அது வெயில்காலம் அல்ல... ஆனால் சிறுநீர் பையில் இருக்கும் நீர் கொதிக்கும் அளவிற்கு வெயில் அடித்தது. அந்த நட்ட நடு வெயிலில், சவரம் செய்யாத தாடியோடு, வழிந்தோடும் வியர்வையோடு, கிழிந்த போன சீருடையோடு ஒரு முதியவரை ஆவடி நகராட்சி அலுவலகத்தில் கண்டேன்.
<!--more-->
அதே சீருடையில், அவருடன் வந்த மேலும் சிலரும் புறக்கணிக்கப்பட்டு, தனியே ஓரிடத்தில், பிரச்சினைகளை நினைத்து மொத்தமாக புழுங்கிக்கொண்டிருந்தனர்.
அந்த முதியவர் மட்டும் சலனமில்லாத அமைதியுடன், கந்தலான துண்டு துணியால் நாடியை தாங்கி பிடித்தவாறு, நடைபாதையில் அமர்ந்திருந்து எதையோ வேடிக்கைப்பார்த்தார். வெயிலின் தாக்கம் அவரின் முகத்தில் துளியளவும் தெரியவில்லை.
எல்லோரையும் வருத்தெடுக்கும் வெயில், அவரை மட்டும் எப்படி விட்டு வைத்தது என்பதை அறிய அருகே சென்றால், வெயிலை விட அதிக வெப்பத்தில் அந்த முதியவர் இருந்தார்.
மாதச்சம்பளத்திற்காக மாதக்கணக்கில் அலைந்ததனால்,
அடுப்பெரியாத தன் வீட்டை உருக்கி, மனமில்லாமல் செய்த கைச்செலவுகளை நினைத்ததனால் உருவாகியது அவரின் வெப்பம்...
அது கிழக்கில் உதித்து மேற்கில் மறைவதாய் இல்லை. தொடர்ந்து கனன்று கொண்டிருந்தது.
பிரச்சினைகளை உரக்கக் கூவினாலும், அதை வியாபாரமாக்க ஒரு கும்பல் அலைவதை நினைத்தனால், அவர்களின் கத்துதலை அருகில் இருந்து கேட்டு, கைகளை பிசைந்து கொண்டு, எதுவும் செய்ய முடியாதவனாய் நகர்ந்ததனால் எனையும் அந்த வெட்பம் தாக்கியது.“அடுத்த வாரம் செவ்வாய்கிழமை வாருங்கள்”என்று அதிகாரக்குரல் கேட்டது.
“என் பொண்டாட்டிகிட்ட என்ன சொல்லுவேன்”என்று கூறியபடி கந்தலான அந்த துண்டு துணியை மட்டும் விடாமல் பற்றிக்கொண்டு, அங்கிருந்து நகர மனமில்லாமல், நம்பிக்கையற்றவராய் நகர்ந்தார் அந்த முதியவர்
“தம்பி, உங்க கிட்ட நான்தான் ஏதாவது சொன்னேனு வெளியே சொல்லிடாதிங்க”என்று கூறிச்சென்ற அந்த முதியவர் இன்றைய சாப்பாட்டிற்கு என்ன செய்வார் என்பதை நினைத்தால் வெட்பமாகிறது.