நம்பிக்கைகள் அனைத்தும் சுக்குநூறாக உடையும்போது, ஓர் எளிய மனிதனுக்குக் கடைசிப் புகலிடமாகத் தெரிவது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தான். எப்படியாவது நீதி கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தில் கைகளில் ஒரு காகிதத்தை ஏந்திக்கொண்டு நிற்கும் அந்த மக்களின் கண்ணீருக்குப் பின்னணியில் சொல்ல முடியாத வலிகள் புதைந்து கிடக்கின்றன. ஆனால், தங்களின் வலியைத் தீர்க்க வேண்டிய அதிகாரத்தின் கதவுகள் நீண்ட நாட்களாகத் திறக்கப்படாமல் இருக்கும்போது, நீதிக்காக எழுதப்பட்ட அந்தக் காகிதமே அவர்களின் இறுதிச் சடங்கிற்கான தீப்பந்தமாக மாறுகிறது என்பதை நம்மால் எப்படிச் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியும்? ஒரு சாமானியன் தன் நியாயத்திற்காக எத்தனை ஆண்டுகள் தான் காத்துக்கிடக்க முடியும் என்ற கேள்வியை நெஞ்சில் அறையும்படி, நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய இரண்டு தீக்குளிப்பு முயற்சிகள் ஒட்டுமொத்த நிர்வாகத்தின் செயல் திறன் மீதான கண்ணோட்டத்தையே பெரும் அதிர்ச்சியோடு கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.
அம்பாசமுத்திரம் தாலுகா, கோயில்குளம், 33 ஏ மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி மகன் சங்கர் (37) என்பவரை கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி கல்லிடைக்குறிச்சி போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குச் செலுத்தப்பட்ட ஓர் ஊசி, அவரது உடல்நிலையை மோசமாகப் பாதித்தது. கடந்த 8 ஆண்டுகளாக நீதிக்காகப் போராடி வரும் அவர், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி கடந்த ஜூலை 20ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளித்தார். தனது உடல்நிலை நாள்தோறும் மோசமடைந்து வருவதால் தனக்கு நீதி வழங்கத் தவறினால், தனது 4 குழந்தைகள் மற்றும் மனைவி உட்பட மொத்தம் 6 பேரையும் கருணைக் கொலை செய்ய ஆட்சியர் அனுமதி அளிக்க வேண்டும் என அந்த மனுவில் அவர் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார். ஆனால், மனு அளித்து 28 நாட்கள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விரக்தியடைந்த சங்கர், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின்போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். உடனடியாக இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையிலான போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தி, கேனைப் பறிமுதல் செய்தனர். தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் சுரேஷ்குமார் விரைந்து செயல்பட்டு சங்கரின் உடலில் தண்ணீரை ஊற்றிப் பெரும் விபரீதத்தைத் தடுத்து நிறுத்தினார்.
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் அதே நாளில், களக்காடு அருகேயுள்ள டோனாவூரைச் சேர்ந்த நாகமாரி (42) என்பவர் இதேபோன்று தீக்குளிக்க முயன்றார். நாகமாரியின் தந்தைக்குச் சொந்தமான பூர்வீக வீடு அப்பகுதியில் உள்ளது. தந்தை இறந்து விட்ட நிலையில், அந்த வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு நாகமாரி விண்ணப்பித்துள்ளார். ஆனால், அந்த வீடு புறம்போக்கு நிலத்தில் இருப்பதாகக் கூறி அவருக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து கணவன், மனைவி இருவரும் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். கணவர் ஐகோர்ட் மகாராஜா மனு அளிக்க உள்ளே சென்ற நிலையில், கலெக்டர் அலுவலகப் போர்டிகோவில் காத்து நின்றுகொண்டிருந்த அவரது மனைவி நாகமாரி, திடீரென மனமுடைந்து மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். அவரையும் அங்கிருந்த போலீசார் துரிதமாகச் செயல்பட்டுத் தடுத்து நிறுத்தி மீட்டனர்.
ஒரே வளாகத்தில், ஒரே நாளில் அரங்கேறிய இந்த இரண்டு தற்கொலை முயற்சிகளும் தனித்தனி நிகழ்வுகள் அல்ல; மாறாக அதிகாரத்தின் அலட்சியத்தால் ஒரு சாமானியனுக்கு ஏற்படும் மன அழுத்தத்தின் உச்சகட்ட வெளிப்பாடு. குறைதீர்க்கும் கூட்டங்களில் வரப்பெறும் மனுக்கள் மீது அதிகபட்சம் 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி இறுதி முடிவை மனுதாரருக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாயக் காலக்கெடுவை நிர்ணயித்தால் மட்டுமே இதுபோன்ற உயிர்ப்பலிகளைத் தடுத்து நிறுத்த முடியும். இருண்ட அறையில் வெளிச்சம் தேடி ஆட்சியர் அலுவலகப் படியேறும் மக்களின் கோரிக்கைகள் வெறும் காகிதங்களாகப் பார்க்கப்படாமல், உயிரின் ஒலிகளாக மதிக்கப்படும் நாள் எப்போது வரும்?