‘‘ஒரு செங்கல உருவாக்க குறைஞ்சது 3 நாளாவது ஆகுங்க... சவுடு மண்ணையும், தண்ணீயையும் குலைச்சி, அச்சுல போட்ட செங்கல வரிசையா அடுக்கி வைக்கனும். இத ராத்திரி செஞ்சாதான் பகல்ல காய வைக்க முடியும்.

வெயில்ல காய வைச்சி, ரெண்டு மணி நேரத்துக்கு ஒருக்கா, செங்கல திருப்பிப் போடனும். தினமும், ஒரு ஆளு எப்படியும் 1500 செங்கலுக்கு மேல தயார் பண்ணுவாங்க.

நாங்க, மொத்தம் பத்து சதைகள், ஒரே சதையாக சூளையில வேலை செய்யுறோம். குடும்பத்தைதான் விழுப்புரத்தில சதைன்னு சொல்லுவோம்.

சனிக்கிழமை வெளிய போயி, சந்தையில காய்கறிகள் வாங்கியாருவோம்.

முன்பணமாக 70, 80 ஆயிரம் ரூபாய்ன்னு வாங்கிருக்கோம். வாராவாரம் சனிக்கிழம 500 ரூபாதான் சம்பளமா தர்றாங்க.


ஒரு இடத்தில குத்தச்சி இருக்க முடியாதுங்க. எப்ப பாத்தாலும் வேல செய்யுற மாதிரியே இருக்கும். துாங்குறதும் கம்மிதான். வெளியில போறதும் ரொம்ப குறைவு’’

என, ஆவடி அருகே அன்னம்பேட்டில் உள்ள செங்கல் சூளை தொழிலாளர்கள் சிலர், விழுப்புரத்து வட்டார மொழியில் கூறினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மண்ணின் தன்மை, நீர்நிலைகளே செங்கல் சூளைகள் அதிகமாக செயல்பட காரணங்கள் ஆகும். அதுபோல் இந்த பகுதிகளில் கொத்தடிமைகள் மீட்பு அதிகரித்திருப்பதும், மீட்கப்படாமல் பலர் இருப்பதும் கசப்பான உண்மை.

2016, மார்ச், 2ல், பொன்னேரியில் 564 பேரும், அதற்கு அடுத்த ஆண்டு, பிப்ரவரி, 10ல் அதே பொன்னேரியில், 21 பேரும், கடந்த மார்ச், 14ல், ஆவடி அருகே 147 பேரும் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்தவர்கள்.

செங்கல் சூளையில் வேலை செய்ய, தொழிலாளர்கள் கிடைப்பது கடினம். இதனால், மொழிதெரியாத, போதிய கல்வியறிவு இல்லாத பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை, சொந்த நாட்டிலேயே கொத்தடிமைகளாக நடத்தப்படும், அவலத்தை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

செங்கல் சூளைகளில் தங்கி இருந்து முழுக்கவனத்துடன் வேலை செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் வேலைக்கு எப்படியாவது ஆட்களை சேர்த்து விட சூளை மேஸ்திரிகள், ஆறு மாதத்திற்கு ஒருமுறை வேட்டைக்குச் செல்வது போல் போகிறார்கள்.

பிழைப்புத்தேடி, தங்களது வாழ்விடங்களை விட்டுச்செல்ல தயாராக இருக்கும் மக்கள், இவர்களுக்கு எளிதில் இலக்காகிறார்கள்.

முன்பணமாக குறிப்பிட்ட தொகையை கண்முன்னே வைத்து, ஆசையை துாண்டி, செங்கல் சூளை மேஸ்திரிகள் காரியத்தை சாதித்து விடுகின்றனர்.

அவ்வளவு பெரிய தொகையை இதற்கு முன்னால் பார்த்து இருக்காதவர்கள், பின்னால் வரப்போகும் இன்னல்களை பொருட்படுத்தாமல் குடும்பத்தோடு வேலையில் சேர்ந்துவிடுகின்றனர்.

இவ்வாறு, செயல்படும் செங்கல் சூளைகள் ஆவடி அருகே ஆயில்சேரி, சோராஞ்சேரி, அணைக்கட்டுச்சேரி, கருணாகரச்சேரி, அன்னம்பேடு, முத்தாபுதுப்பேட்டை, பாண்டேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் அதிகமாக காணப்படுகிறது. ஆவடி தாலுகாவில் மட்டும் 22க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன.

செங்கல் சூளை, சர்க்கரை ஆலை, ஜவுளி கடை உள்ளிட்டவற்றை நடத்தும் உரிமையாளர்கள் லாபத்தை பெருக்கும் நோக்கில், குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இவர்களை மீட்பதற்காக, கொத்தடிமைகள் ஒழிப்புச் சட்டம் 42 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது. அன்றிலிருந்து, இந்தியாவில் 2 லட்சத்து 83 ஆயிரம் கொத்தடிமைகள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். இதில், நான்கில் ஒரு பங்கு கொத்தடிமைகள் தமிழகத்தில் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

2005 லிருந்து, 2014 வரையிலான காலகட்டத்தில், தமிழகத்தில் 3,776 பேர் கொத்தடிமைகளாக மீட்கப்பட்டுள்ளனர். இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 1,250 பேர் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தமிழகத்தில், 1,253 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்று மனிதனே, மனிதனை வேட்டையாடும், மிருக கலாச்சாரம் மேலோங்கி இருப்பதால், ஆண்டுக்கு ஆண்டு மீட்கப்படுபவர்களின் எண்ணிக்கை மாறிக்கொண்டே இருக்கிறது.

இதனால், கொத்தடிமை என்ற முறை, ஒழிக்க இயலாததாகவும், மீட்புப்பணி, தொடர்கதையாகவும் உள்ளது.