ஆவடி அடுத்த பாண்டேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் நடிகர் இளம்பாரதி, 33.
'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' என்ற திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
'மை டியர் குட்டிசாத்தான்', 'மாயா மச்சிந்திரா 'காத்து கருப்பன்' உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்து குழந்தைகளின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர்.
இதுவரை, 20 திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மேடை நிகழ்ச்சிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
ஆவடி அருகே திருநின்றவூரில் சமீபத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் நடனமாடிக்கொண்டிருந்தவரிடம் சில நிமிடங்கள் பேசினோம்.

அவர், தனது வாழ்க்கை அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
உங்களது பூர்வீகம் பற்றி சொல்லுங்களேன்?
அப்பா பெயர் சாமிக்கண்ணு; அம்மா மரியாள். எனக்கு அண்ணன், அக்காள், இரண்டு தங்கைகள் உள்ளனர்.
எங்கள் வீட்டில் நானும், அண்ணனும் தான் இப்படி இருக்கிறோம்.
எல்லோரும் சொல்கிறார்கள் அப்பா- அம்மா சொந்தத்திற்குள் திருமணம் செய்ததால்தான் இப்படி பிறந்து விட்டோம் என்று.
அதை நான் பெரிதாக பார்க்கவில்லை.
எங்கள் ஊரில் உள்ள அரசு பள்ளியில் படித்தேன். பத்தாம் வகுப்பு தேர்வில் 'பெயில்' ஆனதால் தொடர்ந்து படிக்க விருப்பம் இல்லாமல் போய்விட்டது.
சினிமாவிற்குள் நுழைந்தது எப்படி?
பத்தாம் வகுப்பு 'பெயில்' சான்றிதழை வைத்துக்கொண்டு பல இடங்களில் வேலை தேடி அலைந்திருக்கிறேன்.
அப்போது படிக்காமல் போனதை நினைத்து பலமுறை வருத்தப்பட்டு இருக்கிறேன்.
மொபைல்போனில் பேசும்போது வேலைக்கு வர சொல்லி அழைப்பார்கள். நேரில் சென்ற போது உருவத்தைப் பார்த்து திருப்பி அனுப்பிவிடுவார்கள்.
அப்படி சுற்றிக்கொண்டிருந்த போது தான் என்னைப்போன்ற நண்பர் கோபி சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொடுத்தார்.

சினிமாவிற்குள் வரலாமா?
நான் இதுவரை, 20 திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நான் நடித்த காட்சிகள் 'எடிட்டிங்கில்' நீக்கப்பட்டிருக்கிறது.
அதற்காக வருத்தப்படவில்லை. ஆனால் சினிமாவையே வாழ்க்கையாக நினைத்து இளைஞர்கள் வரக்கூடாது என்பதுதான் என் கருத்து. அது ஒரு பொழுதுபோக்கு.
வாய்ப்பு கிடைக்கும்போது நடித்து விட்டு வேறு வேலையைப் பார்த்து சென்றுவிட வேண்டும்.
மேடை நிகழ்ச்சி வாழ்க்கைப் பற்றி கூறுங்கள்?
'மரியாள் ரிதம்ஸ்' என்ற நடன குழு நடத்தி வருகிறேன். 22 பேர் இந்த குழுவில் உள்ளோம்.
சினிமாவில் வாய்ப்பு இல்லாத போது மேடை நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறேன்.
மேடை நிகழ்ச்சிகளுக்காக ஒவ்வொரு ஊருக்கும் பயணப்படுகிறேன்.
ஒவ்வொரு பயணத்திலும் கிடைக்கும் அனுபவம் வேறு வேறானவை. ஒரு ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகள் கிடைக்காமல் கூட அவதிப்பட்டு இருக்கிறேன். இதுவெல்லாம் சேர்ந்ததுதான் வாழ்க்கை.
மாற்றுத்திறனாளிகள் பற்றிய சமூகத்தின் பார்வை எப்படி இருக்கிறது?
மாற்று திறனாளிகள் பற்றி இச்சமூகம் பேசுவது ஒன்றாகவும், அவர்களிடம் நடந்து கொள்வது ஒன்றாகவும் உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிகளாகட்டும், பேருந்தில் ஒதுக்கப்பட்ட இருக்கையாகட்டும், அதை நடைமுறைப்படுத்துவதில் இன்னுமே சிக்கல் உள்ளது.
மக்கள் மனதில் மாற்றுத் திறனாளிகளுக்காக ஒரு மாற்றம் வரவேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்காக வழங்கப்படும் உதவித்தொகை பெறுவதில் கூட ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. அதனை எளிமைப்படுத்த அரசு முன்வர வேண்டும்.
உங்களது எதிர்கால திட்டம் பற்றி கூறுங்கள்?
ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது எனக்கு இந்த பிரச்சனை இருப்பது தெரியவந்தது. அப்போது எனது குடும்பத்தினர் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்கள்.
நடனம் ஆடுவது எனக்கு பிடிக்கும்; இன்னும் ஆழமாக கற்று வருகிறேன். அதையே தொடர்ந்து செய்வேன். நான்கு சுவற்றுக்குள் வாழ்க்கை முடிவதில்லை. வெளி உலகில் நான்கு பேருடன் பழகினால் நமது திறமை வெளிப்படும். மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறன் படைத்தவர்கள்.
