மாயமாகிப்போன அவள் ஆக்கிரமித்த கட்டிடங்களால் உருவான வெறுமை, ஒரு கொடிய உறக்கத்தில் என்னை ஆழ்த்தியிருக்கிறது.
<!--more-->
அந்த உறக்கம், விண்வெளிக்குச் சென்று திரும்பியது போலவும், அது என்னளவில் சில காலங்களாகவும், அவளைப் பொறுத்தவரை பல யுகங்களாகவும் இருந்திருக்கின்றன.
எந்த அடையாளங்களையும் அவள் விட்டுச் சென்றிருக்கவில்லை. அவசரத்தில், எனது நினைவுகளை அப்படியே மட்கிப்போன அந்த கட்டிட சுவர்களில் விட்டுச் சென்றிருக்கிறாள்.
இதுதெரியாதவனாய் இவ்வளவு காலங்களாக திட்டம் தீட்டியிருக்கிறேன்.
இது தெரியாதவனாய் இவ்வளவு காலங்களாக என் சிரிப்பை தொலைத்து சந்தோஷத்திற்காக அலைந்திருக்கிறேன்.
வேறோரு ஆளாக மாறிப்போன அவளிடம், ஒவ்வொரு முறையும் அந்நியனாக பேசும் அந்த சூழல் மயான அமைதி நிறைந்த சுடுகாட்டில் நின்றுகொண்டு தனியாக பேசுவது போலிருந்தது.
காலவோட்டம் போகிற போக்கில் நினைவுகளை எளிதாக அழித்துவிட்டு செல்வது போலில்லாமல் விலக்களிக்கப்பட்டவர்களில் ஒருவனாக மாறிப்போனது மெல்ல தெளிவானது.
நம்ப முடியாத கடந்த கால கட்டுக்கதைகளை இட்டுகட்டி கூறும், புரிந்துகொள்ள முடியாத புதியவன் என்று அவள் நினைத்திருக்கக் கூடும். அல்லது நினைவில் இருந்து மறைந்து போன பத்து ஆண் நண்பர்களில் ஒருவன் என்று அவள் நினைத்திருக்கக்கூடும். கடந்த காலத்தைத் தவிர அவளுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இருந்ததில்லை.