சென்னை, தரமணியில், டிசம்பர் 30ம் தேதி செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக கட்டடத்தில் கலைக்கழகத்தின் 52-வது கூட்டம் நடந்தது.

இந்த தமிழ் கலைக்கழகம், 2016 நவ.,21ல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில் தோற்றுவிக்கப்பட்டது.

இதன்வாயிலாக தமிழ் கலைக் கழக கூட்டங்கள் நடத்தப்பட்டு பிறமொழி கலைச்சொற்களை ஆய்வுக்கு உட்படுத்தி, மக்கள் பயன்படுத்த கூடிய சொற்களாக மாற்றும் பணியில் தமிழறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->

இதுவரை, மாதத்திற்கு இரண்டு முறை என, 52 கூட்டங்கள் நடந்துள்ளன. 52வது கூட்டத்தில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி முனைவர் பரசுராமன், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மைய இயக்குனர் முனைவர் அருட்செல்வன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். பாண்டிச்சேரி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்களும், எதேச்சையாக நானும் பங்கேற்றேன்.

ஆங்கில வார்த்தையின் மையப் பொருளை குறிக்கவும், எளிமையாகவும் தமிழ் வார்த்தை அமைய வேண்டும் என்பதற்காக கருத்து மோதல்கள் ஏற்பட்டன.

Pooh-pooh theory என்ற ஒரு ஆங்கில வார்த்தைக்கு உணர்ச்சிமொழிக் கோட்பாடு, இகழ்ந்துஎள்ளுதல் கோட்பாடு என்பன உள்ளிட்ட பல வார்த்தைகளை எடுத்துக்கூறி தமிழறிஞர்கள் விவாதித்தனர்.

சிறந்த தமிழ் வார்த்தையை தேர்ந்தெடுக்க காரசாரமான விவாதங்கள் தோன்றி மறைந்தன.

Popular etymology- பொதுப்படை சொற்பிறப்பியல், Porous plug- புரைச் செருகி என தமிழின் புதிய சொற்களுக்கான தேடல் காலையில் தொடங்கி மாலை வரை நீடித்தது.

அன்று ஒரு நாள் மட்டும், 550 சொற்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, 422 சொற்களுக்குக் கலைக்கழக வல்லுநர் குழு ஏற்பளித்தது.

இந்த சொற்கள் விரைவில் அரசு ஆணை பெறப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்காக "sorkuvai.com" என்ற வலைதளத்தில் வெளியிடப்படும்.


"மக்களின் மொழி தமிழ். பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொல்லை மக்கள் அறிந்தால் அதை அவர்கள் பயன்படுத்த துவங்குவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தமிழ் அறிஞர்கள் கலைச் சொல்லாக்கத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய சொற்களை மக்கள் அறிந்து கொண்டு பயன்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

அதனால்தான் பிறமொழி கலவாத தமிழில் பேசும் சாமானியர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்து தமிழ் தூதுவர்களாக அறிவிக்க உள்ளோம்.

ஏற்கனவே எங்களிடம் பயிற்சிக்கு வரும் தமிழ்த்துறை முதுகலை மாணவ- மாணவியர் வகுப்பறை உட்பட எல்லா இடங்களிலும் பிறமொழி கலவாத தமிழில் பேச வலியுறுத்தி இருக்கிறோம். அவர்களைப் பார்த்து மற்றவர்களும் நடைமுறை படுத்துவார்கள். எனவே அவர்களும் தமிழ் தூதுவர்கள்தான்."

- தங்க காமராசு,
செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கத்தின் இயக்குனர்


"நான் மூன்றாவது முறையாக கலைக் கழக கூட்டத்தில் பங்கேற்றேன். பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ் சொல்லாக்கம் நடைபெறுவதை நேரில் கண்டு களித்தேன்.

ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு இணையான பல தமிழ்ச் சொற்களை தமிழறிஞர்கள் முன்வைத்தது பிரமிப்பாக இருந்தது."

- ஆர்.அனுசியா, 23
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு
செல்லம்மாள் மகளிர் கல்லூரி, சென்னை


"கலைக்கழக கூட்டங்களில் பங்கேற்றப்பின், நாங்கள் மாறிவிட்டோம். நானும், என் தோழியர்களும் பிறமொழி கலவாத தமிழிலேயே உரையாடி வருகிறோம்.

எடுத்துக்காட்டாக, உதாரணத்தை கூட உதாரணம் என்று கூற மாட்டோம் ஏனென்றால் அது பிற மொழி.

பேசுவதற்கு எல்லாச் சொற்களும் தமிழிலேயே இருக்கின்றன. பிற மொழிச் சொற்கள் அவசியமில்லை."

-ஏ.கவுசல்யா, 22,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு,
செல்லம்மாள் மகளிர் கல்லூரி, சென்னை