சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 43வது புத்தகக் காட்சி நடந்து வருகிறது.
<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->
இந்த புத்தகக்காட்சியில்தான் 'கூடாது அறிவிப்புகள்' அதிகம் வெளிவருவதாக பதிப்பகத்தார்கள் புலம்பினர்.
அரசை விமர்சித்த பதிப்பகத்தின் ஒரு அரங்கு சில நாட்களுக்கு முன் மூடப்பட்டது. ஒருவிதமான மூடி மறைக்கிற அடக்குமுறையில் அங்கிருந்த அரங்குகள் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தன.

வழக்கம்போல் பொங்கலன்றும் மேடையில் பேசுவதற்காக சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
பேச்சாளர் பர்வீன் சுல்தான் மேடையில் ஒரு மணி நேரங்களுக்கு மேலாக பேசிக்கொண்டிருந்தார்.
அவர் மேடைக்காக எதையும் பேசவில்லை என தானே குறிப்பிட்டு, தனி மனிதருக்காக, தனிமனித முன்னேற்றத்திற்காக நீண்ட நேரம் பேசினார்.
அரங்கம் நிறைந்திருந்த மக்கள் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தனர். அவருக்கு அடுத்ததாக சென்னை, புதிய கல்லூரியின் தத்துவப் பேராசிரியரான ஆறுமுகத்தமிழன் பேசத் துவங்கினார்.
அரசுக்கு எதிரான அரசியலை, வர்க்கப் பாகுபாடுகளை நேரடியான வார்த்தைகளால் அனைவருக்கும் புரியும்படி பேசினார்.
"நீதிமன்றங்களில் சில நீதிபதிகளுக்கு தமிழ் புரியாததால், தமிழ் இன்னும் வழக்காடு மொழியாக இல்லாமல் இருக்கிறது.
'தேங்காய் கொடுக்கிறேன்' என்பதை 'தேங்காய் ஸமர்ப்பயாமி' என்று சொன்னால் தான் கடவுள்களுக்கே புரியும்."
அவரது இந்த பேச்சுக்கள் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும், அதிகாரத்திற்கு நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்கும் நெருக்கடி ஏற்படுத்தி இருக்கக் கூடும்.
புத்தகக் காட்சிக்கு ஏற்பாடு செய்த பபாசி, காவல் ஆய்வாளர் தலைமையில் சில போலீசாரை அனுப்பியது.
அவர் பேச ஆரம்பித்து, 20வது நிமிடத்திற்குள் நிகழ்ச்சி தொகுப்பாளர் நேரம் முடிந்துவிட்டது என குறிக்கிட்டார்.
நிலைமையை உணர்ந்தார்; சொல்ல வந்த கருத்தை பாதியில் நிறுத்தி, மேடையை உதறி, அங்கிருந்து வெளியேறினார்.
அதன்பின் அவர் எதுவும் பேசவில்லை. அவரது பேச்சைக் கேட்டவர்கள் பேசத் துவங்கினர்.
கூட்டம் கூடியது; பபாசி அலுவலக அரங்கு முன், அதிகாரத்தை எதிர்த்து பேசிய ஆறுமுக தமிழனுக்கு பாராட்டு விழா நடந்தது.
"அரசியல் பேசக்கூடாது என்றால் இந்த அரங்கில் இருக்கும் அரசியல் புத்தகங்களை தீயில் எரிப்பீர்களா?."
அந்தக் கூட்டத்தில் ஒரு இளைஞனின் குரல் மட்டும் ஓயாது ஒலித்துக் கொண்டிருந்தது.