சரளை மண் நிறைந்த, ஆங்காங்கே பாலைவனத்தை நினைவுப்படுத்தும் கள்ளிச் செடிகளைக் கொண்ட மிகப்பெரிய நிலப்பரப்பில், கணுக்கால் புதையுமளவிற்கு மணல் நிறைந்த, மரங்கள் சூழ்ந்த ஓர் சிறிய இடம் இருந்தது.
அந்த மணலில் புதைந்த எனது நினைவுகளை, தெரிந்தோ தெரியாமலோ அவளின் வருகை கிளறிவிட்டது. அந்த மரத்தின் வேர்கள் நாங்கள் பேசியதை, சண்டையிட்டுக்கொண்டதை, விளையாடியதை நினைவில் வைத்திருக்கக் கூடும்.
எங்களின் கண்ணாமூச்சு விளையாட்டுக்கு, அந்த ஒரு மரமே போதுமானதாக இருந்தது. ஒருவரை ஒருவர் தேடி, களைத்து வீடு திரும்பியதை நினைத்து, அவளும் சிரித்திருக்கக் கூடும்.
ஆனால் இம்முறை இந்த விளையாட்டு மிக நீண்ட காலம் நீடித்து விட்டது. ஒருவரை ஒருவர் தேடி களைத்துவிட்டோம். இன்னும் வீடுதான் திரும்பவில்லை.
ஒவ்வொரு காலையிலும் அங்கு செல்லும் போது, நீல நிற மேற்கு வான அடிவாரத்தில் பார்த்து ரசித்த, உயர்ந்து வளர்ந்திருந்த கருமையான மலை உச்சி, நீண்ட நாள்களுக்கு பிறகு நினைவிற்கு வந்தது.
ஒவ்வொரு மாலையிலும் அவளுடன் அவள் வீட்டுக்குச் சென்றுவிட ஆசை இருந்ததில்லை. ஆனால் அவளைக் காண பாலைவன செடிகளுக்கிடையே வெறுங்காலில் நடந்து சென்றது நினைவிற்கு வந்து இம்சித்தது.
தெரிந்தோ தெரியாமலோ அவளின் வருகை மீண்டும் முதலில் இருந்து பயணிக்க வைத்து விட்டது. பாசி படிந்திருந்த பழைய நினைவுகளை அசைபோட வைத்தோடில்லாமல், தூரத்தை துரத்த எத்தனிக்கிறது.
தெரிந்தோ தெரியாமலோ நீண்ட நாள்களுக்குப் பிறகான இந்த பயணம் எவ்வளவு பயத்தை கிளப்புகிறதோ, அவ்வளவு தைரியத்தை வரவழைக்கிறது... அவளின் வருகையால்!