காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள நம் நாட்டின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலையில் காரிலோ, பைக்கிலோ சென்றால் சாலையோரத்தில் ஆங்காங்கே டீக்கடைகளையும், உணவகங்களையும் அதிகமாக பார்க்கலாம். அங்கே சென்று நாம் கையோடு கொண்டு சென்ற கட்டுச்சோறை சாப்பிட முடியுமா?. முடியாது.
 
ஒரு நெடுந்தூர பயணத்தின் போது வீட்டுச்சாப்பாடை நினைத்துப் பார்க்கவே முடியாது. காரணம் உட்கார்ந்து சாப்பிட ஒரு நல்ல இடம் நம் நாட்டிலேயே இல்லை.
இந்தியா சுதந்திரமடைந்த பிறகுதான் நமக்கெல்லாம் இந்த நிலைமை. ஏறக்குறைய 16, 17ம் நூற்றாண்டுகளில் இந்த பிரச்சினையே இல்லை என்றால் நம்ப முடிகிறதா? அப்படிதான் இருந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் அடித்துச் செல்கிறார்கள்.

<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->

வழிப்போக்கர் மண்டபம்

அதற்கு காரணம் நீங்கள் பார்த்த இந்த படம்தான். தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் இதுமாதிரியான கல் மண்டபங்கள் அதிகமாக இருக்கின்றன. அனைத்தும் சிதிலமடைந்துதான் இருக்கின்றன என்பது வேறு பிரச்சினை.
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் பொன்னாக்குடி என்ற ஊருக்கு அருகே சாலையோரம் ஒரு கல் மண்டபம் உள்ளது. இதுபோன்ற கல் மண்டபங்கள் பாண்டியர்கள், நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்டது என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த கல் மண்டபம் எந்த காலத்தியது என்பது தெரியாது.

  பொதுவாக இதுபோன்ற கல் மண்டபங்கள் வழிபோக்கர்களின் வசதிக்காக நீர்நிலைகள் அருகிலோ அல்லது கிணற்றின் அருகிலோ அப்போதைய அரசுகள் அமைத்திருந்தன. 16 முழம் வேஷ்டியை உடல் முழுவதும் கட்டிக்கொண்டு வீட்டிற்கு தேவையான காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அதே வேஷ்டியில் சிறு பொட்டலங்களாக சுருட்டி தொங்க விட்டுக்கொண்டு நெடுந்தூரமாக நடந்தே சென்றவர்களுக்கு இந்த கல் மண்டபங்கள்தான் இளைப்பாறுதல். கையோடு கொண்டு வந்த கட்டுச்சோறை அங்கு அமர்ந்து வயிராற சாப்பிட்டு, ஒரு குட்டி தூக்கத்தை போட்டு செல்வதற்கு பலர் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இதற்கு மணி மண்டபம் என்ற பெயரும் உள்ளதாகவும் வரலாற்று ஆய்வறிஞர்கள் கூறுகிறார்கள். நெல்லையில் உள்ள குற்றாலநாதர் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பூஜையாவதை மணி அடிப்பதன் மூலம் ஒவ்வொரு கல் மண்டபங்களிலும் அடுத்தடுத்து மணி அடித்து ஒலியை மதுரை வரை கடத்துவார்கள் என்றும் அதன் மூலம் மதுரை நாயக்கர் கோவிலில் பூஜையாவதை அறிந்துகொள்வார் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
  அப்போது மட்டுமல்ல இப்போதும் இது போன்ற கல்மண்டபங்களின் தேவை உள்ளது. சில நேரங்களில் மணிக்கணக்கில் கார் ஓட்டும் டிரைவர்களுக்கு களைப்பின் மிகுதியால் கண்கள் இருண்டு விடும். அவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள இந்த கல்மண்டபங்கள் அவசியம்.
 
  இன்றைய காலகட்டத்தில் இளைப்பாற பொட்டல் காட்டிலும் பெரிய பெரிய மோட்டல்கள் உருவாகிவிட்டன.  அங்கேல்லாம் எல்லோராலும் சென்று விட முடியுமா என்ன?. அரசு இதை கவனத்தில் கொண்டு வழிப்போக்கர்கள் அமர்ந்து செல்ல இந்த மண்டபங்களை மீண்டும் மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.