சென்னை, திருமுல்லைவாயலில் 24 மணிநேர காவலாளி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட நவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட வி.ஜி.என். அடுக்குமாடி குடியிருப்பில் 80 சவரன் நகைகள், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->
இந்த குடியிருப்பில், நான்கு மாடி கட்டடங்களாக 600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, 'ஐ' பிளாக்கில் இரண்டாவது தளத்தில் மகனுடன் வசித்து வருபவர் வைஜெந்திமாலா பாய், 49. இவரது கணவர் துபாயில் வேலை செய்து வருகிறார்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்தினருக்கும், குடியிருப்பு சங்கத்தினருக்கும் பல மாதங்களாக மோதல் போக்கு நிலவிவந்துள்ளது. இதனால் பாதுகாப்பு பணி மேற்கொள்ள காவலாளிகளை நியமிப்பதில் குளறுபடிகள் நிகழ்ந்ததாக பரவலாகப் பேசப்படுகிறது.
தினசரி, 80 காவலாளிகள் இரவு, பகலாக விசிலடித்துக்கொண்டே காவல் காப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் வைஜெந்திமாலா பாய், மகனுடன் 2019, டிச.,10ம் தேதி வீட்டை பூட்டி விட்டு அவரது மகளைப் பார்க்க பெங்களூரு சென்றுள்ளார்.
சரியாக, 23 நாட்கள் கழித்து 4ம் தேதி மதியம் வீட்டிற்குச் சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
வீட்டு இருக்கைகளில் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. கழிப்பறை ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்தன. பீரோவில் இருந்த, 80 சவரன் நகை, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர 'நெக்லஸ்', வைர மோதிரம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
திருமுல்லைவாயல் போலீசார் தகவல் அறிந்து, விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், நான்கு மாடி கொண்ட அந்த குடியிருப்புக் கட்டடத்தின் மாடியிலிருந்து, கழிப்பறை குழாயை பிடித்தபடி மர்மநபர்கள் இறங்கிய தடயங்கள் கிடைத்துள்ளன.
அங்கிருந்து, இரண்டாவது தளத்தில், வைஜெயந்திமாலா பாய் வீட்டின் கழிப்பறை ஜன்னலை உடைத்து உள்ளே சென்று, பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து தப்பியது தெரியவந்துள்ளது.
மேலும் இதே பாணியில் இரண்டு மாதங்களுக்கு முன், அதே பகுதியில் ஜனனி, 24 என்பவரது வீட்டில் 20 சவரன் நகை திருடு போனது.
கண்காணிப்பு கேமரா பதிவுகள் தெளிவாக இல்லாததால் இந்த இரண்டு சம்பவங்களிலும் மர்ம நபர்களின் நடமாட்டத்தைத் தவிர உருப்படியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், கொள்ளையர்களை பிடிக்க ஆவடி காவல் சரக உதவி ஆணையர் சத்தியமூர்த்தி, திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் புருசோத்தமன் உள்ளிட்டோர் அடங்கி மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ஒரே மாதத்தில் அடுத்தடுத்த சம்பவங்கள்; திணறும் திருமுல்லைவாயல் போலீஸ்!
- திருமுல்லைவாயல், லலிதாம்பாள் நகரைச் சேர்ந்தவர் முருகன், 34; முடி திருத்துபவர். இவரது வீட்டில் டிச.,13ம் தேதி மர்ம நபர்கள் அரை சவரன் மோதிரத்தை திருடி தப்பினர். இதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர்.
- திருமுல்லைவாயல் அருகே அண்ணனூர், ஜோதி நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 65; ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவர், டிச.,4ம் தேதி மனைவியுடன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்று உள்ளார். பின், டிச.,12ம் தேதி வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக நகை பணம் தப்பியது. இச்சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை.
- திருமுல்லைவாயல், அண்ணனூர், சிவசக்தி நகரை சேர்ந்தவர் வரதன், 62; ஓய்வுபெற்ற கருவூல பணியாளர். குடும்பத்தினருடன் வெளியூர் சென்ற அவர், டிச., 11ம் தேதி வீட்டிற்கு வந்தபோது, 30 சவரன் நகை, 50,000 ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இச்சம்பவத்திலும் யாரும் கைது செய்யப்படவில்லை.
- திருமுல்லைவாயல், சோழம்பேடு சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ், 24; தனியார் நிறுவன ஊழியர். இவர் நண்பர்கள் நால்வருடன் தங்கியிருந்துள்ளார். டிச.,10ம் தேதி இரவு கதவை திறந்து வைத்து துவங்கிய போது மடிக்கணினி, 4 மொபைல் போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இச்சம்பவத்திலும் யாரும் கைது செய்யப்படவில்லை.
- திருமுல்லைவாயல் அருகே அயப்பாக்கம், அபர்ணா நகரை சேர்ந்தவர் அமுதவல்லி, 44; தனியார் பள்ளி ஆசிரியை. இவர் டிச., 10ம் தேதி மாலை வழக்கம் போல் பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டு கதவை திறந்து பீரோவை உடைக்க முயன்று கொண்டிருந்த மர்ம நபர்கள் இருவரில் ஒருவரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். தலைமறைவான அவரது கூட்டாளி இன்னும் பிடிபடவில்லை.
ஒரே மாதத்தில் அடுத்தடுத்து ஐந்து சம்பவங்களால் திருமுல்லைவாயல் காவல் நிலையம் ஆடிப்போயுள்ளது.