீண்ட வரிசையில் நின்று பதிவு செய்த பிறகு பொது மருத்துவ பிரிவில் மருத்துவ ஆலோசனை பெறச் சென்றால் அங்கும் ஒரு நீண்ட காத்திருப்பு தேவைப்படும். அதைத்தொடர்ந்து அங்கு வழங்கப்படும் ஆலோசனைக்கு ஏற்ப சிறப்பு மருத்துவரை சந்திக்க சென்றால் அங்கும் நீண்ட வரிசை இருக்கும். இதையெல்லாம் கடந்து டாக்டர் பரிந்துரைப்படி ஸ்கேனோ அல்லது இரத்த பரிசோதனை செய்யவோ சென்றால் அங்கும் கூட்டம்.
மொத்தத்தில் ஒரே நாளில் சிகிச்சையை மேற்கொள்ளவே முடியாது. மருத்துவமனைகளில் நிலவும் கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு சிகிச்சை பெற்று திரும்பும் நோயாளிக்கு கடைசியில் மிஞ்சுவது என்ன தெரியுமா மன உளைச்சல்தான்.
இந்த பிரச்சனைகள் ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு தெரிந்திருக்காது. அதுபோலத்தான் இங்கிருக்கும் எலைட் மக்களுக்கும் தெரியாது. அட அதுகூட பரவாயில்லை அந்த 'பாலிசி மேக்கருக்குமா' தெரியவில்லை.

எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்க பதிவு செய்யும் இடம்.