சென்னையில், ஜவுளி கடை, மளிகைக் கடைகளில், 14 வயதுக்கும் குறைந்த சிறுவர், சிறுமியரிடம், உங்களுக்கு தெரியாமலேயே, நீங்கள் வேலை வாங்கியிருப்பீர்கள்.

<!--more-->

திரையரங்கு வாசலிலோ, ‘சிக்னலில்’களிலோ தமிழ், ஆங்கிலஎழுத்து வண்ண புத்தகங்களை விற்பனை செய்த சிறுமியிடம் உங்கள் குழந்தைக்காக சிலவற்றை வாங்கிச் சென்றிருப்பீர்கள்.

இவை அனைத்தையும் விட, பாரம்பரிய நிறுவனங்கள் என கூறிக்கொண்டு 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை, டீ வாங்கி கொடுக்கவும், ஏவல் வேலை செய்யவும் பயன்படுத்தப்படுவது ஒருபுறம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

செங்கற்சூளை, கரும்பு ஆலை உள்ளிட்ட இடங்களில் பெற்றோருடன் இருக்கும் குழந்தைகளும், அறியாமையால் வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

<!--more-->

அனைத்தையும் புதிதாக பார்க்கும், அந்த பிஞ்சு குழந்தைகளுக்கு, எதிர்காலம் சிதைக்கப்படுவது புரிய வாய்ப்பில்லை.

2015ல் வேலூர் மாவட்டத்தில், செங்கற்சூளையில் பெற்றோருடன் சேர்ந்து செங்கற்களை சுமந்தச் சிறுமி ஒன்பது வயதில் மீட்கப்பட்டிருக்கிறாள்.

தற்போது, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பெற்றோருடன் தங்கியிருந்து அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும், அந்தச் சிறுமியின் கனவு மருத்துவராக வேண்டும் என்பதுதான்.

அந்தச் சிறுமி தனது ஒன்பது வயது வரை புத்தகங்களை தூக்குவதற்கு பதில் செங்கற்களை சுமந்திருக்கிறாள்.

இதை ஒரு கொடுங்கனவு போல் விவரிக்கும் அந்த சிறுமிக்கு, வார்த்தைகளால் விவரிக்க முடியாத சோகம் நிறைந்த குழந்தைப்பருவத்தை இந்தச் சமூகம் பரிசளித்திருக்கிறது.

2015ல் இருந்து இரண்டு ஆண்டுகளில், தமிழ்நாட்டில் அதிகப்பட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 450 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

இதில், அடுத்தடுத்த இடங்களை கோயம்புத்தூர், சென்னை நகரங்கள் பிடித்துள்ளதாக மாநில குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில், அதிகளவு குழந்தைத்தொழிலாளர்கள் மீட்கப்படுவதற்கு, செங்கற்சூளைகளும் ஒரு காரணம்.

இங்குதான், ஒவ்வொரு முறையும் குழந்தைத் தொழிலாளர்கள் கொத்துக் கொத்தாக மீட்கப்படும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன.

லாபத்தை பெருக்க குறைந்த பணியாளர்களுக்கு, அதிகபட்ச வேலை கொடுப்பது போல், சிறுவர்களுக்கும் குறைந்த சம்பளம் நிர்ணயித்து வேலை கொடுக்கின்றனர், பேராசை முதலாளிகள்.

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க இருவழிகள்தான் உள்ளன. ஒன்று பேராசை முதலாளிகள் திருந்த வேண்டும், அல்லது பெற்றோர்களும், அவர்களை சேர்ந்தோர்களும் இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இதற்காக, சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 12ம் தேதி குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்புத் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

குழந்தைத் தொழிலாளர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த, 2002 முதல் ஐக்கிய நாடுகளின் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால், இந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது.

2001ம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 12.6 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், 14 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள், இந்தியாவில் தான் அதிகமாக உள்ளனர் என, குழந்தைகள் நலனுக்கான சர்தேச அமைப்பான, யுனிசெப் தெரிவித்தது.

குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த மத்திய அரசு, 2006 அக்டோபர், 10ம் தேதி முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலையில் ஈடுபடுத்துவதை முற்றிலும் தடை செய்தது.

இந்தியா போன்ற மனித வளம் மிகுந்த நாட்டில் குழந்தைத் தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்கப்படாமல் இருப்பது, வளர்ச்சியை பின்னுக்கு இழுப்பதாக அமைந்துவிடும்.

மத்திய அரசு, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் 2013ல் இருந்து நான்கு ஆண்டுகளில் 26 கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்கியது.

சிறுவயதில் ஒரு குழந்தை வேலைக்குச் சென்றால், அந்தக் குழந்தையின் பெற்றோர் சரியில்லை என்று அர்த்தம்...

அதுபோல் ஒரு சமூகத்தில் குழந்தைகள் பலர் வேலை செய்தால், அந்தச் சமூகம் நோய்வாய்ப்படிருக்கிறது என்றுதான் அர்த்தம்...