இந்த நிறுவனத்தின் வளர்ச்சியையும், எதிர்காலத்தையும் பற்றி யோசிக்க முடிந்த என்னால் என்னுடைய எதிர்காலத்தைப் பற்றி நினைத்ததே இல்லை. என்னையும் என் குடும்பத்தையும் விட இந்த வேலைக்கும், நிறுவனத்துக்கும் நான் செலவிட்ட நேரம் அதிகம்.

<!--more-->

எனது வாழ்க்கைப் பயணத்தின் பெரும் பகுதியை கழித்தது இங்குதான். இதற்குப் பிறகு இங்கு வரப்போவதில்லை. வந்தாலும் இந்த நிறுவனத்துக்கும், இங்கிருக்கும் நான் பயன்படுத்திய கணினி, நாற்காலிக்கும் நான் அந்நியன் தான். வேலையின் மிக நெருக்கடியானச் சூழலை சமாளித்த என்னால் இனி எனது அன்றாட வேலை இதுவல்ல என்று தெரிந்த பின்பு, நான் முதன் முறையாக எதிர்கொள்ளும் இந்த வித்தியாசமான சூழலை சமாளிக்க மனம் இன்னும் தயாராகவில்லையோ என்று தோன்றுகிறது. எனக்கு இன்னும் 5 வருடங்களுக்கு இங்கே வேலை இருக்கிறது. அதற்குள் எனக்கு வயதாகிவிட்டது என்கிறது. இந்த நிறுவனம். என்னை விட மூத்தவர்களுக்கு ஆகாத வயது எனக்கு ஆகிவிட்டது, இந்த கருமம் பிடிக்காத வயது.

எனது உதவி என்னுடைய குடும்பத்திற்கு தேவைபடும் போதே, நான் செய்யும் உதவிகளுக்கு நன்றி என்றது இந்த நிறுவனம். ஒருபோதும் நிறுவனத்திற்கு எதிராக போர்கொடி தூக்காத நான் இந்த முறையும் ஏற்றுக்கொண்டேன் மேலிடத்து உத்தரவை.

ஒரு மனிதனுக்கு அவன் செய்யும் வேலைதான் அவனுக்கு அடையாளம். எனக்கு, அடையாளமற்று இருப்பது என்பது புதிதல்ல இதற்கு முன்பு அடையாளத்தோடு இங்கே வரவில்லை. இருந்தும் தினம் தினம் வார்த்தைகளோடு விளையாடிய எனக்கு உங்கள் முன் அலுவல் சார்ந்த இந்த இறுதி பேச்சு பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை.

இங்கிருக்கும் அனைத்தையும் விட இந்த தொழிலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாலும், என் உயிரை விட அதிகமாக நேசித்ததாலும் விட்டுச்செல்ல மனம் வரவில்லை. இருந்தும் விடைபெறுகிறேன் நான் நேசித்த இந்த நிறுவனத்திற்காக…….. திட்டமிடாத எனது ஒய்வு காலத்திற்காக……

பரபரப்பான நிகழ்வுகளுக்கு மத்தியில் வாழ்ந்த எனக்கு அமைதியான ஓய்வு காலம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை…. விவரிக்க முடியாத உணர்ச்சி பெருக்குடன் என்னுடைய அடுத்த பயணம் தொடங்குகிறது…”

படம்: தடாகம்