(19.1.2018)

சென்னைப் புத்தகக் கண்காட்சியில்
கீழடி அகழ்வாராய்ச்சி மூன்று ஆண்டுகளாக பேசப்படுகிறது; விவாதிக்கப்படுகிறது.
அடுத்தக்கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் வருகிற திங்கட்கிழமை துவங்குவதாக தமிழக தொல்லியியல் துறை இயக்குனர் ஜெகன்நாதன் அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. சுதந்திரத்திற்கு பின் எவ்வளவோ அகழ்வாராய்ச்சிகள் நடந்துள்ளன. ஆனால் கீழடிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? 10 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட அகழ்வு குழிகள், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை நாம் பார்க்க உதவும் ஜன்னல்கள். 200 ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கத்திய ஆய்வாளர்கள் இந்தியாவிற்கு 500 ஆண்டுகள் வரலாறுதான் இருக்கும் என்றனர். 17, 18ம் நூற்றாண்டில் கிழக்கிந்திய கம்பெனி படை நகர்ந்து வரும் போது, இப்போதைய ஆப்கானிஸ்தானில், அந்த படைத்தளபதி ஒரு கல்வெட்டை கண்டான். அதிலிருந்து 400 கிலோ மீட்டர் கடந்த வந்த போது, தற்போதைய பாகிஸ்தானில் அதே கல்வெட்டை மீண்டும் பார்க்கிறான். அங்கிருந்து 500 கிலோ மீட்டர் தூரம் பல்வேறு யுத்தங்களுக்குப் பிறகு 1000 கிலோ மீட்டர் கடந்து சிந்து நதி, கங்கை நதிக்கரையில், அதே அடையாளங்களுடன் அந்த கல்வெட்டை காண்கிறான் அந்த படைத் தளபதி. அதுதான் அசோகரின் கல்வெட்டு; அதன் பின்புதான் இந்திய வரலாறு 2000 ஆண்டுகள் பழமையானது என மேற்கத்திய நாடுகள் ஒப்புக் கொண்டன. தஞ்சை பெரிய கோவிலை கட்டியது காடு வெட்டி சோழன் என்றார்கள் அங்குள்ள கிராமத்தினர். ஆங்கிலேயர் கல்வெட்டை ஆராய்ந்து அது, ராஜராஜசோழன் என்ற பிறகுதான், கோவிலின் வரலாறு தெரிந்தது. வரலாற்றை ஆராய, புதியவற்றை கண்டறிய நாம் முகம் கொடுக்க வேண்டும். வைகை நதிக்கரையில், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, தஞ்சை பல்கலை., தொல்லியியல் துறை மாணவர்கள் ஒரு நடுக்கல்லை கண்டெடுத்தனர்.

ஆய்வில், மாடு திருடியவர்களிடம், அந்த மாட்டை மீட்க உயிரை விட்ட வீரனின் நினைவாக வைக்கப்பட்டுள்ளதும், அந்த வீரனின் பெயர் அந்துவன் என்பதும், அந்த எழுத்து கி.மு. 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் 'பிராமி' என்பதும் தெரிய வந்தது.

அசோகர் காலத்திய கல்வெட்டு இந்தியாவின் வரலாறை கூறுகிறது. ஆனால் அந்துவன் என்ற சொல் 200 நூற்றாண்டிற்கு முந்தைய தமிழகத்தின் வரலாற்றை கூறுகிறது.

உலகளவில் ஒரு லட்சம் கல்வெட்டுகள் உள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் 65 ஆயிரம் கல்வெட்டுகள் உள்ளன. இதில் 45 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழி சார்ந்து உள்ளன.

தமிழகத்தில் எழுத்துக்களால் எழுதப்பட்ட சங்க காலத்திய பானை ஓடுகளும் உள்ளன. கல்வெட்டில் எழுதி இருந்தால் மன்னனாக இருக்கலாம். ஆனால் பானை ஓட்டில் எழுதியது யார்? சங்க காலத்தில் ஆறு இடங்களில்தான் பானையை ஆண் எடுப்பதாக வருகிறது. அதில் ஒன்று தான் கல் குடிப்பது. பெண் கல்வியில் இந்தச் சமூகம் எத்தனை உயர்ந்தது என்றால், 2000 ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட இல்லை என வரலாறு கூறுகிறது. கிரேக்கத்தில் ஏழு பெண் எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் சங்க காலத்திலேயே 43 பெண் எழுத்தாளர்களை கொண்ட ஒரே மொழி நம் மொழி. இதனுடன் பனை ஓடுகளில் எழுதப்பட்ட எழுத்துக்களையும் பொருத்தி பார்க்க வேண்டும்.

இதிலிருந்து இங்கே தொல்லியியல் ஆய்வு முடக்கப்பட்டதன் நுட்பத்தை அறிய வேண்டும். தொல்லியல் துறையின் அமர்நாத் ராமகிருஷ்ணன் குழு, கீழடிக்கு முன்பே, வைகை நதியின் 240 கிலோ மீட்டர் தூரத்தை ஆய்வுக்கு உட்படுத்தப்படுத்தியது. நதியின் இருகரையோரங்களிலும் தலா ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 490 கிராமங்களில், 2000 வருட பழமையான வரலாற்று எச்சங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

2015 நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட புயல், மழையில் வைகை நதிக்கரையில் தேனூர் என்ற கிராமத்தில் இருந்த பழமையான ஆழமரம் விழுந்தது. ஊரே வேடிக்கைப் பார்த்தது. ஆலமரத்தின் தூர் பகுதியில் இருந்த பழமையான மண் பானையை எடுத்த சிறுவர்கள், உருட்டி விளையாடினர். அப்போது அந்த பானை உடைந்ததில் ஒரு விரலளவு தங்கக் கட்டிகள் ஏழு இருந்தது தெரிய வந்தது. அடுத்த கணமே ஆளாளுக்கு ஏதாவது கிடைக்காதா என்ற ஆசையில் மரக்கிளை முதற்கொண்டு முறித்து எடுத்துச் சென்றனர். அன்று இரவு 10.30 மணிக்கு மொத்த போலீசும் ஊருக்குள் சென்றது. 11.00 மணிக்கு மொத்த ஊரும் சிறைக்குள் சென்றது. அடுத்த நாள் காலை ஏழு தங்கக் கட்டிகள் மட்டும் கிடைத்ததாக போலீஸ் தெரிவித்தது. நாமும் அதையே நம்புவோம். அந்த தங்கக் கட்டிகளை அமர்நாத் ராமகிருஷ்ணன் குழு ஆய்வு செய்த போது ஆச்சரியமான தகவல்கள் கிடைத்தன. அந்த ஏழு தங்கக் கட்டிகளிலும் 2000 ஆண்டுகள் முந்தைய பிராமி எழுத்துகளால் ஒரே பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஏகோதி கோதை என்ற பெண்ணின் பெயர்.

அன்று தான், மதுரையின் தேனூர் கிராமத்தில் தமிழின் முதல் சொல் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் வரலாறாக கங்கைக் கரையை எழுதுகிறவர்கள் ஏனோ தென்னகத்தை எழுத மறுக்கிறார்கள்.

வைகை நதி கடலில் கலக்கும் இடமான அழகன்குளத்தில் பானை ஒட்டில் வரையப்பட்ட கிரேக்க கப்பல் ஓவியம் கிடைத்தது. அழகன்குளம் பெயரை எங்கோ கேள்வி பட்டிருக்கிறோமே என்ற ஐரோப்பியர்கள், வரலாற்று ஆய்வாளர் தாலமி குறிப்புகளில் அருகுறு துறைமுகம் உள்ளது என்றனர். இத்தனை இருந்தும் இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுத அவர்களுக்கு மனமில்லை. வட இந்தியாவில் இருப்பது போன்ற நகர நாகரிகம் தமிழதத்தில் இல்லை என்கிறார்கள். சங்க இலக்கியத்தை மட்டும் ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என்கிறார்கள்.</blockquote> என, வரலாற்று எழுத்தாளர் வெங்கடேசன் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பேசினார்.

Youtube

Shruti TV

கீழடி