‘425ல் ஒன்னு’,

‘எனக்கு 452ல் ஒரு ஆறு’,

‘இந்த ரெண்டும் வராது, 440 தான். 4+4+0=8 இன்று சனி உச்சத்தில்.. இந்த நம்பர்தான் அடிக்கும்’</blockquote> <!--more-->

என்பவை, ஆவடி சுற்றுவட்டார ஆட்டோ ஓட்டுனர்கள், சைக்கிள் வியாபாரிகளின் முனங்கல் பேச்சு.

லாட்டரி என்பது அதிர்ஷ்டம் இல்லை; போதையும் இல்லை; அது ஒரு எண் விளையாட்டு என்கின்றனர் லாட்டரி பிரியர்கள். எங்கோ, யாரோ நிர்ணயிக்கும் வெற்றி இலக்கங்களுக்காக, எண் கணிதம், எண் ஜோதிடம், எண் கணக்கீடு என, ஒவ்வொரு நாளும் இன்னொரு உலகத்தில் பயணிக்கின்றனர்.

லாட்டரி தரும் போதையால், பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்தன. பலர் உயிரிழந்தனர். இதனால் கடந்த, 2002ம் ஆண்டு தமிழக அரசு லாட்டரி விற்பனைக்கு தடை விதித்தது.

ஆனால், மறைமுகமாக லாட்டரி விற்பனை நடந்து வருகிறது. இதற்கான ‘நெட்வொர்க்’ உள்ளூர் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடன் இன்றும் உயிர்ப்புடன்தான் இருக்கின்றன.

ஆவடி, புதிய ராணுவ சாலையில் உள்ள நேரு பஜார், கோவர்த்தனகிரி, ஓ.சி.எப்., சாலை (திரையரங்கம் அருகே), சேக்காடு உள்ளிட்ட இடங்களில், கேரள லாட்டரி, பூடான் லாட்டரி, மூன்று நம்பர் லாட்டரி விதவிதமாக லாட்டரி விற்பனை நடந்து வருகிறது.

வெள்ளை காகித எண்களை, 60 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை பணம் கொடுத்து வாங்கிச்செல்கின்றனர். கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப பரிசுத்தொகை அறிவிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு மூன்று முறை குலுக்கல் நடக்கிறது.

<!--more-->

வெள்ளைக்காகித, லாட்டரி மோகம் ஆவடி பகுதியினரிடையே அதிகரித்திருப்பதால் விற்பனை அமோகமாக நடக்கிறது. குலுக்கல் நேரங்களில் ஆட்டோஓட்டுனர்கள், சிறுவியாபாரிகள் மூன்று இலக்கங்களை மனதில் பூஜிக்கின்றனர்.

காலை 7:00 மணிக்கு லாட்டரி விற்பனை துவங்கி, இரவு 8:00 மணிக்கு நிறைவடைகிறது. பரிசுத்தொகையில், குறிப்பிட்ட அளவு, கமிஷன் பெற்றுக்கொண்டு, லாட்டரி ஏஜென்டுகள் பணமழையில் நனைகின்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கனமே பரிசு வழங்குகின்றனர். இணையதளத்தில் முடிவு, லாட்டரி எண்ணைப் பற்றிய ரகசிய விவாதம் என, லாட்டரி பிரியர்கள் எந்நேரமும் பரபரப்பாகவே உள்ளனர்.

அடித்தட்டு மக்களின் பொருளாதாரத்தை களவாடும், இந்த மறைமுக லாட்டரி விற்பனை நம் சமூகத்தின் மிகப்பெரிய சாபக்கேடாக மாறியுள்ளது. இதை தடுக்க காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.