இந்த செய்தியும் ஒரு ஆழமான தேடலின் விளைவுதான் என்பது மேற்கண்ட செய்தியைப் பார்க்கும்போது இது உங்களுக்குப் புரியும்.
தொடக்கத்தில், சமூக வலைதளத்தில் அரிவாளுடன் வீடியோ வெளியிட்டதற்காக ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார் என்ற ஒற்றை வரித் தகவல்தான் எஸ்பி அலுவலகத்தில் இருந்து கிடைத்தது. ஆனால், அந்தத் தகவலை மட்டும் வைத்துக்கொண்டு செய்தியை சுருக்கமாக முடித்துவிட மனமில்லை. களத்தில் இறங்கி சோர்ஸிடம் விசாரித்து, தரவுகளைத் திரட்டியபோதுதான் இதன் பின்னணியில் உள்ள நிஜமான அபாயம் வெளிச்சத்திற்கு வந்தது.

இது வெறும் ஒரு சாதாரண இன்ஸ்டாகிராம் பதிவு மட்டுமில்லை; சாதிப் பெயரைக் குறிப்பிட்டு, வன்முறையைத் தூண்டும் திரைப்பட வசனங்கள் மற்றும் பாடல்களோடு அந்த வீடியோ உருவாக்கப்பட்டிருக்கிறது. 18 வயதேயான கார்த்திக்குமார் என்ற இளைஞரும், அவருடன் மேலும் சிலரும் சேர்ந்து இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர். சமூக அமைதியைக் கெடுக்கும் நோக்கில் செயல்பட்டதற்காக ஆயுதச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த ஒரு சம்பவத்தைத் தாண்டி, நெல்லை மாவட்டத்தில் மட்டும் கடந்த 6 மாதங்களில் இதுபோன்ற வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளைச் செய்த 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மையும் முடிவில் செய்தியாக மாறியது.

நெல்லை களத்தில் பல ஆண்டுகளாக செய்திகளைச் சேகரித்து வந்தாலும், இதுபோன்ற செய்திகளை எழுதும்போது மனதிற்குள் பல கேள்விகளும் வலிகளும் எழுகின்றன. இளைய சமுதாயம் சமூக வலைதளங்களில் சாதிப் பெருமை என்ற மாயையில் சிக்கி, தங்கள் எதிர்காலத்தையே அழித்துக்கொள்வது வேதனை அளிக்கிறது.

இருந்தாலும், சமூக அமைதியைச் சீர்குலைக்கும் இந்தப் போக்குகளைத் தடுத்து நிறுத்த, நெல்லை மாவட்ட போலீசார் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஒரு பத்திரிகையாளனின் கடமை. அதற்காகவே எவ்வளவு தடைகள் வந்தாலும், உண்மையை அதன் வீரியம் குறையாமல் தொடர்ந்து பதிவு செய்வேன். இந்தச் செய்தியும் அந்தப் பயணத்தின் ஒரு சாட்சிதான்.