அந்த நள்ளிரவில் தூக்கமின்றி கூவம் ஆற்றைக் கடந்து சென்று ரோட்டுக்கடையில் டீ குடிக்கும் போது, அவளுடனான முட்டாள்தனமான இரவு நேர உரையாடல்கள் ஒரு விதமான போதையையும், மனதை பிழியும் துயரத்தையும் தந்தன.
கருமைநிற சாக்கடையை சுமந்தபடி செல்லும் கூவம் ஆறு, மனதில் தேங்கி நிற்கும் கசடுகளோடு துயருற்றிருப்பவர்களின் வடிகாலாகத் தோன்றும்.
<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->
அவளுடன் ஆன்ராய்டில் மூழ்கி இறக்கப்போகும் என்னை, மீட்கும் ஒரே இடமாக, அழுக்கு நிறைந்த கூவம் இருப்பதை அறிந்து வியப்பேன்.
இறந்து போன இந்த ஆற்றை மீண்டும் உயிரெழுப்ப ஏராளமான திட்டங்கள் கிடப்பில் உள்ளது போல், அவளது வாட்ஸ்அப் தகவல்களும் அப்போது கிடப்பில் கிடக்கும்.
பதிலில்லாமல் விரக்தியின் அடிஆழத்தில் இருப்பவளை மீண்டும் சமாதானப்படுத்துவதற்குள், அவள் மீதான அன்பு என்னை முற்றிலுமாக அரித்துக்கொண்டிருக்கும்.
அவளிடமிருந்ததும், ஆன்ட்ராய்டியிலிருந்தும் கண நேர விடுதலையை, கூவம் தந்தது. ஆனால் பல கிலோ மீட்டருக்கு அப்பால் மனிதக்கூட்டத்தில் அடைப்பட்டிருக்கும் அவளுக்கு அது கிடைத்திருக்காது.
அவளுக்காகவேனும் அவளை இங்கே அழைத்து வரவேண்டும். அவளிடம் இந்த ஆற்றை அனைவரும் சேர்ந்து எப்படி சாகடித்தார்கள் என்பதை விடியும் வரை சொல்ல வேண்டும். நள்ளிரவில் கூவத்தின் மடியில் நானும், அவளும், கூவமுமாக அதன் சோகத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்...
சரளை மண் நிறைந்த, ஆங்காங்கே பாலைவனத்தை நினைவுப்படுத்தும் கள்ளிச் செடிகளைக் கொண்ட மிகப்பெரிய நிலப்பரப்பில், கணுக்கால் புதையுமளவிற்கு மணல் நிறைந்த, மரங்கள் சூழ்ந்த விசித்திரமான பகுதியைச் சேர்ந்தவள்தான் அவள்.
அந்த மணலில் புதைந்த எனது நினைவுகளை, தெரிந்தோ தெரியாமலோ அவளின் வருகை கிளறிவிட்டது. அந்த மரத்தின் வேர்கள் நாங்கள் பேசியதை, சண்டையிட்டுக்கொண்டதை, விளையாடியதை நினைவில் வைத்திருக்கக் கூடும்.
எங்களின் கண்ணாமூச்சு விளையாட்டுக்கு, அந்த ஒரு மரமே போதுமானதாக இருந்தது. ஒருவரை ஒருவர் தேடி, களைத்து வீடு திரும்பியதை நினைத்து, அவளும் சிரித்திருக்கக் கூடும். ஆனால் இம்முறை இந்த விளையாட்டு மிக நீண்ட காலம் நீடித்து விட்டது. எப்போதும் போல நான் அவளைத் தேடி களைத்துவிட்டேன்.
பள்ளி செல்லும் போது, தூரத்தில் மேற்கு வான அடிவாரத்தில் பார்த்து ரசித்த, உயர்ந்து வளர்ந்திருந்த மலை உச்சி இப்போதும் அவளை நியாபகப்படுத்தும்.
தெரிந்தோ தெரியாமலோ அவளின் வருகை செய்தி என்னை மீண்டும் முதலில் இருந்து பயணிக்க வைத்து விட்டது.
நீண்ட பிரிவுக்குப் பிறகு நடைபெற உள்ள அவளுடனான சந்திப்பு, என்றோ நடந்து மங்கிப்போன எனது நினைவுகளை மீண்டும் அசைபோட வைத்தோடில்லாமல், காலத்தின் தூரத்தை துரத்த எத்தனித்தது.
அதே பள்ளி, அதே மரம், அவளும் வந்தாள், அவனும் வந்தான்.