தமிழில் தற்போது வரும் நூல்களைத் தாண்டி ஐரோப்பிய நூல்களையும் வாசிக்க வேண்டும். வெள்ளைக்காரர்கள் எதையும் நுணுக்கிப் பார்ப்பதில் வல்லவர்கள்.


பிளேட்டோ சொன்ன கருத்துக்களை, அவருடைய மாணவர் அரிஸ்டாட்டில் தூக்கி எறிந்தார். குரு சொன்னார் என்பதற்காக அவர் அப்படியே எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் இங்கு தலைவன் சொன்னால் மாற்றுக் கருத்தே இல்லை. எதிர் கருத்து இருந்தால் தான் கட்சியோ, சித்தாந்தமோ வளர்ச்சியடையும்.
ஆனால், இங்கு 500 உறுப்பினர்கள் கொண்ட பொதுக்குழுவில் ஏகமனதாக முடிவு எட்டப்படுகிறது. எப்படி முடியும்?., கணவன், மனைவி இருவருமே ஏகமனதாக முடிவெடுக்க முடிவதில்லை.
எதிர் கருத்துதான் தலைவனையும், அமைப்பையும் காப்பாற்றும். தலைவன் எப்படி சிறுநீர் கழிக்கிறானோ? அப்படி தான் தொண்டனும் சிறுநீர் கழிக்கிறான், என்றால் அந்த அமைப்பை எப்படி காப்பாற்ற முடியும்.
ஏவாள் கடவுளை எதிர்த்ததால்தான் இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு என வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது.
வெறும் இன்பத்தை மட்டும் நுகர்வது வாழ்க்கையா?. எதற்குமே எல்லை இருந்தால் தான் சுவாரசியம் இருக்கும். கிரிக்கெட்டில் கட்டுப்பாடில்லாமல் மட்டையால், பந்தை அடித்துக் கொண்டிருந்தால், பந்து பின்னால் ஓட வேண்டியதுதான்.
எதிர் கருத்து கொண்டிருப்பது தான் மனித இயல்பு. அதுதான் மனித சமுதாயத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும்.
இன்றைக்கு எது புகழ் என்று பலருக்கு தெரிவதில்லை. மட்டையால் பந்தை அடித்து 20 பணக்காரர்களில் ஒருவராக சச்சின் டெண்டுல்கர் வந்து விட்டார். அவரை முந்த டோனி, அவருக்கு பிறகு கோலி.
ஒரு காலத்தில் கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி. இன்று நயன்தாரா. இதற்கு பெயர் புகழ் அல்ல கவர்ச்சி . ஒன்றன் இடத்தை இன்னொன்று நிறைவு செய்வது புகழ் அல்ல.
வள்ளுவன், இளங்கோ, கம்பன், பெரியார் போன்றோர்களின் இடத்தை யாராலும் நிறைவு செய்ய முடியாது. அகற்ற முடியாத புகழ்தான் உண்மையானது.
அறிவு, கொடை, தியாகம், வீரத்தால் வருவது தான் புகழ்.

உன் சுற்றத்தில் யாருக்கும் தீங்கு, கேடு செய்யாமலிருப்பதே புகழ் தான் என்று தொல்காப்பியர் கூறுகிறார்.

இன்னைக்கு 'தியாகத் தலைவரே' என பேனர், தட்டி வைப்பதால் மட்டும் புகழ் வந்து விடும் என சிலர் நினைக்கின்றனர்.

ஆனால் அந்த தட்டி கீழே விழும் போது உன் தலைவனின் புகழும் விழுந்து விடுமே என அவர்கள் யோசிப்பதில்லை.

தினத்தந்தி, தினமணியில் 10 லட்ச ரூபாய்க்கு விளம்பரம் கொடுத்தால் புகழ் வந்துவிடுமா? அடுத்த நாள் கழிவுத் தாளாக தலைவனும் போய் விடுவான்.

ஒற்றை வரியில் ஒன்றை சொல்ல ஆசைப்படுகிறேன். காந்தி குறைவான இந்தியன். நிறைவான ஐரோப்பியன் என்பது தான் அது. அவர் உடையளவில் தான் இந்தியனாக இருந்தார். சித்தாந்த அடிப்படையில் ஐரோப்பியனாக இருந்தார். அதனால் தான் யுத்தமின்றி அவரால் ஐரோப்பிய வெள்ளையனை எதிர்க்க முடிந்தது. தோரோவின் 'சிவில் ஒபிடியன்ஸ்'ல் இருந்து மக்கள், ஒத்துழைக்காமல் இருந்தால் ஒரு அரசால் இயங்க முடியாது என்ற கருத்தை எடுத்துக் கொண்டார்.

ஜான் ராஸ்கின், டால்ஸ்டாய் போன்றோரின் தாக்கத்தால் தான் மகாத்மா உருவானார்.

ஆனால் இன்றைக்கு 'கிரீயேட்டிவ்' இலக்கியம் என்று பத்து பேர் சொல்லிக் கொண்டால் அது 'கிரீயேட்டிவ்' இலக்கியம் ஆகிவிடுமா?

தமிழில் எல்லாம் இருக்கிறது ஏன குப்பைகளையும் படிக்கக் கூடாது. ஆங்கிலத்தில் இருப்பதால் சிறந்த சித்தாந்தங்களை விட்டு விடக் கூடாது.

கிரேக்கத்தில் இருந்து மது வந்தது, யவன பெண்கள் வந்தார்கள் என சங்க கால இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த வேலையை சில ஆதீனங்கள் சத்தமில்லாமல் செய்கின்றன.

அன்றே பிளேட்டோ, அரிஸ்டாட்டில் அறிவை இறக்குமதி செய்யாததால், தமிழகம் 2100 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது.

- சென்னைப் புத்தகக் கண்காட்சியில் 6ம் நாள் நிகழ்வில் 'ஒரு சொல் கேளிர்' என்ற தலைப்பில் பழ.கருப்பையா பேசினார்.