சமீபத்தில் ஒருவரை சந்தித்தேன்... அவரைச் சந்தித்தப்பின்புதான் தெரிந்ததது இந்தியாவின் சுதந்திர காற்று வீசாத இடங்களும் இருக்கின்றன என்பது...
<!--more-->
அந்தச் சந்திப்பு வாழ்நாள் முழுவதும் பயத்துடனே, ஒருவித இறுக்கத்துடனே இருக்கும் மனிதர்களின் வாழ்வியல் சிக்கலை புரிய வைத்தது...
நெல் அரிசியாக மாறுவதும், விளைந்த கரும்பு வண்டியில் ஏறுவதும், களிமண் செங்கலாக உருவாவதும் தானாக நிகழ்ந்தால்... எப்படியிருக்கும்...
சம்பளமும் கொடுத்து, வேண்டா வெறுப்புக்கு இடமும் கொடுத்து, பசிக்கு சோறும் கொடுக்க வேண்டிய அவசியம் முதலாளிகளுக்கும்,
வாங்கிய கடனுக்காக குடும்பத்தோடு அரிசி ஆலையில், கரும்பு ஆலையில், செங்கல் சூளையில் சுருண்டு கிடக்க வேண்டிய அவசியம் உடலுழைப்பு தொழிலாளர்களுக்கும் வந்திருக்காது.
ஆனால் எதார்த்தம் அதுவல்ல...
அத்தியாவசியப் பொருட்கள் நம்மிடம் வந்துசேர உடல் உழைப்பு தொழிலாளர்களின் உழைப்பு அவசியமாகிறது. முழுவதும் இயந்திரங்களை பயன்படுத்தி விடும் அளவிற்கு இன்னும் நாம் வளரவில்லை.
ஆண்டு முழுவதும் நஷ்டத்தில் இருக்கும் ஒரு விவசாயி, பயிரை காப்பற்ற முடியாமல் உயிரை மாயித்துக் கொண்டால் குறைந்த பட்சம் ஊடகங்களில் செய்தியாகவாவது வரும். வெகுசன ஊடகங்கள் கூட விவசாயிகளின் இன்னல்களை காட்சிப்படுத்துகின்றன.
ஆனால், ஆயுள் முழுக்க கொத்தடிமையாக வாழ்க்கை தள்ளும் உடலுழைப்பு தொழிலாளர்கள் கொலையுண்டால் கூட தகவல் வராது.
“தனக்கு, 2004, மார்ச் 11ல் தான் விடுதலை கிடைத்தது”என்று ஒருவர் வெள்ளந்தியாக சொன்ன போதுதான் குற்றவுணர்வு உருத்தியது.
71 ஆண்டு கால சுதந்திர இந்திய வரலாற்றில், அவர்களுக்கான, அவர்களுக்குரிய சுதந்திரம் கிடைக்கவில்லை எனில், அதற்கு யார் காரணம்?
அவர்களை விடுவிப்பதற்கான போராட்டங்களும் ஒருபுறம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூரைச் சேர்ந்தவர் ராமன், 48, அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என பரம்பரைபரையாக கொத்தடிமையாக இருந்த அவர், 35வது வயதில் திருவள்ளூர், பவர்ஹவுஸ் அரிசி ஆலையில் மீட்கப்பட்டார்.
சுதந்திர காற்றை சுவாசிக்கும் அதிர்ஷ்டம் வாய்க்காமல் மாண்டு போன ஏராளமான உடலுழைப்பு தொழிலாளர்களின் கதைகள் ராமனிடம் அதிகம் இருந்தன.
அவரைப்போலவே அரசிடமும், மீட்கப்பட்டவர்களின் கதைகள் ஏராளம் இருக்கிறது. மத்திய தொழிலாளர் துறை மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின், 2017ன், ஆண்டு அறிக்கையில், 3,13,593 பேர் கொத்தடிமைகளாக மீட்கப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிவரம் கூறுகிறது.
இதில் தமிழகத்தில், 65,573 பேரும், அதிகப்பட்சமாக கர்நாடகாவில் 66,281 பேரும் கொத்தடிமைகளாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதன் பொருள் இம்மாநிலங்களில் கொத்தடிமைகள் அதிகம் என்பதைவிட, அவர்களை மீட்பதற்கான செயல்பாடுகள் இங்கு அதிகரித்துள்ளன என்பதே சரியானது.
உழைப்புச் சுரண்டல், ஆட்கடத்தல் ஆகியவை கொத்தடிமையின் குழந்தைகள். புள்ளிவிவரங்களின் படி, ஆட்கடத்தல்கள், 56 சதவீதம் தெரிந்த நபர்களாளேயே அரங்கேற்றப்படுகிறது.
ஆசைவார்த்தை கூறி, நம்ப வைத்து குடும்பம், குடும்பமாக மொழி தெரியாத இன்னொரு பிராந்தியத்தில், எதிர்பார்த்த ஊதியம் கொடுக்காமல் வேலைக்கு ஈடுபடுத்துவதும் ஆட்கடத்தல்தான் என, ஐ.நா., வரையறுக்கிறது.
இந்த மாதிரியான மனிதக்கடத்தல்கள் தமிழ்நாட்டில் அதிகம். உதாரணமாக, அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஒடிசாவில் நுவாக்ஹை ஜுஹார் என்ற விவசாய பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.
அது விவசாய பண்டிகை, விவசாயிகள் அதிகம் செலவு செய்வார்கள். எந்த ஊரில் விவசாயிகளிடம் தேவைக்கு மீறி பணம் இருந்திருக்கிறது.
அவர்கள் திடீர் பணத்தேவையை உள்ளூர் செங்கல் சூளை ஏஜென்டுகளிடம் பூர்த்தி செய்கின்றனர்.
அதற்கு பதிலாக, ‘சொல்லும் இடத்தில் வேலை செய்ய வேண்டும்’ என, ஒப்பந்தம் போடப்படுகிறது.
குழந்தைகளுக்கு நல்ல படிப்பு, நேரத்திற்கு நல்ல சாப்பாடு என்று, ஆசைவார்த்தை கூறி எராளனமான வட மாநில விவசாயிகளை நம் ஊர் முதலாளிகளிடம் சேர்த்து கமிஷன் வாங்கவே ஒரு குரூப் இருக்கிறது.
<!--more-->
தனிநபரை கடத்தினால் அவருடைய உறவினர்கள் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுப்பர். ஆனால் இதில், உறவினர்களையும் சேர்த்து கடத்தப்படுவதால் அவர்கள் குறித்த விவரம் தெரிவதில்லை. இதுகுறித்து சர்வதேச அளவில் கூட தோராயமான கணக்கீடுகள்தான் உள்ளன.
இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் வெளிமாநிலம், வெளியூர்களில் இருந்து வந்து பணிபுரியும் அமைப்பு சார தொழிலாளர்கள் அதிகமாக உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் அவலம் இன்றும் நீடிக்கிறது.
கொத்தடிமை முறையை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடந்த 2017ல் அடிமைத்தளைகளை ஒழிக்க, தமிழக அளவில் சிறப்பு அலுவலரை அரசு நியமித்தது போல், வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
கொத்தடிமையாக நடத்தப்பட்டேன் என்பன போன்ற புகார்களைக் கூற மாநில நோடல் அதிகாரிகள் உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் விஜிலன்ஸ் கமிட்டிகள் செயல்படுகிறது. இதில் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியரும், கோட்ட அளவில் கோட்டாட்சியரும் தலைவராக செயல்படுகின்றனர்.
மாவட்ட ஆட்சியரால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு சாரா அமைப்பில் இருந்து இரண்டு சமூக ஆர்வலர்கள், போலீசார், நலிந்த மக்கள் உறுப்பினர்கள் மூன்று பேரும் இந்த கமிட்டியில் அங்கம் வகிக்கின்றனர்.
பயம், அச்சுறுத்தல்கள் ராமன் போன்றோரின் வாழ்க்கையில் தினமும் நடைபெறுபவை. தங்களுக்குரிய பிரச்னைகளை தீர்க்க முடியும் என, அவர்கள் நம்புவதில்லை. இதனால்தான், இப்பிரச்னையை கண்ணுக்கு புலப்படாத அடிமைத்தனம் என, கூறப்படுகிறது.
ராமன் தற்போது சென்னை, ஐ.சி.எப்., தொழிலாளராக ஒரு நாளைக்கு 450 ரூபாய் சம்பளத்தில் கவுரவமாக வாழ்கிறார் என்றால், அவருக்கு பொது அமைப்புகள், அரசு அதிகாரிகள் வாயிலாக உதவிக்கரம் வந்தது.
கொத்தடிமை முறையை ஒழிக்க சட்டம் சிறப்பாக இருந்தாலும், அவர்களை மீட்கத் தேவையான அமைப்பை அரசு உருவாக்கி வைத்திந்தாலும், அதையும் தாண்டிய ஒன்று தேவைப்படுகிறது.
அவர்களை மீட்க அந்தந்த பகுதி மக்களும் கொத்தடிமை குறித்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.
இதை உணர்த்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், 2ம் நாளான இன்று அடிமைத்தளை அகற்றுவதற்கான சர்வதேச தினமாக கொண்டாடப்படுகிறது.
மத்திய தொழிலாளர் துறை மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின், கடந்த ஆண்டு அறிக்கையில், கொத்தடிமைகளாக மீட்கப்பட்டவர்களில் 86.6 சதவீதம் பேர் பழங்குடியினர்.
போராடி பெற்ற சுதந்திரம் கொத்தடிமையால் ஒரு சாராருக்கு மறுக்கப்படுவதை, என்றாவது ஒருநாள் யோசித்திருக்கிறோமா?...