சிறப்புக் கட்டுரை

வளர்ச்சி என்ற பெயரில் பாறைகளுக்குள் நசுங்கும் உயிர்கள்

அதிகாரத்தின் மௌனத்தை உடைக்குமா இந்த மரண ஓலங்கள்?

நகரத்தில் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கும் ஒரு புதிய கட்டிடத்தைப் பார்த்தபோது, அதன் அஸ்திவாரத்தில் உள்ள ஜல்லிக்கற்கள் ஏனோ என் மனதை உறுத்தின. நாம் காணும் இந்த வளர்ச்சிக்கு எங்கோ ஒரு கிராமம் தன் மூச்சைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மை நெஞ்சை அடைக்கிறது. நெல்லை இருக்கன்துறை அருகே சுச்சிகுளம் கிராமத்தில் உள்ள வீடுகள், இந்த கல் குவாரிகளின் வெடிச்சத்தத்தால் அதிர்ந்து, சுவர்களில் பிளவுகள் ஏற்பட்டு நிற்கின்றன என்பதை அறப்போர் இயக்கத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. நாம் வீடுகளைக் கட்டுவதற்காக, அவர்கள் தங்கள் வீடுகளை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்ற முரண் எவ்வளவு கொடியது?

கட்டிடங்கள் எழுவது வளர்ச்சி என்று சொல்கிறார்கள்; ஆனால் உண்மையில் அது உழைக்கும் மக்களின் உயிர்களைச் சுரண்டும் ஒரு மரண வியாபாரமாகவே மாறிவிட்டது. சத்யா (23) என்ற இளம்பெண் தன் குழந்தையுடனும் சகோதரனுடனும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த கனரக லாரியின் சக்கரம் அவளது தலையை நசுக்கி கொடூரமாகக் கொன்றிருக்கிறது. காவல்கிணறு சந்திப்பில் அதிகாலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த அமிர்தையா (64) என்ற முதியவர், 16 சக்கரங்களைக் கொண்ட குவாரி லாரியால் அடிபட்டு அதே இடத்தில் பலியாகியுள்ளார்.

யாருக்கும் தெரியாமல், யாரும் கேட்காமல் அந்தப் சாலைகளில் சிந்தப்பட்ட இந்த ரத்தத் துளிகளுக்கு யார் பதில் சொல்வது? இதைச் சாதாரணமாக ஒரு விபத்து என்று நம்மால் கடந்து செல்ல முடியுமா?

பாதுகாப்பு வேலியற்ற, கைவிடப்பட்ட ஒரு குவாரிக் குழியில் தவறி விழுந்து, ஒரு சிறுமி (15) அகால மரணமடைந்துள்ளாள். அந்தப் பிஞ்சு முகம் தன் கைபேசித் திரையில் கடைசியாக என்ன கனவுகளைப் பார்த்ததோ, இன்று அவள் உடல் மர்மமான முறையில் அந்தக் குட்டைக்குள் மிதக்கிறது; இந்த குழிகள் கொலை செய்யப்பட்ட உடல்களை வீசும் இடமாகவும் மாறியுள்ளன என்பது எவ்வளவு பெரிய அதிர்ச்சி. தன்னந்தனியாக அந்த சிறுமி அந்தக் குழிக்குள் விழுந்தபோது எவ்வளவு கண்ணீர் வடித்திருப்பாள் என்பதை நினைத்தால் நெஞ்சம் பதைபதைக்கிறது.

இயற்கையின் சமநிலையும் இங்கு கொடூரமாகச் சிதைக்கப்பட்டுள்ளது. தென்காசி, ஆனைக்குளம் கிராமத்தில் ஒரு விவசாயி முன்பு ஆண்டுக்கு மூன்று போகம் விளைச்சல் கண்டார். ஆனால் இன்று குவாரிகளில் உள்ள ராட்சத மோட்டார்கள் நிலத்தடி நீரை முழுவதுமாக உறிஞ்சிவிடுவதால், அவரால் ஒரு போகம் மட்டுமே விவசாயம் செய்ய முடிகிறது. நெற்பயிர்களை நாசம் செய்யும் எலிகளைப் பிடித்துத் தின்று விவசாயிகளைக் காப்பாற்றி வந்த கழுகுகள், இப்போது குவாரிகளின் தொடர் வெடிச்சத்தத்தால் அந்தப் பகுதியை விட்டே அகன்றுவிட்டன. காவல் காக்கும் கழுகுகள் விரட்டப்பட்டு, பயிர்களை அழிக்கும் எலிகள் பெருகிவிட்டன; அதுமட்டுமில்லாமல் நெல்லை மாவட்டத்தில் இந்த குவாரிகள் சுமார் ரூ.700 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என அறிக்கையில் அறப்போர் இயக்கத்தினர் சுட்டிக்காட்டி உள்ளனர். இது நம் சமூகத்தின் தற்போதைய அவல நிலையை அச்சு அசலாகப் பிரதிபலிக்கவில்லையா?

யாருக்கும் தெரியாத இந்த மக்களின் கண்ணீரை உலகிற்குத் தெரியப்படுத்த, அறப்போர் இயக்கம் கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி நெல்லையில் ஒரு சுதந்திரமான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தியது. ஆனால், அங்கும் உண்மை பேச அனுமதிக்கப்படவில்லை. குவாரி உரிமையாளர்களின் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு வந்த ஒரு கும்பல், போலீசார் கண்முன்பாகவே நாற்காலிகளை வீசி இந்தக் கூட்டத்தை வன்முறையால் தடுத்து நிறுத்தியதுடன், குழுவின் தலைவரான வி. சுரேஷ் அவர்களைத் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தியது. ஒரு பொது மேடையிலேயே இவர்கள் இவ்வளவு வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள் என்றால், யாருமற்ற கிராமங்களில் அதிகாரமும் பணமும் இல்லாத அந்த அப்பாவி மக்களிடம் இவர்கள் எவ்வளவு கொடூரமாக நடந்து கொள்வார்கள்? இருண்ட குவாரிகளுக்குள் புதைக்கப்பட்ட இவர்களின் நியாயமான கேள்விகளுக்கு, என்றாவது ஒருநாள் விடிவு காலம் பிறக்குமா?

MUTHU VIEWS | சிறப்புக் கட்டுரை