போதையர்களின் விசித்திரமான இரவுகளுக்கு, அக்கறை இருந்ததே இல்லை அடுத்த நாள் விடியலைப்பற்றி.

<!--more-->

கோப்பையின் மீதிருக்கும் அலாதியான பிரியம் கூட அளவில்லாத போதை தரும்...

கட்டுப்பாடுகள் அற்ற, அந்த கொடூரமான இரவுகளுக்கு, வெட்கம் இருந்ததில்லை. அதுவரை பாட்டில்களுக்குள் அடைப்பட்டு ஏதோ ஒன்று, உடலை ஆட்டுவிக்கிறது.

அதீத அன்பும், அதீத கோபமும் கொண்ட அந்த வண்ணமயமான இரவுகள், அவர்களுடைய சகாக்களை அச்சுறுத்துகிறது.

உடலின் அத்தனை உறுப்புகளும் தன்னிச்சையில் செயல்படும், போதையின் அந்த உக்கிரமான பொழுதுகள், நண்பர்களை சிதறடிக்கிறது.

தன்னையே மறந்து, நான் யார் என்று இந்த சின்ன புத்தி கொண்ட உலகத்திற்கு அறிவித்த, அந்த பொழுதுகள், பக்கத்து வீட்டுக்காரர்களையும் பயமுறுத்துகிறது.

தனக்கு மறந்த, கனவாகிப் போன அந்த பொழுதுகள், தன் சகாக்களின் மறக்க முடியாத நனவாக மாறி இருப்பது போதையின் விசித்திரமான அமைப்பு.

ஒரு நாள் இரவு பேய் பிடிப்பது போல், ஒரு நாள் இரவு பூஜையில் அருள் வந்து ஆட்டு ரத்தத்தை குடிப்பது போல்,

ஒயினை குடித்து, போதை பிடித்த அந்த பொழுதுகள், இன்னோரு முறை வந்துவிடக்கூடாது; என் சகாக்களுக்காக; என் நண்பர்களுக்காக; என் பிரியமானவர்களுக்காக.

ஆனால் மீண்டும் ஒருமுறை குடிக்கலாம்... கற்பனையில் இன்புற்று, நிஜத்தில் துன்புற.

மீண்டும் ஒருமுறை குடிக்கலாம்... வெட்க மில்லா போதையில், துக்கம் கரைத்து, சுயத்தை இழக்க.

மீண்டும் ஒருமுறை குடிக்கலாம்... இரக்கமில்லா போதைக்கடலில், உடலை தொலைத்து, பக்க வாதத்தை தழுவிக்கொள்ள...

போதையினால் பக்கவாதத்தோடு போராடிக்கொண்டிருக்கும் சித்தாப்பாவுக்கு