கூக்குரல் எழுப்ப தேவையில்லை; அலையவேண்டிய அவசியமும் இல்லை; மொபைல்போன் செயலிகளால் விரலசைவில் வீட்டு வாசலுக்கே, கால்டாக்ஸிகள் வந்து நிற்கும்.
<!--more-->
சலுகை விலையில் நினைத்த இடத்திற்கு எந்நேரத்திலும் சென்று வரலாம். கால்டாக்ஸியில் தனியாகவோ, குடும்பத்தினருடனோ, உறவினர், நண்பர்களுடனோ சென்று வந்த காலம் மாறி, போகிற வழியில் தெரியாத நபர்களும் நம்முடன் பயணம் செய்யும் காலம் வந்துவிட்டது; இதற்கு பெயர்தான் ‘ஷர் ட்ரிப்’.
இந்த மாற்றங்கள் நிகழ, ‘சுவிட்ச் ’ போட்டது பன்னாட்டு நிறுவனங்கள்தான்.‘உங்கள் காரை எங்களுடன் இணையுங்கள்; மாதத்திற்கு 25 லட்ச ரூபாய் வரை சம்பாதியுங்கள்’,‘30 ஆயிரம் ரூபாய் செலுத்தி காரை சொந்தமாக்கிடுங்கள்’</blockquote> இதுபோன்ற விளம்பரங்கள், 2012, 2013களில் முன்னணி ஊடகங்களில் தொடர்ச்சியாக விளம்பரப்படுத்தப்பட்டன. அப்போதுதான் பன்னாட்டு நிறுவனங்கள் தகவல் தொழில் நுட்ப ரீதியிலான பணிகள் எனக் கூறிக்கொண்டு கால்டாக்ஸி, ஆட்டோ போன்ற பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் கால்டாக்ஸி தொழிலில் அடியேடுத்து வைத்தன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்த இந்த மாற்றங்கள் வரவேற்பை பெற்றிருந்தாலும், டாக்ஸி ஓட்டுனர்களின் வாழ்க்கையை வேதனைகள் நிறைந்ததாக மாற்றியிருக்கின்றன, என்பதை மறுக்க முடியாது.‘எங்கள் உழைப்பு டீசல் போடவே சரியாக இருக்கிறது; பன்னாட்டு நிறுவனங்கள் உழைப்பைச் சுரண்டுகின்றன,’என்பன போன்ற குரல்கள் சமீபகாலங்களில் அதிகரித்திருப்பதே அதற்கு சாட்சியங்கள்.2010ம் ஆண்டிற்கு முன்பு வரை சென்னைக்குள் ஒரு கால்டாக்ஸி, 100 - 120 கிலோ மீட்டர் வரை ஓடினாலே, ஓட்டுனருக்கு அன்றைக்கு நல்ல வருமானம் கிடைக்கும். ஆனால் இன்று, போட்ட காசை எடுப்பதற்கு தினசரி 250 - 280 கிலோ மீட்டர் வரை ஒரு ஓட்டுனர் ஓட வேண்டிய நிலை உள்ளது.
ஆறு அல்லது ஏழு லட்ச ரூபாய்களில் வாங்கப்பட்ட கார்களில், 30, 40 ரூபாய்களுக்கு சாவாரி ஏற்ற, நீலத்திமிங்கலம் விளையாட்டைப்போல் எங்கோயிருந்தோ வரும் உத்தரவின்படி, இன்று கால்டாக்ஸி ஓட்டுனர்கள் பறக்கிறார்கள்.
தற்போது, ஒரு டாக்ஸி ஓட்டுனர், 18 மணி நேரம் காரிலே இருந்தால்தான், குறைந்தபட்சம் 1800 ரூபாயாவது சம்பாதிக்க முடியும். அதில் 1200 ரூபாய் வரை வாகனத்திற்கு தேவையான டீசலுக்கும், 450 ரூபாய் சாப்பாட்டுக்கும் செலவாகி விடும்.
சென்னைக்கு வந்து ஓட்டுனராக காலம் தள்ளுபவர்கள் 40 - 70 சதவீதம் பேர் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். அவர்களின் நிலைமை இன்னும்மோசமானது. வீட்டு வாடகைக்கும், டீசலுக்கும் உழைத்துவிட்டு வீடுதிரும்பும் எத்தனையோ பேரின் டாக்ஸிகள் பிழைப்புக்காக சென்னையை ஓய்வில்லாமல் இந்நேரமும் சுற்றக்கூடும்.‘இந்த பன்னாட்டு நிறுவனங்கள் இல்லையென்றால் இவர்கள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவார்கள், ஏற்கனவே அப்படித்தான் இருந்தது. தற்போது பரவாயில்லை’என்பது டாக்ஸி ஓட்டுனர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள். இந்தச் சமூகம் எளியவர்கள் மீது எளிதாக குற்றம் சுமத்திவிடுகிறது. சலுகை என்ற பெயரில் உங்கள் சட்டைப்பையில் ஓட்டைப்போடுவதும், இன்னோருவரின் உழைப்பை சுரண்டுவதும் சரியென கருதுவது என்னமாதிரியான மனநிலையாக இருக்கும்.‘கம்பேனிஸ் ஆக்ட் 2000’என்ற சட்டப்பிரிவில் இந்தியாவிற்குள் மென்பொருள் நிறுவனங்களாக நுழைந்து, நடுத்தர வர்க்க மக்களின் போக்குவரத்துத் தேவையை இரண்டு பன்னாட்டு நிறுவனங்கள் முறைப்படுத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளன. என்.டி.எல்., பாஸ்ட் ட்ரக், பிரண்ட்ஸ் ட்ரக் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் வர்த்தகமில்லாமல், காலாவதியாகி நாள்கள் ஆகிவிட்டன.தற்போது, தொழில் போட்டி ஓலா, ஊபர் இரண்டு நிறுவனங்களுக்குதான்; வர்த்தகமும் இரண்டு நிறுவனங்களை வைத்துதான். ஒரு டாக்ஸி ஓட்டுனர் விருப்பமில்லாத ட்ரிப்பை மறுக்க முடியும் என்கிறது, தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம். ஆனால் இச்சட்டம் இந்நிறுவனங்களுக்கு பொருந்தாது. ஏனேன்றால், அவை இங்கு மென்பொருள் நிறுவன உரிமம் பெற்று, டாக்ஸி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
எத்தனை டாக்ஸி நிறுவனங்கள் வந்தாலும் ஒரு டாக்ஸி ஓட்டுனர் தனியாக பிழைப்பு நடத்திய காலம் மழையேறிவிட்டது. தற்போது இந்நிறுவனங்களை விட்டு வெளியேறினால் டாக்ஸி ஓட்டுனர் சாப்பாட்டுக்குக்கூட சம்பாதிக்க முடியாது. டாக்ஸி ஓட்டுனர்களின் சமீபகால வீடியோ பதிவுகள் பிழைத்தலுக்கான உதவியோரிய கூக்குரலாகதான் இருக்கின்றன. இதைச் சாதாரணமாக கடந்து செல்ல முடியுமா?