சிறிது முளைத்த வெள்ளை தாடி கொண்ட சோகம் தொய்ந்த கருப்பர், உச்சி வெயிலில் உயிரே போவது போல் கத்திக்கொண்டிருந்தார்.
<!--more-->
அவருடன் வேறு சிலரும் கோஷமிட்டனர்.
அழுகிய குப்பைகளை வெறுங்கைகளால் அள்ள வைத்தபோதே போராடி இருக்க வேண்டும் என சிலர் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
இன்னும் சிலர், 'முதலில் எதிர்த்தவர்களின் வேலை அடுத்தடுத்து பறிக்கப்பட்ட போதே போராடி இருக்க வேண்டும்' என்றனர்.
அந்த போராட்டம் உக்கிரமாகி வெகு நேரமாக நீண்டது. வினவ ஒருவர் கூட இல்லை. அறைகள் பூட்டப்பட்டிருந்த அந்த கட்டிடம் ஓலக்குரலால் அதிர்ந்தது.
நகரத்தின் குப்பைகளை சுமந்தவர்களுக்கு, சம்பள பாக்கியால் ஏற்பட்ட வறுமையின் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியவில்லை போலும்.
வெறும்வயிறாக இருக்க, ஊதியமில்லாத மாதங்கள், அவர்களை பழக்கப்படுத்தி இருந்தது. மதிய சாப்பாட்டை மறந்து கத்திக்கொண்டிருந்தனர்.
அந்த கத்தல்கள் அதிகார மதிற்சுவர்களை கடந்து செல்லவில்லை.
இதற்கெல்லாம் காரணமான அந்த கட்டிடத்தின் ஆட்கள் வழக்கமான வேலைகளை செய்து முடித்து, மதிய சாப்பாட்டிற்கு அங்கிருந்து சென்று கொண்டிருந்தனர்.
அதிலொருவன் ஊடக, பத்திரிகையாளர்களுக்கு சரிசமமாக பங்கிட, 10,000 ரூபாய் கொடுத்து அனுப்பினான்.
குப்பைக்காரர்களின் கத்தல்கள் மெதுவாக அடங்கியது. அந்த முதியவர் ஈர துணியை இடுப்பில் கட்டிக்கொண்டு நடக்க துவங்கினார்.
அவரது நடையில் வெறும் வயிற்றில் இருக்க பழகி, பல நாட்களாகி இருப்பது புரிந்தது.
இன்று இரவு சாப்பிடாமல் இருந்துவிட்டு, காலையில் கண்விழிக்க முடியுமா என அவர் தன்னைத் தானே சோதிக்க முடிவெடுத்து இருப்பதாக பேரனிடம் கூறியபடி நடந்தார்.
பேரன், அந்த வித்தையை தனக்கும் கற்றுத் தரும்படி அந்த முதியவரை தொல்லை செய்தபடியே அவருடன் போனான்.