சென்னையின் சாலையோரத்தில் பசியினால் வாடும் ஆதரவற்றோர்களையும், முதியோர்களையும் கவனிக்க மறந்திருப்போம்.
ஆனால் சாலையோர ஆதரவற்றோருக்கு உணவு அளிப்பதையே தனது அன்றாட வேலையாக்கிக் கொண்டவர், பெரம்பூரைச் சேர்ந்த பானுப்பிரியா, 29.
ஒரு நாளைக்கு 10 கிலோ அரிசி; 100 பார்சல்; அதை வினியோகிக்க 17 பேர் கொண்ட நண்பர்கள் குழு; ஒருங்கிணைக்க ஆதரவு அறக்கட்டளை என அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார்.
தினசரி தயிர் சாதம், லமன் சாதம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவை பார்சல் செய்து பெரம்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் ஆதரவற்றோர்களைத் தேடிச் சென்று உணவு அளித்து வருகிறது அவரது குழு.
ஆதரவு அறக்கட்டளையில் தற்போது, அவரது கல்லூரி நண்பர்கள், உறவினர்கள் என, 100 பேர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அவர்கள் ஒவ்வொருவரும் தினசரி 10 ரூபாய் வீதம் மாதத்திற்கு 300 ரூபாய் என பங்களிப்பு செய்கின்றனர்.
இதுபோக சமூக வலைதளங்கள் வாயிலாக தன்னார்வலர்கள் பலர் ஏதாவது ஒரு வகையில் ஆதரவற்றோருக்கு உதவி புரிய, ஆதரவு அறக்கட்டளையுடன் இணைந்து ஒரு இயக்கமாக தொடர்ந்து செயலாற்றி வருகின்றனர்.
வாகனங்கள் பரபரப்பாக இயங்கிய அந்த மதிய வேளையில், ஆதரவற்றோருக்கு அமைதியாக உணவு எடுத்து வைத்துக் கொண்டிருந்த பானுப்பிரியா நம்மிடம் கூறியதாவது:
"நான் பத்தாம் வகுப்பு படித்தபோது தினமும் பெரம்பூர் ரயில் நிலையம் வழியாக பள்ளிக்குச் செல்வேன்.
அங்கு நடைமேடையில் ஒரு பாட்டி அமர்ந்திருப்பார். அவர் தினமும் என்னைப் பார்த்து சிரிப்பார். நானும் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே பள்ளிக்குச் செல்வேன்.
ஏனோ தெரியவில்லை எனக்கு அவரை பிடித்து விட்டது. தினமும் ஒரு ரூபாய் சேர்த்து, 10 ரூபாய் வந்தவுடன் அவரிடம் கொடுக்க அங்கு சென்றேன்.
ஆனால் அந்த பாட்டி பணத்தை வாங்க மறுத்து என்னுடன் சிறிது நேரம் பேசினால் போதும் என்றார்.
நான் அந்த பாட்டியுடன் பழகினேன். எங்கள் வீட்டில் இருந்து கூடுதலாக ஒரு 'டிபன் பாக்ஸில்' உணவு எடுத்து வந்து கொடுத்தேன்.
அதையே தினசரி வழக்கமாக்கிக் கொண்டேன். என்னைப் பார்த்த மேலும் சிலர் அந்த பாட்டிக்கு உணவு அளிக்க முன்வந்தனர்.
நான் செய்த அந்த செயல், அந்தப் பாட்டிக்கு என்னால் உணவு அளிக்க முடியாத நாட்களில் கூட வேறு சிலர் உணவு அளித்தனர்.
இது ஒருவித சந்தோஷம், நிம்மதியை கொடுத்தது. அதாவது ஒன்றை ஆரம்பித்தால் அதைத் தொடர்ந்து செய்ய இன்னும் அதிகமானோர் வருவர் என இச்சம்பவம் எனக்கு உணர்த்தியது.
கல்லூரியிலும் நண்பர்களுடன் ஆதரவற்றோருக்கு உதவுவதை தொடர்ந்தேன். நான் இவ்வாறு செய்வதை எனது அப்பா நேருவும், அம்மா ஜெயந்தியும் ஆதரித்து பக்கபலமாக இருந்தனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தினசரி 100 பேருக்காவது உணவளித்து விட வேண்டும் என, அம்மா, அப்பா, பக்கத்து வீட்டுக்காரர்கள், நண்பர்கள், சமூக வலைதள தன்னார்வலர்களுடன் இணைந்து தீவிரமாக வேலை செய்து வருகிறேன்.
எனது கணவர் ராஜ் திலக்கும் இதற்கு தடை போட்டதில்லை. எல்லோருக்குமே கருணை உள்ளம் உள்ளது. அதை ஏதோ ஒரு வகையில் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். நாங்கள் அதன் முழுவடிவமாக இருக்கிறோம்.
எங்களது சமூக வலைதள வீடியோக்களை பார்த்து 'உணவை நானும் வினியோகம் செய்கிறேன்' என வந்தவர் சுரேஷ் அண்ணா. அவர் ஒரு ஆட்டோ ஓட்டுனர். அவர் திருவொற்றியூர் வரை உணவு வினியோகம் செய்வார்.
எனது அம்மா தினசரி உணவை தயார் செய்துவிடுவார். இரண்டு மணி நேரங்களில் நாங்கள் உணவை பார்சல் செய்து, வினியோகம் செய்துவிடுவோம்.
இதைச் செய்ய நாள் முழுவதும் செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் அரசு அனுமதியுடன் ஆதரவு அறக்கட்டளை துவங்கினோம். இன்று ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவிற்கு 4,500 ரூபாய் வரை செலவு செய்கிறோம். அறக்கட்டளையுடன் இணைந்த பலரின் உதவியால்தான் இதை எங்களால் செய்ய முடிகிறது.
செலவுகளைக் குறைப்பதற்காக, வீட்டு சுப நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவுகளை சேகரித்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிக்கனமாகவும், அதிகமான ஆதரவற்றோருக்கு உதவவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்."
என்றார் அமைதியாக...