மாதச் சம்பளத்தில் வேலை பார்க்கும் எவரும் அந்த வேலையை எளிதில் விடமாட்டார்கள். அதிலும் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் என்றால் கேட்கவே வேண்டாம்.
ஆனால் அப்படிப்பட்ட வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சென்னை, ஆவடி அடுத்த பாண்டேஸ்வரத்தைச் சேர்ந்த ரேகா ராமு, 37.
<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->
அவர் விட்டது பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பிரபல பன்னாட்டு நிறுவனத்தின் வேலையை.
அவர் தொட்டது இயற்கை விவசாயத்தை. 2014ம் ஆண்டில் இருந்து இயற்கை விவசாயத்தை முழு நேர வேலையாக செய்து வருகிறார்.
2019ம் ஆண்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், 260 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்த கிராமத்தின் ஊராட்சி தலைவியானார்.

பன்னாட்டு ஊழியராக இருந்து பஞ்சாயத்து தலைவியானதற்கு காரணமான அவரது அசாத்தியமான முடிவுகள் என்னை மட்டுமல்ல பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
அவரது வயலில் 15 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பாரம்பரிய தூயமல்லி நெல் அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருந்தது.
அன்று ஒரு நாள் விதை நெல்லும், நெற்கதிருமாக நின்ற அவர் சில நிமிடங்கள் நம்மிடையே பேசினார்.
"எனக்கு பூர்வீகம் காஞ்சிபுரம், மதுராந்தகம் அருகே உள்ள புத்திரன்கோட்டை; பி.காம், எம்.பி.ஏ. முடித்த கையோடு ஐ.டி.நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

கை நிறைய சம்பளம்; வாழ்க்கை அப்படியே சென்றுவிடும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், எனது கணவர் பார்த்தசாரதியை சந்தித்த பின்பு அனைத்தும் மாறியது. அவரும் ஐ.டி.நிறுவனத்தில் விற்பனைப் பிரிவு மேலாளராக பணியாற்றி கொண்டிருந்தார். எங்களுடைய இருவரது குடும்பங்களும் விவசாய குடும்பங்கள்தான். ஆனால் நாங்கள் விவசாயத்திற்கு தொடர்பில்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தோம்.
பிரபல ஐ.டி. நிறுவனத்தில் மேலாளராக பதவி உயர்வு பெற்று, மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைத்தது.
இருந்தும் அந்த வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். அதற்கான காரணமும் இருந்தது;
ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்ட எங்களுக்கு, அடிக்கடி உடல் உபாதைகள் வந்துகொண்டிருந்தன. எனது கணவர் தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்பட்டார்.
காரணங்களை தீவிரமாக தேட ஆரம்பித்தோம். அப்போதுதான் விவசாயத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட எங்களுக்கே ரசாயன கலப்பில்லாத உணவுப் பொருள் கிடைப்பது அரிதாகி கொண்டிருந்தது என்பதை அறிந்தோம்.
ரசாயன பூச்சி கொல்லி மருந்துகளால் உணவுப்பொருட்களில் 'மோனோகிரோட்டோபஸ்' சென்ற ரசாயன கலப்பு அதிகமாகி இருந்தது. இதனை சாப்பிடுவது விஷத்தை சாப்பிடுவதற்கு சமம்.
அப்போதுதான் இயற்கை விவசாயம்; இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழ முடிவு செய்தோம். அதன்பின்தான் நானும், எனது கணவரும் அந்த வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்தோம்.
இயற்கை விவசாயம் செய்யவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் எங்கிருந்து எப்படி துவங்க வேண்டும் என்று தெரியவில்லை. இயற்கை விவசாயிகளை தேடிச் சென்று அனுபவங்களை தெரிந்துகொண்டோம். இதில் எனது கணவர் தீவிரமாக செயல்பட்டார்.
இதற்கிடையில் நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்தோம். அவர் இயற்கை விவசாயம் குறித்த அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வைத்து, வழிகாட்டினார்.
முதன்முதலில் குறுகிய கால பயிரான கீரை வகைகளை 3 ஏக்கருக்கு பயிரிட்டோம். அப்போது பயிரிட்ட 12 வகையான கீரை வகைகளும் நன்கு வளர்ந்து நல்ல லாபம் கிடைத்தது. அதன்பிறகுதான் எங்கள் குடும்பத்தில் உள்ளோருக்கே இயற்கை விவசாயத்தின் மீது நம்பிக்கை வந்தது.
அப்போது எங்களுக்கு லாபம் கிடைத்தாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெரிதாக ஏதும் இல்லை. முற்றிலும் இயற்கை முறையிலான உணவு பொருளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே பிரதானமாக இருந்தது.
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். லாபம் இல்லாமல் இல்லை. விவசாய பொருட்களை சந்தைப்படுத்துவதில் விவசாயிகளுக்கு எப்போதுமே சிக்கல் இருக்கிறது. இதனால் நிலத்தில் போட்ட பணத்தை திரும்பப்பெற முடியாமல் திணறிய விவசாயிகள் பலரைச் சந்தித்துள்ளோம்.
அதற்கு தீர்வு காணும் முயற்சிதான் எங்களது 'பார்மர் & கோ' நிறுவனம். இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளிடமிருந்து விளை பொருட்களை பெற்று, பெரிதாக 'மார்ஜின்' இல்லாமல் விற்பனை செய்து வருகிறோம்.
இயற்கை விவசாயம்; கிராமத்தோடு வாழ்க்கை. அப்போதுதான் கிராமங்களின் அவல நிலை தெரிந்தது. முன்பெல்லாம் கிராமங்களில் வீட்டிற்கு வீடு வாழைமரம், காய்கறி செடிகள் பரவலாக இருக்கும். கிராமங்ளின் தனித்த அடையாளமே இயற்கையோடு இணைந்த வாழ்வுதான்.
ஆனால் இப்போதெல்லாம் அந்த வாழ்க்கை முறை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. ஏரியில் மணற்கொள்ளை, செங்கற்சூளைகள் போன்றவை விவசாயத்திற்கு அச்சுறுத்தலாக மாறிக்கொண்டிருக்கிறது.
ஊரில் எதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்கு உள்ளூர் அரசியல்வாதிகள் சிலர் தடையாக இருந்தனர். அப்போதுதான் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்தது.
எனது கணவரின் அப்பா, தாத்தா அனைவருமே அரசியலில் நீண்ட அனுபவமும், மக்கள் மத்தியில் செல்வாக்கும் கொண்டவர்கள். ஊருக்காக நிறைய நல்லது செய்துள்ளனர்.
மேலும், தற்போது ஊராட்சி தலைவர் பதவி பொது-பெண்கள் பிரிவில் இருந்ததால் போட்டியிட வாய்ப்பும், நம்பிக்கையையும் ஏற்பட்டது.
உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்தேன். எனது கணவரும் உறுதுணையாக இருந்தார்.
மக்களை நேரடியாக சந்தித்து களப்பணியாற்றினோம். அவர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து, 260 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தனர்."
என்று அவர் கூறி முடிக்கும்போது, அவரது அசாத்தியமான முடிவுகள் அரசியலிலும் மாற்றத்தைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை வந்தது.
