'நமக்கு இதெல்லாம் நடக்காது' என்ற அலட்சியம் யாருக்கும் வேண்டாம். நன்றாகப் படித்தவர்கள், உயர்ந்த பதவியில் இருந்தவர்கள் கூட இப்போது சைபர் மோசடி வலையில் மிக எளிதாக சிக்கி விடுகிறார்கள்.
 நெல்லையில் நடந்துள்ள ஒரு நூதன மோசடி சம்பவம், ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
நெல்லை பெருமாள்புரம் பகுதியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற துணை கலெக்டர் விஜயா என்பவருக்கு, சில தினங்களுக்கு முன்பு ஒரு மர்ம நபர் போன் செய்தார். தன்னை அரசு வங்கியின் பென்சன் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், பென்சன் கார்டு தருவதாக ஆசை வார்த்தை கூறினார். அதற்காக விஜயாவின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஒரு லிங்க் அனுப்பினார். அந்த லிங்கை கிளிக் செய்தவுடன் வங்கி விவரங்களை கேட்கும் பக்கம் திரையில் தோன்றியது. சற்று உஷாரான விஜயா, தனது விவரங்களை பதிவு செய்யாமல் அந்தப் பக்கத்தை உடனே மூடிவிட்டார். ஆனால், அந்த லிங்கை தொட்டதற்காக அவர் கொடுத்த விலை 14 லட்சத்து 11 ஆயிரத்து 999 ரூபாய்.

விஜயா எந்த வங்கி விவரத்தையும் அந்தப் பக்கத்தில் பதிவு செய்யவில்லை. ஆனாலும், அந்த லிங்கை கிளிக் செய்தபோதே மோசடி கும்பல் அவரது செல்போனை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக அடுத்த நாளே அவரது சிம் கார்டு திடீரென முடங்கியது. மொபைல் நெட்வொர்க் இல்லாத இந்த நேரத்தை பயன்படுத்தி, விஜயாவின் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகளில் இருந்து ஒட்டுமொத்த பணத்தையும் மர்ம நபர்கள் சுருட்டிவிட்டனர். தற்போது இந்த நூதன மோசடி குறித்து நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசார், இன்ஸ்பெக்டர் அனிதா, எஸ்ஐ சுவாதிகா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த செய்தி நமக்கு உணர்த்தும் பாடம் மிகவும் முக்கியமானது. வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் என எதில் வந்தாலும், அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் எந்தவொரு லிங்கையும் தவறுதலாகக் கூட கிளிக் செய்ய வேண்டாம். எந்தவொரு வங்கியோ, அரசு துறையோ பென்சன் கார்டு, கேஒய்சி அப்டேட் என கூறி உங்களுக்கு வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்ப மாட்டார்கள் என்பதை ஆணித்தரமாக நம்புங்கள். உங்கள் மொபைல் நெட்வொர்க் திடீரென முடங்கினால், அதை சாதாரணமாக நினைக்க வேண்டாம். உடனடியாக உங்கள் வங்கி கணக்குகளில் இருந்து பணம் பரிமாற்றம் செய்ய முடியாதபடி தற்காலிகமாக முடக்கிவிட்டு, அதன் பிறகு சம்பந்தப்பட்ட சேவை நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரிக்க வேண்டும்.

தொழில்நுட்பம் வளர வளர திருடர்களும் புதிய நூதன வழிகளைக் கண்டுபிடித்து வருகிறார்கள். நமது தனிப்பட்ட விழிப்புணர்வு மட்டுமே நாம் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை காப்பாற்றும் அரணாக இருக்கும். ஒருவேளை ஏதேனும் மோசடி வலையில் சிக்கிவிட்டால், சற்றும் பதற்றப்படாமல் உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளியுங்கள். சைபர் குற்றங்களை பொறுத்தவரை முதல் சில மணி நேரங்கள் மிகவும் முக்கியமானவை. இந்த விழிப்புணர்வு தகவலை உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் வீட்டில் உள்ள முதியவர்களிடம் பகிர்ந்து அவர்களை எச்சரியுங்கள்.