திருக்குறளை துவக்கப்பள்ளியில் ஆரம்பித்து, அதனால் ஈர்க்கப்பட்டு, அதில் இரண்டு முனைவர் பட்டம் பெறும் வரை தாக்கத்தை ஏற்படுத்தியது. திருக்குறளுக்கு யார் யாரோ உரை எழுதுகிறார்கள். ஆனால் நாம்தான், நமக்கான உரையை எழுத வேண்டும்.

கலீல் ஜிப்ரான் எழுதிய ‘சேன் அன்ட் போம்’ என்ற நுாலில் சின்னச் சின்ன கருத்துக்கள் தொகுக்கப்பட்டிருக்கும். அதில்,

‘‘தாயின் இதயத்தில் மவுனமாக இருக்கிற பாடல்

குழந்தையின், இதழில் உச்சரிக்கப்படுகிறது’’

இதைத்தான், கவிஞர், ‘நான் பேச நினைப்பதெல்லாம், நீ பேச வேண்டும்’ என்கிறார். மகாத்தான மனிதர்கள் ஒரே மாதிரி சிந்திப்பார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

கலீல் ஜிப்ரான், அவரது புத்தகங்களுக்கு அவரே ஓவியங்களை வரைந்திருப்பார். அந்த ஓவியங்கள் அனைத்துமே நிர்வாணமாக இருக்கும். நிர்வாணம் வேறு; அம்மணம் வேறு; நிர்வாணம் உடலை கடப்பது; அம்மணம் உடலை காட்டுவது. இப்படி ஓவியங்கள் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். அவர் சொற்களில் காட்டியிருக்கும் மேன்மை, படிக்க படிக்க ஆர்வத்தை ஏற்படுத்தும்.

இப்படி வாசிப்பதன் மூலம் நான் தொடர்ந்து விரிவடைகிறேன். படிப்பதும், பகர்வதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஏனென்றால், அதன் மூலம் என்னை நான் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறேன். நம்மை செதுக்குவதற்காகத்தான் புத்தகங்கள். நம்மை நாமே செதுக்குவதன் மூலம், நாம், நமக்கு மட்டுமல்ல இந்த சமுதாயத்திற்கும் பயனுள்ளவர்களாக மாறுவோம்.

- 41வது புத்தகக் காட்சியில் புள்ளியியல் துறை ஆணையர் வெ.இறையன்பு, ‘என்னைச் செதுக்கிய நுால்கள்’ என்ற தலைப்பில் பேசினார்.