இரண்டு மாடி பழைய கட்டிடம்; என்னதான் கட்டிடத்துக்கு வண்ணப் பூச்சிகள் செய்தாலும் அதன் பழைய தோற்றத்தை யாரும் மாற்றவில்லை அல்லது மாற்ற யாருக்கும் தைரியமில்லை.
<!--more-->
தேசிய மாணவர் படையில் இருந்த போது, சீனியர் அண்டர் ஆபீசர் அணிந்ததைப் போன்ற சீருடையில் ஒரு காவலாளி சாதுவாக நின்றிருந்தார்.
அவரின் ஏழடுக்கு சோதனைக்குப் பிறகு தான் முதல் நாள் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியதாய் இருந்தது. பின்னாளில் ஊழியர்களால் மேலாளருக்கு அச்சுறுத்தல் இருப்பது தெரிந்தது.
காலையில் 10 : 00 மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்றார்கள். இரவு 7 : 00 மணி வரை வேலை பார்க்க வேண்டும் என்றார்கள்.
போகப்போக மதியம் 3:00 மணியிலிருந்து இரவு 11:00 மணி வரையும், இரவு 7:00 மணியிலிருந்து அதிகாலை 4:00 மணி வரையும் மாறி மாறி வேலையில் ஈடுபடுத்தி பைத்தியம் ஆக்கினார்கள்.
சீக்கிரமாக சென்றால் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியாது என்று கூறி, அதிக நேரங்கள் வேலையில் ஈடுபடுத்திக் கொள்வார்கள்.
மேலே இருக்கும் அறையில் தான் தங்க வேண்டும் என்றார்கள். வீடு அருகில்தான் இருக்கிறது அங்கிருந்து வருகிறேன் என்றேன்.
திருமணம் ஆனவர்கள் மட்டுமே வீட்டிற்கு செல்ல முடியும் என்றார்கள். இங்கு இதுதான் சட்டம்; இது ஒரு ராணுவம் என்றார்கள். மேலாளர் என்ன சொல்கிறாரோ அதுவே வேதவாக்கு என்றார்கள்.
30 நாட்களாக, அலுவலகத்தில் ஒரு மேஜை, நாற்காலி போல் இருக்கச் செய்தார்கள்.
வேலைக்கு சேர்ந்த மூன்றாவது நாளிலேயே வாதைக் கூடத்தில் சிக்கிக் கொண்டதாக உணர்ந்தேன். அப்போதே ராஜினாமா கடிதத்தையும் எழுதி விட்டேன்.
கடலில் விழுந்து விட்டோம், கரையையும் பார்த்துவிடுவோம் என்ற எண்ணத்தில் அப்போது அந்த கடிதத்தை கொடுக்கவில்லை.
மேலாளர் வந்தால் அனைவரின் மேஜையில் இருக்கும் தொலைபேசிகளும் 2 முறை சிணுங்கும்.
வாதை கூடத்தில் உயிருக்கு பயந்து கொடுங்கோல் மன்னருக்கு வணக்கம் வைப்பது போல், மேலாளருக்கு முதுகு வளைந்து வணக்கம் செலுத்த வேண்டும்.
இல்லையென்றால் முக்கியமான நாளில் ஊழியர்களுக்கு விடுப்பு தரமாட்டார். அல்லது ஊதிய உயர்வு வழங்க மாட்டார். என்றெல்லாம் சொல்லி எனது சீனியர்கள் என்னையும் வளைய வைத்தார்கள். ஐயா என்று கூப்பிட்டால் உடனே விடுப்பு தருவாராம்.
சிலவற்றைக் கற்றுக் கொள்ள வளைந்து கொடுத்தால் தப்பில்லை, என்று நினைத்து என்னால் முடிந்த அளவிற்கு வளைந்தேன்.
அங்கு வேலை செய்த ஊழியர்கள் அனைவருக்கும் வளைந்து கொடுக்கும் தன்மை அதிகமாக இருந்தது. வாய்ப்பு கிடைத்தால், அவரை போட்டுத்தள்ளவும் தயாராக இருந்தார்கள்.
அந்தக் கட்டிடத்தின் அறைக்குள் நான்கு சுவர்களை பார்த்தபடியே நாள் முழுவதும் பொழுதைக் கழித்த இளைஞர்கள் இருந்தார்கள்.
அங்கு மேலாளருக்கு மிதமிஞ்சிய அதிகாரம் கொடுக்கப்பட்டு இருந்தது. அதனால் அவர், அவர்களை சொந்த வேலைகளுக்காக அவ்வப்போது பயன்படுத்தி வந்தார்.
படிப்பில் நாட்டம் இல்லாத 14 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் டீ வாங்கிக் கொடுக்கும் வேலை செய்து வந்தார்கள். அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது, அவர்களுக்கு டீ, பஜ்ஜி கொடுத்து விட்டு சிறுவர்களை மறைத்து வைத்து விடுவார்கள்.
என் சுபாவத்திற்கு முற்றிலும் ஒத்துவராத ஒரு இடத்தில் 20 மாதங்கள் கழித்தேன். அங்கிருந்து பெற்றுக்கொண்டது ஒன்றே ஒன்றுதான் ராணுவத்தையே சமாளிக்கும் திறன்.
ஜாதி பார்க்கக் கூடாது என்பார்கள். ஆனால் ஜாதிக்குள் உளுத்து போய் இருப்பார்கள். ஜாதிக் காரனுக்கு தான் அங்கு வேலை கிடைக்கும்.
என்னைப் போலவே விரக்தியில் இருக்கும் ஒரு சீனியர் அடிக்கடி சொல்லும் வார்த்தை இதுதான் "இப்படி ஒரு மூடர் கூடத்தில் மாட்டிக்கிட்டேனே"